Published : 04 Feb 2024 04:12 AM
Last Updated : 04 Feb 2024 04:12 AM
தருமபுரி: தருமபுரி மாவட்டத்தில் நடந்த ஈரநில பறவைகள் கணக்கெடுப்பில் அரிய வகையான சாம்பல் நிற காட்டுக் கோழி உட்பட 109 வகை பறவையினங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
தருமபுரி மாவட்டத்தில் வனத்துறை மூலம் 2024-ம் ஆண்டுக்கான ஈர நில பறவைகள் கணக்கெடுப்புப் பணி நடந்தது. வனத்துறையினர், பள்ளி மாணவ, மாணவியர், தன்னார்வலர்கள் ஆகியோர் இணைந்து இந்த கணக்கெடுப்பை மேற்கொண்டனர். காலை 6 மணி முதல் 7.30 மணி வரை, மாலை 5 மணி முதல் 6 மணி வரை என இந்த கணக்கெடுப்பு நடத்தப்பட்டது.
தருமபுரி வனக் கோட்டத்துக்கு உட்பட்ட தருமபுரி, பாலக்கோடு, பென்னாகரம், ஒகேனக்கல், தீர்த்த மலை, அரூர், மொரப்பூர், கோட்டப்பட்டி ஆகிய 8 வனச் சரகங்களில் 27 ஈர நிலங்கள் அடையாளம் காணப்பட்டு அங்கெல்லாம் பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இது குறித்து, வனத்துறை அதிகாரிகள் கூறும் போது, ‘நடப்பு ஆண்டுக்கான ஈர நில பறவைகள் கணக்கெடுப்பில், கடந்த ஆண்டைக் காட்டிலும் அதிக பறவைகள் காணப்பட்டது.
அழிந்து வரும் இனமான சிட்டுக் குருவிகள், குயில், சாம்பல் நிற காட்டுக் கோழி ஆகிய பறவை இனங்களும் கண்டறியப்பட்டன. மேலும், கிளி, மயில், நாரை, கொக்கு, இரட்டை வால் குருவி, நீர்க்காகம், காகம், தூக்கணாங்குருவி, மீன்கொத்திப் பறவை, நீர்க் கோழி, மைனா, காட்டுக் காகம் ஆகிய பறவைகளும் காணப்பட்டது. 109 பறவை இனங்களைச் சேர்ந்த 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகளை இந்தக் கணக்கெடுப் பின் போது காண முடிந்தது’ என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT