Published : 15 Jan 2024 07:05 AM
Last Updated : 15 Jan 2024 07:05 AM
சென்னை: சென்னை, புறநகர் பகுதிகளில் போகி பண்டிகை நாளான நேற்று பொதுமக்கள் தங்கள் இல்லக் கழிவுகளை அதிகாலையில் எரித்ததால் கடும் காற்று மாசுடன், புகை மூட்டமும் நிலவியது. இதனால் ரயில், விமான சேவைகள், சாலை போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டன.
ஒவ்வொரு ஆண்டும் தை பிறக்கும் காலத்தில் வடகிழக்கு பருவமழை ஓய்ந்து, கடல் காற்று வீசுவது தடை பட்டிருக்கும். காற்றில் ஈரப்பதமும் அதிகமாக இருக்கும். பனிப்பொழிவும் இருக்கும். இத்தகைய தட்பவெப்பநிலை நிலவும்போது, தமிழகத்தில் போகி பண்டிகை நாளில் வீட்டு கழிவுகளை எரிப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர்.
மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், மாநகராட்சி, காவல்துறை விதிகளை வகுத்தும் அவை ஏட்டளவிலேயே இருப்பதால், ஒவ்வொரு ஆண்டும் போகி பண்டிகை தினத்தன்று அதிகாலை முதல் கடும் காற்று மாசும், புகை மூட்டமும் நிலவி சென்னை, புறநகர் மக்களை வாட்டி வதைக்கிறது.
நேற்று, மேளம் அடித்து போகி பண்டிகையை உற்சாகமாக பொதுமக்கள் வரவேற்ற நிலையில், தங்கள் வீட்டு குப்பைகள், கழிவுகள், பிளாஸ்டிக் பொருட்களை தெருக்களில் போட்டு எரித்ததால் அதிகாலையில் இருந்தே கடும் காற்று மாசும், புகைமூட்டமும் நிலவியது. இதனால் பலர் இருமல் மற்றும் சுவாசப் பிரச்சினைகளுடன் அவதிப்பட்டனர்.
புறநகர் பகுதிகளில் இருந்து அதிகாலை தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்கள் நோக்கி சொந்த ஊர்களுக்கு ஏராளமானோர் பேருந்து மற்றும் கார்களில் புறப்பட்டு சென்றனர். கடும் புகைமூட்டம் காரணமாக பார்வையில் தெளிவின்மை நிலவியதால், அனைத்து வாகனங்களும் ஊர்ந்தபடியே சென்றன. சில நேரங்கள் வாகனங்கள் அப்படியே சாலைகளில் நிறுத்தப்பட்டன. இதனால் ஜிஎஸ்டி சாலை போன்றவற்றில் கடும் போக்குவரத்து நெரிசல் நிலவியது.
கடும் புகை மற்றும் பனி மூட்டத்தால், சிக்னல் சரியாக தெரியாததால் சென்னையில் இருந்து புறநகருக்கு செல்லும் மின்சார ரயில்களும், புறநகரங்களில் இருந்து சென்னைக்கு வரும் ரயில்களும் சிறிது நேரம் தாமதமாகின. தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வந்த விரைவு ரயில்களும் மெதுவாக இயக்கப்பட்டன.
போகி புகை, பனி மூட்டத்தால் சென்னையில் 20 விமானங்களின் வருகை மற்றும் 24 விமானங்களின் புறப்பாடு தாமதமானது. சிங்கப்பூர், லண்டன், இலங்கை, டெல்லியில் இருந்து வந்த 4 விமானங்கள் சென்னையில் தரையிறங்க முடியாததால் ஹைதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டன.
சென்னை மாநகரில் போகியால் ஏற்பட்ட மாசு நிலவரம் குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை மாநகராட்சியின் 15 மண்டலங்களில் போகி பண்டிகைக்கு முன்பு 13-ம் தேதி காலை 8 மணி முதல் 14-ம் தேதி காலை 8 மணி வரை 24 மணி நேரம் காற்றின் தரம் கண்காணிக்கப்பட்டது. அதன்படி, போகி அன்று காற்றில் கலந்துள்ள கந்தக-டை-ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு ஆகிய வாயுக்களின் அளவு 15 மண்டலங்களிலும் அனுமதிக்கப்பட்ட தர அளவான 80 மைக்ரோகிராம் அளவுக்கு (1 கனமீட்டரில்) உட்பட்டு இருந்தது.
காற்றில் கலந்துள்ள பிஎம். 2.5 அளவு நுண்துகள்களின் அளவு குறைந்தபட்சமாக 52 மைக்ரோகிராம், அதிகபட்சமாக 111 மைக்ரோகிராம் வரை இருந்தது. இதில் அனுமதிக்கப்பட்ட அளவு 60 மைக்ரோகிராம் ஆகும். பிஎம்10 அளவு நுண்துகள்களின் அளவு குறைந்தபட்சமாக 118, அதிகபட்சமாக 289 மைக்ரோகிராம் வரை இருந்தது. இதில் அனுமதிக்கப்பட்ட அளவு 100 மைக்ரோ கிராம் ஆகும்.
காற்று தர குறியீடு அடிப்படையில் குறைந்தபட்சமாக அண்ணாநகரில் 131 ஆகவும் (மிதமான அளவு) அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் 270 ஆகவும் (மோசமான அளவு) இருந்தது என கண்டறியப்பட்டது. போகி நாளில் சென்னை விமான நிலையத்தில் விமானம் வருகை மற்றும் புறப்படுவதில் தடங்கல் ஏற்பட்டது.
இதற்கு காரணம், காற்றில் இருந்த அதிக ஈரப்பதம், குறைந்த காற்றின் வேகம் ஆகியவற்றால் பார்வையில் தெளிவின்மை ஏற்பட்டது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ள ரியல்டைம் தரவுகளின்படி, மணலி, பெருங்குடி, கொடுங்கையூர், எண்ணூர், அரும்பாக்கம் ஆகிய இடங்களில் மாசு அளவு உச்சநிலையை (400-க்குமேல் 500 மைக்ரோகிராம் வரை) எட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT