Published : 30 Jan 2024 04:01 PM
Last Updated : 30 Jan 2024 04:01 PM

ஆக்கிரமிப்பு, குப்பை கொட்டப்படுவதால் அடையாளத்தை இழக்கும் வைகை ஆறு

மதுரை: தமிழகத்தில் அனைத்து மாதங்களிலும் திருவிழாக்கள் நடைபெறும் ஒரே நகரமாக மதுரை திகழ்கிறது. பல்லாயிரம் ஆண்டுகள் பழமையான மதுரை நகரில் கடந்த காலங்களில் நீர்நிலைகள் நிரம்பி, விவசாயம் செழித்து மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்ததே அதற்கு முக்கியக் காரணம்.

மக்கள் கொண்டாடும் திருவிழாக்களில் மீனாட்சியம்மன் கோயிலும், அழகர்கோயில் சுந்தரராஜ பெருமாள் கோயிலும் முக்கிய மானவை. அதிலும் வைகை ஆற்றில் கொண்டாடப்படும் சித்திரைத் திருவிழா புகழ்பெற்றது. வைகை ஆற்றில் கள்ளழகர் இறங்கும்போது லட்சக்கணக்கான பக்தர்கள் அன்று கூடி வைகை ஆற்றில் நீராடி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.

தல்லாகுளம், ஆத்திகுளம், கரிசல்குளம், மாடக்குளம், பீபி குளம் என தங்கள் வசிக்கும் பகுதிகளுக்கு நீர்நிலைகளின் பெயர்களையே வைத்து மரியாதை செய்துள்ளனர் இந்த நகரவாசிகள். இப்படி பல சிறப்புகளைப் பெற்ற மதுரை நகரில் தற்போது மக்கள், நீர்நிலைகளைப் பற்றி கவலைப்படுவதாகத் தெரியவில்லை.

வைகையில் வெள்ளம் வந்தபோது சிவனே, வந்திக் கிழவிக்கு உதவியதாக திருவிளையாடல் புராணத்தில் இடம்பெற்ற பிட்டுக்கு மண் சுமந்த கதை மூலம் அறிய முடிகிறது. சோழவந்தானுக்கு மேற்கேயுள்ள பகுதி வரை வைகை ஆற்றில் மக்கள் நீராடும் அளவுக்கு தெள்ளத் தெளிவாக தண்ணீர் ஓடுகிறது. சோழவந்தானிலிருந்து மதுரை வரை வைகை ஆறு மக்களால் மாசுபடுத்தப்படுகிறது. வைகை ஆற்றில் கால் வைக்க சங்கடப்படும் அளவுக்கு துர்நாற்றம் வீசும் கழிவுநீரோடையாக மாறியுள்ளது.

சோழவந்தான் பேரூராட்சி, திருவேடகம், கொடிமங்கலம், கீழமாத்தூர், துவரிமான் ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பை கள் வைகை ஆற்றுக்குள் கொட்டி தீ வைக்கப்படுகிறது. மேலும், இந்த உள்ளாட்சி அமைப்புகளில் பாதாள சாக்கடை திட்டம் இல்லாததால் கழிவுநீரும் வைகை ஆற்றுக்குள் கலக்க விடப்படுகிறது. இதனால், வைகை ஆறு முற்றிலும் மாசுபடுத்தப்படுகிறது.

மேலும், வைகை ஆற்றுக்குள் ஆகாய தாமரைச் செடிகள், கருவேல மரங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளால் அன்றாடம் அதன் இயல்பை இழந்து ஆறு கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து கொண்டிருக்கிறது. ஆனால், இதைப்பற்றி கவலைப்படாமல் பாலங்கள், சாலைகள் அமைப்பதற்கும், வணிக வளாகங்கள் கட்டுவதன் மூலம் அதில் கிடைக்கும் கமிஷன் தொகைக்காகவே அரசியல்வாதிகளும், அதிகாரிகளும் முழுக்க முழுக்க கவனம் செலுத்திக் கொண்டிருக்கின்றனர்.

வைகை ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடும் நிலை மாறி, கொசுக்களை உற்பத்தி செய்யுமிடமாகவும், மனிதர்களின் கழிவுகளை, மருத்துவக் கழிவுகளையும் கட்டிடக் கழிவுகளையும் கொட்டும் குப்பைக் கிடங்குபோல் வைகை ஆறு மாறி விட்டது.

மேலும் இறைச்சிக் கழிவுகள், சாக்கடை நீர் கலப்பதால் வைகை துர்நாற்றமுடன் நோய் பரப்பும் இடமாக மாறிவிட்டது. அரசும், தனியாரும் கட்டிடங்கள் கட்டுவதற்கு போட்டி போட்டு மணல் அள்ளிய இடங்கள் இன்று அபாயகரமான பள்ளப் பகுதிகளாக உள்ளன. ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தில் வைகை ஆற்றின் கரைகளைச் சுருக்கி சாலை அமைத்து, நீர்வழித்தடங்கள் அழிக்கப்பட்டன. நகரில் பெய்யும் மழையும், வைகை ஆற்றுக்குள் வராமல் ஆற்றின் இரு கரைகளிலும் சுவர் எழுப்பியதால் தடுக்கப்பட்டுள்ளது.

வைகை அணையில் இருந்து தண்ணீர் திறந்துவிட்டாலும் மதுரை ஆற்றில் நீரோட்டம் குறைந்து காணப்படுகிறது. அதனால், வைகை ஆற்றில் இருந்து, மதுரையின் 28 கண்மாய்களுக்கு தண்ணீர் செல்வதும் குறைந்து தற்போது அந்த நீர்நிலைகள் கழிவுநீர் தேங்குமிடங்களாக மாறி, வறட்சிக்கும் இலக்காகிவிட்டது. வைகை ஆற்றை மாசுபடுத்தும் செயல்களைத் தடுத்து நிறுத்தக் கோரியும் பாதுகாக்கக் கோரியும் மதுரை ஆட்சியர் சங்கீதாவை சந்தித்து வைகை நதி மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் ராஜன் மனு அளித்தார்.

பின்னர் அவர் கூறியதாவது: வைகை ஆறு மட்டுமின்றி அதன் கிளை நதிகளும் ஆக்கிரமிப்புக்குள்ளாகி ஆற்றுக்கு நீர் வரத்துக் குறைந்தது. வைகை ஆற்றின் பிரதான கிளை நதி கிருதுமால் நதி தற்போது சிறு கால்வாயாக மாறிவிட்டது.

தேனி மாவட்டத்தில் தொடங்கும் வைகை ஆறு, சங்கிலித் தொடராக அதன் வழித்தடங்களில் உள்ள கண்மாய்களை நிரப்பி கடைசியாக ராமநாதபுரம் பெரிய கண்மாயை நிரப்புகிறது. வைகை ஆற்றிலிருந்து கண்மாய்களுக்குச் செல்லும் கால்வாய்கள் பல இடங்களில் ஆக்கிரமித்து கட்டிடம் எழுப்பியும், சாலைகள் அமைக்கப்பட்டும் இருப்பதால் ஆற்றிலிலிருந்து தண்ணீர் திறந்தால் கண்மாய்களுக்குச் செல்வதில்லை.

இந்த கண்மாய்களும் மழைப் பொழிவால் நிரம்பினால் வேறு தடங்களில் நீர் செல்ல வாய்ப்பில்லை. அதனால், வைகை ஆற்றில் இருந்து கண்மாய்களுக்கு செல்லும் கால்வாய்களின் ஆக்கிரமிப்பை அகற்றி கண்மாய்களுக்கு தண்ணீர் செல்ல வழி வகை செய்ய வேண்டும்.

மேலும், உள்ளாட்சி அமைப்புகளால் வைகை ஆற்றுக்குள் கொட்டப்படும் குப்பையையும், கழிவுநீர் விடப்படுவதையும் உடனடியாகத் தடுக்க வேண்டும். வைகை ஆறு மாசுபடுவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் தனி கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x