Published : 20 Jan 2024 06:22 AM
Last Updated : 20 Jan 2024 06:22 AM

எல்லா நகரமும் நகரமல்ல... மாசற்ற நகர் மறைமலை நகரே..! - தமிழகத்திலேயே சிறந்த தூய்மை நகர விருது

மறைமலை நகர்: மத்திய அரசு தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் இந்தியாவிலுள்ள நகரங்களுக்கிடையே, 2006 முதல் ஆண்டுதோறும் 'ஸ்வச் சர்வேக்‌ஷன்' எனும் தூய்மை நகரப் போட்டி நடத்தி,பல்வேறு விருதுகள் வழங்கி நகர நிர்வாகங்களை ஊக்கப்படுத்தி வருகிறது. அதேபோல சிறப்பாகச் செயல்படும் மாநில அரசுகளுக்கும் விருது வழங்கி வருகிறது.

அந்த வகையில் நிகழாண்டின் நகரங்களில் சுகாதார தூய்மைக்கான விருதுகளில் மறைமலை நகர் நகராட்சிக்கு டெல்லியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருது வழங்கப்பட்டது. தமிழகத்தில் இந்த ஒரு நகராட்சி தான் இந்த விருதுக்கு தேர்வு செய்யப்பட்டது. இந்த விருதை நகராட்சித் தலைவர் ஜெ.சண்முகம் பெற்றுக் கொண்டாா். தமிழகத்தில் 138 நகராட்சிகள் உள்ளன. இதில் தரவரிசை பட்டியலில் மறைமலை நகர் நகராட்சி முதல் இடம் பிடித்துள்ளது. என்பது குறிப்பிடத்தக்கது.

மறைமலை நகரில் மொத்தம், 1 லட்சத்து 25 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். தினமும் 1,200டன் உலர்ந்த குப்பைையும், 700 டன் ஈரகுப்பையும் சேகரிக்கப்படுகின்றன. ஆனால்நகரத்தின் எந்த மூலையிலும் ஒரு குப்பைத்தொட்டியைக் கூட பார்க்க முடியாது. வீடுவீடாக குப்பைகளை சேகரித்தல், கையாளுதல், பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகித்தல், குறைத்தல், மறுபயன்பாடு, மறுசுழற்சி செய்தல், பொது கழிப்பிடங்கள், நீர்நிலைகள், பொது இடங்களை சுகாதாரமாக பேணுதல், தூய்மை பணியாளர்களின் பாதுகாப்புஉறுதி செய்தல் போன்ற பல சுகாதார கொள்கைகளுக்கு முன்னுரிமை அளித்து, மேற்கண்ட தரவரிசை பட்டியல் தயாரிக்கப்பட்டு மறைமலை நகருக்கு மத்திய அரசு விருது வழங்கப்பட்டுள்ளது.

மறைமலை நகரில் ஏராளமான தொழில் நிறுவனங்கள், கல்வி, ஐ.டி. நிறுவனங்கள், மருத்துவமனைகள் உள்ளன. இங்கு குப்பை இல்லாமல் பேணுவது மட்டுமல்லாது, பசுமை, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீா், தரமானசாலைகள் என உள்ளூா் மக்களின் தேவையையும் பூர்த்தி செய்ததற்காக இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் சிட்டி ரேங்க் ரிப்போர்ட் கார்டு

மேலும், திடக்கழிவு மேலாண்மை, மக்கும் குப்பைகள் மூலம் வீட்டிலேயே இயற்கைஉரம் தயாரித்தல் உள்ளிட்டவை குறித்து, பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. ஒவ்வொரு மாணவ, மாணவியும் நகராட்சியின் சுகாதாரத் தூதராக செயல்பட்டு, மாநகர தூய்மையை உறுதிப்படுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, உறுதிமொழி எடுத்தல் மற்றும், “சுகாதார தூதர்” அடையாள அட்டைகளை மாணவ, மாணவிகளுக்கு வழங்கி கவுரவிக்கும் பணிகளையும் நகராட்சி சுகாதார பிரிவு மேற்கொண்டு வருகிறது.

இதுகுறித்து நகராட்சியின் சுகாதாரப் பிரிவினர் கூறியதாவது: தூய்மைப் பணியாளர்களின் உழைப்பாலும், பொதுமக்களின் ஒத்துழைப்பாலும், நகராட்சியைத் தூய்மையான நகரமாக மாற்ற பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இயற்கை உரம் தயாரித்தல், குப்பையில் வரும் தேங்காய் ஓடுகளில் மருந்து தயாரித்தல், பொதுமக்கள் குப்பையில் ஆடைகளை வீசாமல் இருக்க பழைய துணிகளைச் சேகரித்து ஆதரவற்றோர் இல்லங்களுக்கு அனுப்புதல், வீட்டில் உரம் தயாரிக்க விழிப்புணர்வு செய்வது என பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.

குப்பையை தரம் பிரித்து அதில் வரும் வருமானத்தில் பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள், பொதுமக்களின் புகார்களை வாட்ஸ்அப் மூலம் பெற்றுத் தீர்த்து வைத்தல் என, பல்வேறு முன்னோடி நடவடிக்கைகளை மேற்கொண்டோம். இவ்வாறு கூறினர்.

நகராட்சி தலைவர் ஜெ. சண்முகம் கூறியது: இப்பகுதியில் ஏராளமான தொழில் நிறுவனங்கள் உள்ளன. தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வந்து செல்கின்றனர். கடந்த 2017 முதல் தூய்மை பாரத இயக்கம் மற்றும் 2022முதல் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்திய நகரங்களின் தூய்மைக்கான மக்கள் இயக்கம் ஆகிய திட்டங்களின் மூலம், பல்வேறு திடக்கழிவு பணிகளான கழிவுகளை மக்கும் மற்றும், மக்காத கழிவுகளாக பிரித்து வாங்குதல் உள்ளிட்டவற்றை செயல்படுத்தி வருகிறோம்.

இதன்மூலம் நான்கு இடங்களில் நுண்ணுரம் தயாரிக்கும் பணிகளையும், இங்கு தயாரிக்கப்பட்ட நுண்ணுரத்தை செழிப்புஎன பெயரிட்டு விவசாயிகளுக்கு இலவசமாகவும், பொதுமக்களுக்கு கிலோ ரூ.20-க்கும் விற்பனை செய்கிறோம்.

மேலும், இப்பணிகள் தொடர்பாக பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு செய்து நகரைஅழகுறச் செய்யும் பணி நடக்கிறது.

நகரை அழகுறச் செய்ய சுவர் ஓவியம் வரைதல், மரம் நடுதல், நீர்நிலைகளை சுத்தம் செய்தல், மாரத்தான் போட்டிகள், வாக்கத்தான் போட்டி, புகையில்லா போகி மூலம் பாரம்பரியத்தை நினைவு கூர்தல், கழிப்பிடங்களை தூய்மையாக பராமரித்தல் மற்றும் பயனற்ற பிளாஸ்டிக் கழிவுகளை எரிபொருள் பயன்பாட்டுக்கு சிமெண்ட் ஆலைக்கு அனுப்பி வைப்பது ௭ன மக்களுடன் இணைந்து சுகாதாரத்தை மேம்படுத்தி வருகிறோம். இதுபோல பல்வேறு நலப்பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறோம். இவ்வாறு கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x