Published : 29 Jan 2024 06:22 PM
Last Updated : 29 Jan 2024 06:22 PM

அரசின் இலக்குக்கு உதவும் இடையகோட்டை பசுமை குறுங்காடு

இடையகோட்டை கிராமத்தில் பசுமையாக காணப்படும் மியாவாகி குறுங்காடு (ட்ரோன் காட்சி)

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டையில் மியாவாகி குறுங்காடு அமைக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. தற்போது இதில் 6 லட்சம் மரக்கன்றுகளும் தழைத்து ஓங்கி நின்று சுற்றுச்சூழலைக் காக்கும் வகையில் இயற்கை எழிலான சூழலை உருவாக்கி உள்ளது.

தமிழகத்தின் வனப்பரப்பு 22.71 சதவீதமாக உள்ளது. இதை அடுத்த 10 ஆண்டுகளில் 33 சதவீதமாக உயர்த்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒரு கட்டமாக குறுங்காடுகளை உருவாக்கத் திட்டமிடப்பட்டது.

சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், காலநிலை மாற்றத்தைத் தவிர்க்கவும் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் ‘மியாவாகி’ என்பவர் அறிமுகப்படுத்தியதுதான் குறுங்காடுகள் திட்டம். இதனால், அவரது பெயரிலேயே அழைக்கப்படுகிறது.

உலகின் பல நாடுகள் மியாவாகியின் அறிவுரைகளைக் கேட்டு தாங்களாவே முன்வந்து குறுங்காடுகளை அமைத்து வருகின்றன. இந்த நடைமுறை நமது நாட்டிலும் பின்பற்றப்படுகிறது.

குறுகிய இடத்தில் பல்வேறு வகையான மரக்கன்றுகளை நடுவதன் மூலம் குறுங்காடுகள் உருவாக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதில் தமிழகத்தில் திண்டுக்கல் மாவட்டம் முன்மாதிரியாகத் திகழ்கிறது.

இடையகோட்டையில் அடர்ந்து வளர்ந்துள்ள மியாவாக்கி குறுங்காடு

6 லட்சம் கன்றுகள் நட்டு சாதனை: ஒட்டன்சத்திரம் தொகுதிக்கு உட்பட்ட இடையகோட்டை கிராமத்தில் 2022-ம் ஆண்டு டிசம்பரில் கருவேல மரங்களுடன் புதர்மண்டிக் கிடந்த 117 ஏக்கர் பரப்பு சீரமைக்கப்பட்டு, அமைச்சர் அர.சக்கரபாணி முயற்சியால் 2022 டிசம்பர் 23-ம் தேதி 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகளை நடவு செய்யப்பட்டது. தற்போது அங்கு குறுங்காடு உருவாக்கப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது. இந்தநிகழ்வில் அமைச்சர் உதயநிதி பங்கேற்று சாதனைக்கான சான்றிதழ்களைப் பெற்றார்.

இடையகோட்டையில் மியாவாகி குறுங்காடு உருவாக்கப்பட்டு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. 6 லட்சத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் தற்போது எப்படி இருக்கிறது என காணச்சென்றால் அவை அனைத்தும் முறையாகப் பராமரிக்கப்படுவதால் நன்கு தழைத்து வளர்ந்து வருகின்றன.

கடந்த ஆண்டு வழக்கத்தைவிட பருவமழை அதிகம் பெய்ததால் இயற்கை மழையே இந்த குறுங்காடு வளர்ச்சிக்குப் பெரிதும் உதவியது என்றுதான் சொல்ல வேண்டும். அருகிலுள்ள நங்காஞ்சியாறு நீர்த்தேக்கம் நிறைந்து காணப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்துள்ளது. இதனால் குறுங்காடு பகுதியில் அமைக்கப்பட்ட ஆழ்துளை கிணறுகள் மூலம் நீர்பாய்ச்சப்பட்டு 6 லட்சம் மரக் கன்றுகளையும் காப்பாற்றி உள்ளனர்.

முழு நேரக் கண்காணிப்பாளர் ஒருவர் நியமிக்கப்பட்டு குறுங்காடு கண்காணிக்கப்படுகிறது. 100 நாள் வேலைத்திட்ட பணியாளர்களும் பராமரிப்புப் பணியில் ஈடுபடுகின்றனர். அமைச்சர் அர.சக்கரபாணியின் முழு முயற்சியால் முன்மாதிரியான மியாவாகி குறுங்காடு உருவாக்கியதுபோல் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒரு குறுங்காடு ஏற்படுத்தினால் அரசின் இலக்கான 33 சதவீத வனப்பரப்பு என்பதை எளிதில் எட்டலாம் என்பது உறுதி.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x