Published : 18 Jan 2024 04:02 AM
Last Updated : 18 Jan 2024 04:02 AM

ஓசூர் அருகே யானை தாக்கி பெண் உயிரிழப்பு: வனத்துறையை கண்டித்து மறியல்

முனிரத்தினம்.

ஓசூர்: ஓசூர் அருகே யானை தாக்கி பெண் உயிரிழந்தார். இதையடுத்து, வனத் துறையைக் கண்டித்து, பெண்ணின் உடலை சாலையில் வைத்து, அவரது உறவினர்கள் மறியலில் ஈடுபட்டனர்.

ஓசூர் உத்தனப்பள்ளி அருகே அனுமந்தபுரத்தைச் சேர்ந்தவர் முனிரத்தினம் ( 35 ). இவரது கணவர் சற்று மன நலம் பாதிக்கப்பட்டவர். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். முனிரத்தினம் கெலமங்கலத்தில் உள்ள ஒரு ஓட்டலில் பணிபுரிந்து வந்தார். இவர் அனுமந்த புரத்திலிருந்து கெல மங்கலத்துக்கு நேற்று பணிக்கு செல்ல அவ்வழியாக வந்த இருசக்கர வாகன ஓட்டியிடம் லிப்ட் கேட்டுப் பயணித்துள்ளார்.

சூளகிரி சாலையில் சென்ற போது, சாலையைக் கடக்க முயன்ற ஒற்றை யானை, இருசக்கர வாகனத்தில் வந்த முனிரத்தினத்தை தாக்கியது. இதில் வாகனத்தை ஓட்டி வந்தவர் யானையின் தாக்குதலிலிருந்து தப்பி ஓடினார். இதில் நிகழ் விடத்திலேயே முனிரத்தினம் உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்த அங்கு திரண்ட முனிரத்தினத்தின் உறவினர்கள், முனிரத்தினத்தின் உடலைச் சாலையில் வைத்து மறியலில் ஈடுபட்டனர்.

இது தொடர்பாக அவர்கள் கூறும்போது, ``இப்பகுதியில் தொடர்ந்து ஒற்றை யானை சுற்றி வருகிறது. யானையை அடர்ந்த வனப்பகுதிக்கு விரட்டுவதில் வனத்துறையினர் அலட்சியம் காட்டி வருகின்றனர். இதனால், முனிரத்தினம் உயிரிழந்ததாகக் குற்றம்சாட்டினர். மேலும், உயிரிழந்த முனிரத்தினம் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்” என்றனர்.

தகவல் அறிந்து அங்கு வந்த சூளகிரி வட்டாட்சியர் சக்தி வேல், டிஎஸ்பி-க்கள் பாபு பிரசாந்த், முரளி, வனச்சரகர் பார்த்தசாரதி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு வார்த்தை நடத்தினர். மேலும், “இது தொடர்பாக ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும்” என உறுதியளித்தனர். இதையேற்று, மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால், இச்சாலையில் 3 மணி நேரம் வாகனப் போக்கு வரத்து பாதிக்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x