Published : 10 Feb 2024 06:21 AM
Last Updated : 10 Feb 2024 06:21 AM
தருமபுரி: தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் வனச் சரகத்தில் வனத்துறையின் கேமராவில் கடமான்கள் நடமாட்டம் பதிவாகி உள்ளது. தருமபுரி மாவட்டத்தின் மொத்த பரப்பளவு 4,497.77 சதுர கிலோ மீட்டர் ஆகும். இதில், 1,716.79 சதுர கிலோ மீட்டர் பரப்பு வனப்பகுதியாக உள்ளது. மாவட்டத்தின் மொத்த பரப்பில் இது 38.17 சதவீதம் ஆகும்.
அதேபோல, தமிழக அளவில் பெரிய வனப்பரப்பை கொண்ட மாவட்டங்களில் இரண்டாவது இடத்தில் தருமபுரி மாவட்டம் உள்ளது. தருமபுரி வனக் கோட்டம் என்ற பெயரில் நிர்வகிக்கப்படும் தருமபுரி மாவட்ட வனத்துறை தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல் உள்ளிட்ட 8 வனச் சரகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி மாவட்டத்தின் அனைத்து வனச்சரக பகுதிகளிலும் ஒருகாலத்தில் கடமான்கள் இருந்துள்ளன. குறிப்பாக, பாலக்கோடு, ஒகேனக்கல் வனச்சரக பகுதிகளிலும், அதையொட்டிய கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை, அஞ்செட்டி வனச்சரக பகுதிகளிலும் இவ்வகை மான்கள் அதிக அளவில் வாழ்ந்துள்ளன. புள்ளிமான்களைக் காட்டிலும் உருவத்தில் பெரியவை.
சட்டங்கள் கடுமையாக்கப்படும் முன்பு இவ்வகை மான்கள் இறைச்சிக்காக அதிக அளவில் வேட்டையாடப் பட்டன. பின்னர் ஏற்படுத்தப்பட்ட சட்ட நெருக்கடிகள் காரணமாக வேட்டை குறைந்தாலும், கட்டுப்பாடுகள் இல்லாத காலத்தில் பெருமளவில் கடமான்கள் அழிக்கப்பட்டு விட்டதால் வனப்பகுதியில் கடமான்களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்தன.
புள்ளிமான்களைப் போலவே கடமான்களும் இயல்பாகவே மிரட்சி குணம் கொண்டவை என்பதால், எஞ்சியிருந்த சொற்ப எண்ணிக்கைலான கடமான்களும் அடர்வனப் பகுதிகளுக்குள் சென்றுவிட்டன.
எனவே, தருமபுரி மாவட்டத்தில் கடமான்களைக் காண்பது கடந்த பல ஆண்டுகளாகவே அரிதாகிவிட்டது. இந்நிலையில், ஒகேனக்கல் வனச்சரகம் கோயில் பள்ளம் பகுதியில் வனத்துறையால் அமைக்கப்பட்டுள்ள தானியங்கி கேமராவில் கடமான்கள் பதிவாகி உள்ளன.
இதுகுறித்து, வனத்துறை அதிகாரிகள் சிலர் கூறியதாவது: ஒகேனக்கல் வனச்சரகம் கோயில்பள்ளம் உட்பட பல இடங்களில் வன விலங்குகளின் குடிநீர் தேவைக்காக அடர்வனப்பகுதிகளில் தொட்டி அமைக்கப்பட்டுள்ளன. அதே பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஆழ்குழாய் கிணறுகளில் இருந்து சோலார் மோட்டார்கள் மூலம் இந்த தொட்டிகளில் தண்ணீர் நிறைக்கப்படுகிறது. கோயில்பள்ளம் பகுதி தண்ணீர் தொட்டியின் அருகே வனத்துறை சார்பில் தானியங்கி கேமராக்களும் பொருத்தப்பட்டுள்ளன.
இந்த கேமராக்களில் யானைகள், குள்ள நரிகள், காட்டுப்பன்றிகள் ஆகிய விலங்கினங்கள் தொட்டியில் தண்ணீர் குடிக்க வந்தபோது கேமராவில் பதிவாகி இருந்தன. இந்நிலையில், கடந்த 2 வாரங்களில் கடமான்கள் நடமாட்டமும் பதிவாகி உள்ளது. யானை, நரி, பன்றி போன்றவை பகல் நேரங்களில் தண்ணீர் குடிக்க வருகின்றன.
ஆனால், கடமான்கள் இரவில் மட்டுமே தண்ணீர் குடிக்க வந்து சென்றுள்ளன. இந்த கேமராக்களின் உதவியால், தருமபுரி மாவட்ட வனப்பரப்பில் வசிக்கும் மிகக் குறைந்த எண்ணிக்கை கொண்ட விலங்குகளையும் ஆதாரத்துடன் பதிவு செய்ய முடிகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT