Published : 04 Feb 2024 10:24 PM
Last Updated : 04 Feb 2024 10:24 PM

அமோனியா வாயுக் கசிவு | தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்த மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவு

கோப்புப்படம்

சென்னை: எண்ணூரில் உள்ள தனியார் தொழிற்சாலையில் கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவு குறித்து தொழில்நுட்பக் குழுவின் பரிந்துரைகளை அமல்படுத்துமாறு மாசு கட்டுப்பாடு வாரியத்துக்கு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

சென்னை, எண்ணூர் பகுதியில் கடந்த டிச.26 நள்ளிரவு தனியார் தொழிற்சாலையின் குழாய்களில் ஏற்பட்ட அமோனியா வாயுக் கசிவினால் அருகில் உள்ள பொதுமக்களுக்கு கண் எரிச்சல் மற்றும் மூச்சு விடுவதில் சிரமம் போன்ற பிரச்சினைகள் ஏற்பட்டன. தொடர்ந்து தகுந்த நிபுணர்கள் உடனே வரவழைக்கப்பட்டு, 20 நிமிடங்களில் அந்தத் தொழிற்சாலையில் ஏற்பட்ட வாயுக் கசிவு முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. மேலும், காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து போதுமான ஆம்புலன்ஸ்களை உடனடியாக ஏற்பாடு செய்து, நிலைமை சரிசெய்யப்பட்டது.

இந்த வாயுக் கசிவுக்கான காரணத்தைக் கண்டறிய தமிழக அரசு 7 பேரைக் கொண்ட தொழில்நுட்பக் குழுவை அமைத்தது. இந்நிலையில் அக்குழு வாயுக் கசிவு மற்றும் பரிந்துரைகளை வழங்கி உள்ளது. அது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது.

தொழில்நுட்பக் குழு தனது விரிவான ஆய்வு மற்றும் ஆலோசனைகளுக்குப் பிறகு எண்ணூர் கடற்கரைக்கு அருகில் உள்ள கோரமண்டல் இன்டர்நேஷனல் லிமிடெட் உரத்தொழிற்சாலையின் கடலுக்கு அடியில் அமோனியா கொண்டு செல்லும் குழாயில் இருந்து அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டது என்று முடிவு செய்துள்ளது. மிக்சாம் புயல் காரணமாக குழாயைச் சுற்றியுள்ள கனமான கிரானைட் பாறைகள் இடமாற்றம் கொண்டதால் குழாயில் சேதம் ஏற்பட்டு அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டிருக்கலாம் என்று குழுவால் கணிக்கப்பட்டுள்ளது.

  • குழுவின் பரிந்துரைகள்: தொழிற்சாலையில், கடலுக்கு அடியில் தற்போதுள்ள அமோனியா கொண்டு செல்லும் குழாய்களுக்கு பதில் புதிய குழாய்கள் அதிநவீன கண்காணிப்பு, தானியங்கி கட்டுப்பாடு மற்றும் விபத்து தடுப்பு சாதனங்களுடன் அமைக்கப்பட வேண்டும்.
  • கடலில் இருந்து சாலை வழியாக தொழிற்சாலைக்கு அமோனியா வாயு கொண்டு செல்லும் இடத்தில் குழாய் சரியாக பாதுகாக்கப்படவில்லை. இக்குழாயானது பொது மக்கள் யாரும் அணுகா வண்ணம் உரிய பாதுகாப்பு அமைப்புகளுடன் இருப்பதை தொழிற்சாலை உறுதி செய்ய வேண்டும்.
  • முன்குளிரூட்டுதல் (Pre Cooling) மற்றும் அமோனியா வாயுவினை திரவ நிலையில் கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு கொண்டு வருவதற்கு, குழாயின் உறுதித்தன்மையை உறுதி செய்வதற்காக நைட்ரஜன் வாயுவைப் பயன்படுத்தி அழுத்த சோதனையை
  • இந்நிறுவனம் மேற்கொள்ள வேண்டும். குழாய் அமைப்பின் உறுதித்தன்மை மற்றும் பாதுகாப்பினை தொழிற்சாலை உறுதி செய்த பின்னரே, அமோனியா அக்குழாயின் வழியே செலுத்தப்பட வேண்டும்.
  • அமோனியா கசிவு ஏற்பட்டால் ஆலையை சுற்றியுள்ள கிராம பொதுமக்களுக்கு முன்கூட்டியே எச்சரிக்கை அளிக்கும் வகையில் தொழிற்சாலையின் அனைத்து திசைகளிலும் மற்றும் கடற்கரையிலிருந்து சாலை வழியாக ஆலைக்கு செல்லும் குழாய்க்கு அருகிலும் அம்மோனியா சென்சார்கள் அமைக்கப்பட வேண்டும். தொழிற்சாலை உள்ளேயும் வெளியேயும் ஏற்படக்கூடிய ஆபத்துகள் குறித்த அவசர தயார்நிலை அறிக்கையை (Emergency Preparedness Plan) அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்கள் மூலம் தொழிற்சாலை தயாரிக்க வேண்டும்.
  • அமோனியா வாயு காற்றில் நேரடியாக வெளியேற்றப்படுவதை தவிர்த்து எரிக்கப்படுவது (flare) உறுதி செய்யப்பட வேண்டும்.
  • அமோனியா வாயுக் கசிவின் தாக்கத்தை குறைக்க, அம்மோனியா செல்லும் குழாய்களில் தானியங்கி நீர் தெளிப்பான்கள் (Automated Water Curtain) அமைக்கப்பட வேண்டும்.
  • அமோனியா வாயு குழாயில் கசிவு ஏற்படும்போது உடனடியாக அதன் செயல்பாட்டினை நிறுத்துவதற்கான தானியங்கி கருவிகள் (Automated Tripping System) நிறுவப்பட வேண்டும்.
  • விபத்துகள் மற்றும் ஆலையில் ஏற்படும் அசாதாரண நிகழ்வுகளின் போது அருகிலுள்ள கிராமங்களில் மக்களை எச்சரிக்க அதிக ஒலி ஏற்படுத்தும் ஒலி எழுப்பான்கள் தொழிற்சாலைகளால் அமைக்கப்படவேண்டும்.
  • அவசரநிலை காலங்களில் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள கிராமங்களில் பொது மக்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவைகள் (Do’s & Don’ts) பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
  • தொழிற்சாலையை சுற்றியுள்ள அனைத்து கிராமங்களிலும் உள்ள பொதுமக்கள் அம்மோனியா வாயு வாசனையை உணர்ந்தால் அவர்கள் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை பற்றிய மாதிரி பயிற்சிகளை (Mock Drill) மாவட்ட நிர்வாகம் மற்றும் தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குநரகம் மூலம் அவ்வப்போது நடத்தப்பட வேண்டும்
  • அமோனியா வாயுவினை கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லும் சமயங்களில், தொழிற்சாலையின் 2 கி.மீ சுற்றளவில் காற்றில் அமோனியா வாயு அளவினை ஒவ்வொரு மணி நேர இடைவெளியில் கண்காணிப்பு செய்து தொழிற்சாலை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் மற்றும் இயக்குனர்-தொழில்துறை பாதுகாப்பு மற்றும் சுகாதார இயக்குனரகம் அவர்களுக்கு அவ்வப்போது தெரிவிக்கப்பட வேண்டும்.
  • அமோனியா வாயுவினை கப்பலில் இருந்து தொழிற்சாலைக்கு எடுத்துச் செல்லும் சமயங்களில் கடல்நீரில் அமோனியா அளவினை அளவீடு செய்ய வேண்டும்.
  • அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் மூலம் அமோனியா வாயு எடுத்துச் செல்லும் குழாய் மற்றும் உரத் தொழிற்சாலையின் பாதுகாப்பு தணிக்கை அறிக்கையை தொழிற்சாலை தங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட வேண்டும்.
  • தொழிற்சாலை மற்றும் அமோனியா எடுத்துச் செல்லும் குழாய் உட்பட அனைத்து இடங்களிலும் முழு தானியங்கி (inter locking system) கட்டுப்பாட்டு அமைப்பு ஏற்படுத்தப்பட வேண்டும்.
  • அமோனியம் பாஸ்பேட் பொட்டாஷ் சல்பேட் (APPS) ஆலையை மறுதொடக்கம் செய்வதற்கு முன், அமோனியா சேமிப்பு கிடங்கு, அனைத்து அபாயகரமான இரசாயன சேமிப்பு தொட்டிகள் மற்றும் குழாய்களுக்கு பாதுகாப்பு தணிக்கை, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தால் தொழிற்சாலை மேற்கொள்ள வேண்டும்.
  • மத்திய தோல் ஆராய்ச்சி நிறுவனம் அல்லது இதர அங்கீகரிக்கப்பட்ட நிறுவனம் மூலம் அமோனியா வாயுவினை கடலுக்கு அடியில் கொண்டு செல்லும் குழாய்கள் மற்றும் உர ஆலையின் இடர் (Risk Assessment), ஆபத்து மற்றும் செயல்பாட்டு ஆய்வை (HAZOP Studies) இந்த தொழிற்சாலை அவ்வப்போது மேற்கொண்டு, ஆய்வின் பரிந்துரைகளின்படி தேவையான அனைத்து அமைப்புகளையும் தயார்நிலையில் வைத்திருக்க வேண்டும்.
  • அமோனியா வாயுக் கசிவு குறித்து முழுமையான பாதுகாப்பு தணிக்கை மேற்கொள்ளப்பட்டு, அத்தணிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட பரிந்துரைகள் செயல்படுத்தப்பட வேண்டும்.
  • முகக்கவசம், தலைக்கவசம், பாதுகாப்புக் காலணிகள், பாதுகாப்புக் கண்ணாடிகள், இரசாயனச் பாதுகாப்பு கையுறைகள் மற்றும் உடைகள், சுவாசக் கருவிகள் போன்ற அத்தியாவசியமான பாதுகாப்பு உபகரணங்களை (PPE) தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு வழங்க வேண்டும்.

மேலும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பின்வருவனவற்றை மேற்கொள்ளவும் குழு பரிந்துரைத்துள்ளது.

  • தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு சுற்றுச்சூழல் இழப்பீடாக ரூபாய்.5.92 கோடி சம்பந்தப்பட்ட தொழிற்சாலை உடனடியாக செலுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
  • காற்று (தடுப்பு மற்றும் மாசு கட்டுப்பாடு) சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நிபந்தனைகளை தொழிற்சாலை செயல்படுத்தாததால் தொழிற்சாலையின்மீது சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தொழில்நுட்பக் குழுவின் மேற்கண்ட அறிக்கையை தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் அரசிடம் சமர்ப்பித்துள்ளது. குழுவின் பரிந்துரைகளை அரசு ஏற்றுக்கொண்டு, தொழில்நுட்பக் குழுவின் அனைத்துப் பரிந்துரைகளையும் உடனடியாக அமல்படுத்தி, அறிக்கை அளிக்குமாறு தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு அரசு உத்தரவிட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x