Published : 25 Feb 2024 04:02 PM
Last Updated : 25 Feb 2024 04:02 PM
மேட்டூர்: தமிழக - கர்நாடக எல்லையில் உள்ள பாலாறு, தண்ணீரின்றி வறண்டு மணல் திட்டுகளாக காட்சியளிக்கிறது.
தமிழக - கர்நாடக எல்லையில் காவிரியின் துணை நதியான பாலாறு அமைந்துள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்யும் போது, பாலாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, வெள்ள நீர் அடிப்பாலாறு என்ற இடத்தில் கலப்பது வழக்கமாகும். குறிப்பாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதியான தாமரைக் கரை, தட்டக்கரை, பர்கூர், அந்தியூர் வனப் பகுதியில் பெய்யும் மழை, மேட்டூர் அணைக்கு நீர் ஆதாரமாகவும் இருந்து வருகிறது.
இந்நிலையில் மேற்கு தொடர்ச்சி மலையில் மழை குறைந்ததால் பாலாற்றில் கசிவு நீர் மட்டுமே வந்து கொண்டிருந்தது. இந்நிலையில் நீர்வரத்து முற்றிலுமாக நின்று தண்ணீரின்றி வறண்டு மணல் திட்டுகளாக பாலாறு காட்சியளிக்கிறது. ஆற்றையொட்டி சேலம், ஈரோடு மற்றும் கர்நாடக மாநில வனப்பகுதிகள் உள்ளன. இந்த வனப்பகுதியில் யானைகள், மான்கள், காட்டெருமைகள், கரடிகள், மயில்கள் உள்ளிட்ட விலங்குகள் மற்றும் பறவைகள் உள்ளன. இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து உணவு மற்றும் தண்ணீர் தேடி விலங்குகள் வெளியே வர தொடங்கியுள்ளன.
குறிப்பாக யானை, மான் உள்ளிட்ட வனவிலங்குகள் தண்ணீர் தேடி பாலாறு பகுதிக்கு கடந்த சில நாட்களாக வருகின்றன. தற்போது, தண்ணீரின்றி பாலாறு காட்சி யளிப்பதால், உணவு மற்றும் தண்ணீர் தேடி ஆற்றையொட்டியுள்ள கோவிந்தப் பாடி, செட்டிப் பட்டி, காரைக்காடு, வனத்தையொட்டியுள்ள எல்லையோர கிராமங்களான தார்க்காடு, தண்டா, நீதிபுரம், லக்கம்பட்டி, மேட்டுக்கோட்டை உள்ளிட்ட பகுதிகளில் வன விலங்குகள் நுழைய வாய்ப்புகள் அதிகமுள்ளன. எனவே, வனத்துறை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளை மேற்கொள்ள வேண்டும், என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது குறித்து பொதுமக்கள் கூறியதாவது: நடப்பாண்டில் கோடைக்கு முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளது. இதனால் வனப் பகுதியில் இருந்து வனவிலங்குகள் எல்லையோர கிராமத்துக்கு வந்து செல்கின்றன. கடந்த சில நாட்களாக யானை நடமாட்டமும் உள்ளது. எனவே, கிராமத்துக்குள் வனவிலங்குகள் நுழைவதைத் தடுக்க ரோந்துப் பணிகளை வனத்துறை மேற்கொள்ள வேண்டும். மேலும், வனப்பகுதியில் உள்ள கசிவுநீர் குட்டை பகுதியில் தண்ணீர் நிரப்ப வேண்டும், என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment