Last Updated : 13 Feb, 2024 03:57 PM

 

Published : 13 Feb 2024 03:57 PM
Last Updated : 13 Feb 2024 03:57 PM

நீர்நிலைகள் நிரம்பியதால் தேர்த்தங்கல் சரணாலயத்துக்கு வலசை வந்த வெளிநாட்டு பறவைகள்

தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் கூட்டம் கூட்டமாக வலசை வந்துள்ள பறவைகள்.

ராமநாதபுரம்: தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்துக்கு வெளிநாட்டிலிருந்தும் மற்றும் இடம்பெயர்ந்தும் கூட்டம் கூட்டமாக பறவைகள் வலசை வந்து கூடுகட்டி வாழ்கின்றன.

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடலாடி வட்டத்தில் மேலச்செல்வனூர் மற்றும் கீழச்செல்வனூர், முதுகுளத்தூர் அருகே சித்திரங்குடி, காஞ்சிரங்குளம், பரமக்குடி வட்டத்தில் தேர்த்தங்கல், ராமநாதபுரம் அருகே சக்கரக்கோட்டை ஆகிய 5 பறவைகள் சரணாலயங்கள் உள்ளன.

இந்த பறவைகள் சரணாலயங்களுக்கு, வழக்கமாக நவம்பர் முதல் வெளிநாடுகள் மற்றும் வேறு மாநிலங்களில் இருந்தும் இடம்பெயர்ந்து பறவைகள் வலசை வருகின்றன. இப்பறவைகள் இங்கு தங்கி இனப்பெருக்கம் செய்து, பிப்ரவரி, மார்ச் மாதங்களில் தங்களது நாடுகளுக்கு அல்லது இருப்பிடங்களுக்கு திரும்பிச் செல்கின்றன.

இந்த ஆண்டு பருவமழை நன்கு பெய்ததாலும், வைகையாற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டதாலும், நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளது. அதனால் பறவைகள் சரணாலயங்கள், நீர்நிலைகளில் பறவைகள் அதிகளவில் வலசை வந்துள்ளன. இந்த 5 சரணாலயங்களில் தேர்த்தங்கலுக்குதான் அதிகளவில் பறவைகள் வந்துள்ளன.

இங்கு பறவைகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்ய நாட்டுக்கருவேல மரங்கள் அதிகளவில் உள்ளன. இங்கு பார்வையாளர் கோபுரம் உள்ளதால், அதிகளவில் மக்கள் வந்து பறவைகளை கண்டுகளித்துச் செல்கின்றனர்.

தற்போது, இங்கு மஞ்சள்மூக்கு நாரை, புள்ளி அழகு கூழைக்கிடா, சாம்பல் நாரை, செங்கால் நாரை உள்ளிட்ட உள்நாட்டு, வெளிநாட்டு நாரை வகைகள், சைபீரியா, மங்கோலியாவில் இருந்து வரும் வரித்தலை வாத்து, வடதுருவப் பகுதியைச் சேர்ந்த உள்ளான் பறவைகள் மற்றும் இந்த ஆண்டு மத்திய ஆசியாவிலிருந்து வலசை வந்துள்ள கழுகு இனங்கள் கண்டறியப்பட்டுள்ளன. சரணாலயத்தில் கூட்டம் கூட்டமாக அமர்ந்துள்ள இந்த பறவைகளை பார்வையாளர் கோபுரத்திலிருந்து கண்டு ரசிக்கலாம்.

இதுகுறித்து மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசியப் பூங்கா வனக்காப்பாளர் ஜக்தீஷ் பகான் சுதாகர் கூறியதாவது: கடந்தாண்டு வறட்சி காரணமாக மாவட்டத்துக்கு அதிகளவில் பறவைகள் வரவில்லை. இந்தாண்டு நீர்நிலைகளில் தண்ணீர் தேங்கியுள்ளதால், பறவைகள் அதிகளவில் வந்துள்ளன. கடந்த ஜனவரி 27, 28-ம் தேதிகளில் 5 பறவைகள் சரணாலயங்கள் உள்ளிட்ட 21 ஈர நிலங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.

அதில் 138 வகையான 26,541 பறவைகள் கணக்கிடப்பட்டுள்ளன. இதில் 35 ஆண்டுகளுக்குப் பிறகு வந்துள்ள மனோலி தீவின் கிளிஞ்சல் கொத்தி பறவை கண்டறியப்பட்டுள்ளது.

கடந்தாண்டு 13 இடங்களில் பறவைகள் கணக்கெடுப்பு நடத்தப்பட்டதில், 99 வகையான 8,676 பறவைகளே கண்டறியப்பட்டன. தேர்த்தங்கல் பறவைகள் சரணாலயத்தில் அதிகளவில் பறவைகள் கூடுகட்டி இனப்பெருக்கம் செய்து வருகின்றன என்று கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x