Published : 17 Feb 2024 08:27 AM
Last Updated : 17 Feb 2024 08:27 AM

பழவேற்காடு ஏரிக்கு வலசை வந்த 500-க்கும் மேற்பட்ட அரிய வகை தட்டைவாயன் வாத்துகள் உயிரிழப்பு

உயிரிழந்த தட்டைவாயன் வாத்து. | படம்: பி.ஜோதிராமலிங்கம் |

பொன்னேரி: திருவள்ளூர் மாவட்டத்தில் முக்கிய சுற்றுலா தலமாக பழவேற்காடு ஏரி விளங்குகிறது. தற்போது சீசன் என்பதால் பறவைகள் இங்கு வலசை வந்துள்ளன. சுமார் 10 ஆயிரம் எண்ணிக்கையில் வலசை வந்துள்ள பிளமிங்கோ, உள்ளான் உள்ளிட்ட பறவை வகைகளில் ஒன்று தட்டைவாயன் (Northern shovellers) வாத்து. அரிய வகையான இந்த வாத்து, முதல் முறையாக பிப்ரவரி தொடக்கத்தில்தான் பழவேற்காடு ஏரிக்கு வலசை வந்துள்ளதாக பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

அவ்வாறு வலசை வந்துள்ள இந்த தட்டைவாயன் வாத்துகள், பழவேற்காடு ஏரியில், அண்ணாமலைச்சேரியை ஒட்டிய பகுதிகளில் சுமார் 2 ஆயிரம் எண்ணிக்கையில் காணப்படுகின்றன. இதில், சுமார் 500-க்கும் மேற்பட்ட வாத்துகள் கடந்த ஒரு வாரத்தில், திடீரென மயங்கி உயிரிழந்துள்ளன. இதுகுறித்து, தகவலறிந்த மக்கள் இறைச்சிக்காக அள்ளிச் சென்றுள்ளனர்.

பழவேற்காடு ஏரியை ஒட்டியுள்ள பகுதிகளில் உள்ள இறால் பண்ணைகள் மற்றும் விவசாய நிலங்களில் இருந்து வெளியேறும் யூரியா போன்ற ரசாயனம் கலந்த நீரால் தட்டைவாயன் வாத்துகள் உயிரிழந்திருக்க வாய்ப்புள்ளது என, மீனவர்கள் மற்றும் பறவை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால், வனத்துறை அதிகாரிகளோ, “பழவேற்காடு ஏரிக்கு இதுவரை வலசை வந்த பறவைகள் உயிரிழந்தது கிடையாது. ஆனால், தற்போது தட்டைவாயன் வாத்துகள் உயிரிழந்துள்ளன. பழவேற்காடு ஏரியில், அண்ணாமலைச்சேரியை ஒட்டியுள்ள பகுதிகளில் உயிரிழந்துள்ள இந்த தட்டைவாயன் வாத்துகளின் எண்ணிக்கை சுமார் 60 தான்.

அவ்வாறு உயிரிழந்துள்ள வாத்துகளில் பெரும்பாலானவை அழுகிய நிலையில் மீட்கப்பட்டன. அவ்வாறு மீட்கப்பட்ட வாத்துகளில் கணிசமான வாத்துகளின் உடல்களை மண்ணில் புதைத்து விட்டோம். இந்த வாத்துகள் உயிரிழப்புக்கு காரணம் என்ன என்பதை அறிய, 5 வாத்துகளின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக சென்னை - தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், சென்னை, வேப்பேரியில் கால்நடை மருத்துவக் கல்லூரி, திருப்பாலைவனம் கால்நடை மருத்துவமனை ஆகியவற்றுக்கு அனுப்பியுள்ளோம்.

பிரேத பரிசோதனை அறிக்கைகள் வந்த பிறகுதான், உயிரிழப்புக்கான காரணம் தெரிய வரும். மேலும், கடந்த இரு நாட்களாக பழவேற்காடு ஏரி பகுதியில் வாத்துகள் உயிரிழக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது” என தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x