Published : 02 Feb 2024 05:48 PM
Last Updated : 02 Feb 2024 05:48 PM
ராமேசுவரம்: ராமேசுவரம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் புதிய வகை விலாங்கு மீனை தேசிய மீன் மரபணு வளப் பணியகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
உலகம் முழுவதும் 20 குடும்பங்கள், 111 இனங்கள் என 1,000 வகையான விலாங்கு மீன்கள் உள்ளன. ஆங்குயில் பார்ம்ஸ் (Anguilliformes) என்பது விலாங்கு மீனின் விலங்கியல் பெயர். நிலத்தில் வாழும் பாம்பைப் போலவே விலாங்கு மீன்கள் தோற்றமளித்தாலும் விலாங்கு மீனின் முன் பகுதியிலும், வால் பகுதியிலும் துடுப்புகள் இருக்கும். சில விலாங்கு மீன்கள் மின்சார அதிர்ச்சியை அளிக்கும் தன்மை கொண்டது.
மத்திய வேளாண் ஆராய்ச்சிக் கழகத்தின் அங்கமான லக்னோவை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வரும், தேசிய மீன் மரபணு வளங்களின் பணியகம் நீர் நிலைகளில் பல்வேறு வகையான ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு வருகிறது.
அதன் ஆராய்ச்சியாளர்கள் ராமேசுவரம் மன்னார் வளைகுடா கடல் பகுதி மீன்பிடி இறங்குதளங்களில் நடந்த கள ஆய்வின்போது அரிய வகை மீனை கண்டறிந்தனர். அதனை தகுந்த முறையில் பதப்படுத்தி ஆய்வகத்துக்கு எடுத்துச் சென்று மரபணு சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஆய்வில், அது புதிய வகை விலாங்கு மீன் என்பது உறுதி செய்யப்பட்டது.
இந்த விலாங்கு மீன் அடர் பழுப்பு மற்றும் வெளிர் நிறத்திலிருக்கிறது. 171 மி.மீ. நீளமும், 10 மி.மீ. சுற்றளவும் கொண்டது. இது அரியோசோமா என்ற இனத்தைச் சேர்ந்தவை ஆகும். இந்த விலாங்கு மீனுக்கு அரியோசோமா கண்ணணி என அண்ணாமலை பல்கலைக்கழக கடல் உயிரியல் முன்னாள் இயக்குநர் மற்றும் திருவள்ளுவர் பல்கலைகழகத்தின் முன்னாள் துணைவேந்தர் மறைந்த பேராசிரியர் எல். கண்ணனை கவுரவிக்கும் வகையில் பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த கண்டுபிடிப்பு தொடர்பான விவரங்கள் உயிரியல் அமைப்பு மற்றும் பரிணாமம் (Zoosystematics and Evolution) என்னும் சர்வதேச ஆய்விதழில் தற்போது வெளியாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT