Last Updated : 05 Feb, 2024 04:41 PM

 

Published : 05 Feb 2024 04:41 PM
Last Updated : 05 Feb 2024 04:41 PM

ஊசுடு ஏரியில் தடுப்பு வேலியை வெட்டி அரசு அனுமதியின்றி படகு குழாம்

ஊசுட்டேரியில் தடுப்பு வேலியை வெட்டி, அமைக்கப்பட்ட படகு குழாமில் நிறுத்தப்பட்டுள்ள படகு. | படங்கள்: எம்.சாம்ராஜ்

புதுச்சேரி: தமிழகம் - புதுச்சேரி என இரு மாநிலங்களின் எல்லைப் பகுதியில் பறவைகள் சரணாலயமாக திகழும் ஊசுடு ஏரியில், தடுப்பு வேலியை வெட்டி, அரசு அனுமதியின்றி படகு குழாம் அமைத்து படகு சவாரி தொடங்கப்பட்டுள்ளது. வனத்துறையினர் இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது.

புதுச்சேரி நகர் பகுதியில் இருந்து 10 கி.மீ தொலைவில் உள்ள ஊசுடு ஏரி, தமிழகம் மற்றும் புதுச்சேரி பகுதிகளை உள்ளடக்கி அமைந்துள்ளது. புதுச்சேரியின் மிகப்பெரிய நீர் ஆதாரமான ஊசுட்டேரி 800 ஹெக்டேர் பரப்பு கொண்டது. இதில், 410 ஹெக்டேர் தமிழகப் பகுதியிலும், 390 ஹெக்டேர் பரப்பு புதுச்சேரியிலும் அமைந்துள்ளது. இதன் மொத்த நீர் கொள்ளளவு 54 கோடி கன அடியாகும்.

ஊசுட்டேரி, இயற்கையுடன் இணைந்த பகுதியாக விளங்குகிறது‌‌. ‘வலசைப் போதல்’ முறையில், நவம்பர் தொடங்கி மார்ச் வரை ஏராளமான வெளிநாட்டு பறவைகள் இங்கு வந்து தங்கி, முட்டையிட்டு குஞ்சு பொறித்து செல்கின்றன.

இங்கு, மஞ்சள் மூக்கு நாரை, நத்தை குத்தி நாரை, பூ நாரை, உண்ணிக்கொக்கு, கரண்டிவாயன், குள்ளத்தாரா, காட்டு வாத்து, பட்டைத்தலை வாத்து, புள்ளி மூக்கு வாத்து, கருநீர்க்கோழி, வெள்ளை அரிவாள் மூக்கன், கோணமூக்கு உள்ளான், நெடுஞ்கால் உள்ளான், ஊசிவால் வாத்து, சாம்பல் கூழைக்கடா உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட வகையிலான 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் ஆண்டு தோறும்வந்து செல்கின்றன.

இத்தகைய சூழியல் முக்கியத்துவம் வாய்ந்த இந்தஊசுட்டேரியை, கடந்த 2008-ம் ஆண்டுபுதுச்சேரி அரசு, பறவைகள் சரணாலயமாக அறிவித்தது. கடந்த 2014-ல் தமிழக அரசும் தன் கட்டுப்பாட்டில் உள்ள இந்த ஏரியின் மற்றொரு பகுதியை சரணாலயமாக்கியது.

பறவைகள் வேட்டையாடுவதை தடுக்க ஏரியின் தென் பகுதியான பத்துகண்ணு சாலையோரம், வனத்துறை சார்பில் இரும்பு வேலி அமைக்கப்பட்டுள்ளது. ஊசுடு ஏரியில் அரசின் அனுமதி இன்றி எந்தவித கட்டுமான பணிகளும் மேற்கொள்ளக் கூடாது.

ஆனால், பத்துக்கண்ணு பேருந்து நிறுத்தம் அருகே, ஊசுட்டேரியைச் சுற்றியுள்ள இரும்பு வேலியை மர்ம நபர்கள் வெட்டி எடுத்து, தனியாக ஒரு படகுகள் நிறுத்தும் இடம் (ஜெட்டி) கட்டியுள்ளனர். அத்துடன் ஏரியில் படகு சவாரி செய்யும் வகையில், 3 படகுகளையும் அங்கு நிறுத்தி வைத்துள்ளனர்.

ஊசுட்டேரியில் தடுப்பு வேலியை வெட்டி, அமைக்கப்பட்டுள்ள தண்ணீர் மிதவைகள்.

ஊசுட்டேரியில் ஏற்கெனவே, சுற்றுலா வளர்ச்சி கழகம் (பிடிடிசி) சார்பில் படகு குழாம் இயங்கி வருகிறது. இந்த நிலையில், மர்ம நபர்கள் இதுபோல் ஏரி வேலியை வெட்டி, ஒரு இடத்தை ஆக்கிரமித்து, அதில் படகு குழாம் அமைத்து, படகுகளையும் விட்டுள்ளது அத்து மீறலாக உள்ளது. புதுச்சேரி அரசு தரப்பில் விசாரித்த போது, இதுதொடர்பாக யாரும் அனுமதி பெறவில்லை என்று தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து வனத்துறையிடம் கேட்டபோது, ‘‘ஊசுடு ஏரியில் பறவைகள் சரணாலயம் உள்ளது. அது வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள பகுதி. அங்கு புதிதாக படகு குழாம் அமைக்க எந்த ஒரு தனியாருக்கும் அனுமதி அளிக்கப்படவில்லை. படகு குழாம் அமைத்துள்ளது குறித்து விசாரித்து வருகிறோம்” என்று தெரிவிக்கின்றனர். புதுச்சேரி வனத்துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசர அவசியம்.

வலசை வரும் பறவைகளுக்கு இடையூறு: ஏற்கெனவே இங்கு பிடிடிசியால் அமைக்கப்பட்டுள்ள படகு குழாமை சூழியல் நிலைக்கு மாறாக, அதாவது வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகளுக்கு தொந்தரவு தரும் விதமாக நடத்தக் கூடாது என்று உரிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டு, அது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த சூழலில், ஏரியின் வேலியை வெட்டி, இதுபோல அத்துமீறி படகு குழாம் அமைப்பது, வெளிநாடுகளில் இருந்து வலசை வரும் பறவைகளின் போக்கை மாற்றும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x