Published : 02 Feb 2024 05:27 AM
Last Updated : 02 Feb 2024 05:27 AM

ஈரோடு மாவட்டத்தில் 80,567 ஹெக்டேரில் தந்தை பெரியார் வன உயிரின சரணாலயம் உதயம்

பிரதிநிதித்துவப்படம்

சென்னை: ஈரோடு மாவட்டத்தில் 80,567 ஹெக்டேர் பரப்பில் 'தந்தை பெரியார்வன உயிரின சரணாலயம்' உதயமானது. அது தொடர்பாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக சட்டப்பேரவையில் கடந்த ஆண்டு பட்ஜெட்டில் “ஈரோடுமாவட்டம் அந்தியூர், கோபிசெட்டிபாளையம் வட்டங்களைச் சேர்ந்த80,567 ஹெக்டேர் வனப் பரப்பில் ‘தந்தை பெரியார் வன விலங்கு சரணாலயம்' என்ற புதிய சரணாலயம் அமைக்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.

இது தொடர்பாக தலைமை வன உயிரினக் காப்பாளர் அரசுக்குஅனுப்பிய கருத்துரு பரிசீலிக்கப்பட்டு, கடந்த ஜன. 30-ம் தேதி அந்தியூர், கோபி வட்டங்களில் உள்ள காப்புக்காடுகளை ‘தந்தை பெரியார் வன உயிரின சரணாலயம்' என அரசு அறிவித்து அரசாணை பிறப்பித்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் உள்ள வன உயிரின சரணாலயங்களின் எண்ணிக்கை 18-ஆக உயர்ந்துள்ளது. அந்த அரசாணையில் கூறியிருப்பதாவது:

வட பர்கூர், தெற்கு பர்கூர், தாமரைக்கரை, எண்ணமங்கலம், நகலூர் காப்புக்காடுகளைச் சேர்ந்த 80,567.76 ஹெக்ேடர் பரப்பை வன உயிரின சரணாலயமாக அறிவிக்குமாறு வனத் துறை கருத்து அனுப்பியுள்ளது.

இந்த காப்புக்காடுகள், சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், கர்நாடக மாநிலத்தில் உள்ள மலை மாதேஸ்வரா வன உயிரின சரணாலயம் மற்றும் காவிரி வன உயிரினசரணாலயம் ஆகியவற்றுக்கு இடையே அமைந்துள்ளன. இவற்றை இணைக்கும்போது முக்கிய வழித்தடம் உருவாகி, புலிகளின் வாழ்விடப் பகுதியாக அமையும். ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டத்தில் உள்ள காப்புக்காடு பகுதிகளில் பல்வேறு தாவரங்கள், வன விலங்குகள் நிறைந்துள்ளன.

கேரள மாநிலத்தில் உள்ள வயநாடு மற்றும் கர்நாடக மாநிலத்தில் உள்ள காவிரி வனப் பகுதிகளுடன் இணைக்கும் முக்கியப் பகுதியான இந்த இடத்தைப் பாதுகாப்பது, சந்தன மரங்களின் மீள் உற்பத்தியில் முக்கியப் பங்காற்றும்.

இந்த காப்புக்காடு 70 வகையான வண்ணத்துப் பூச்சி இனங்கள், 35 வகை மீன் இனங்கள், 10 வகை நீர்நிலவாழ் இனங்கள், 25வகை ஊர்வன இனங்கள், நிலத்தில் வாழும் 5 வகை முதுகெலும்பில்லா விலங்குகள், 233 வகைபறவை இனங்கள், 48 வகைபாலூட்டி இனங்களை கொண்ட பல்லுயிர் பரவல் பகுதியாகும்.

முக்கியத்துவம் வாய்ந்த இப்பகுதியைப் பாதுகாக்கவும், மேம்படுத்தவும், மனித-வன உயிரினமோதலைத் தணிக்கவும் இதை வன உயிரினச் சரணாலயமாக நிர்வகிக்க வேண்டியது அவசியமாகும். எனவே, மேற்கூறிய பகுதிகள் தந்தை பெரியார் வன உயிரினசரணாலயமாக அறிவிக்கப்படுகின்றன. இவ்வாறு அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x