Published : 14 Jan 2024 09:54 AM
Last Updated : 14 Jan 2024 09:54 AM

தூய்மை நகரங்கள் பட்டியலில் சென்னை தொடர்ந்து முன்னேற்றம்: மாநகராட்சி நிர்வாகம் விளக்கம்

சென்னை: மத்திய அரசின் வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற விவகாரத் துறை சார்பில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும் இந்தியா முழுவதும் உள்ள நகரங்களில் தூய்மைக்கான மதிப்பீடு நடத்தப்பட்டு தரவரிசை பட்டியல் வெளியிடப்படுகிறது.

அதன்படி, 2023-ம் ஆண்டுக்கான தரவரிசை பட்டியல் கடந்த 11-ம் தேதி டெல்லியில் வெளியிடப்பட்டது. அதில் சென்னை மாநகராட்சி 199-வது இடம் பிடித்துள்ளது. இதை பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் உள்ளிட்டோர் விமர்சித்துள்ளனர்.

இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு வெளியிடப்பட்ட தூய்மைக்கான மதிப்பீட்டில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகரங்களுக்கு தனியாக தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு, அதில் மொத்தம் 45 நகரங்களில் சென்னை மாநகராட்சி 44-வது இடம் பிடித்தது. தற்போது வெளியிடப்பட்ட பட்டியலில் 10 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட மதிப்பீடு கணக்கில் கொள்ளப்படவில்லை.

ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட நகர்ப் புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மட்டுமே தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு மதிப்பீடு வழங்கப்பட்டுள்ளது. இதில் இந்தியா முழுவதும் மொத்தம் உள்ள 446 நகர்ப் புற உள்ளாட்சி அமைப்புகளில் சென்னை மாநகராட்சி 199-வது இடத்தைப் பெற்றுள்ளது. கடந்த ஆண்டு நிர்ணயிக்கப்பட்ட மொத்த மதிப் பெண்ணான 7,500-ல் சென்னை மாநகராட்சிக்கு 2,866 மதிப்பெண்கள் ( 37.5 சதவீதம் ) பெற்றது.

ஆனால் இந்தாண்டு முன்னேற்றம் அடைந்து 4,313 மதிப்பெண் ( 45 சதவீதம் ) பெற்றுள்ளது. இந்த ஆண்டு, தமிழ்நாட்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் பெற்ற சராசரி மதிப்பெண்கள் 2,988. தேசிய அளவில் உள்ளாட்சி அமைப்புகள் பெற்ற சராசரி மதிப் பெண்கள் 3,526 ஆகும். எனவே இந்த ஆண்டும் சென்னை மாநகராட்சி, தமிழக அளவிலும், தேசிய சராசரி அளவைக் காட்டிலும் அதிக மதிப்பெண்களை பெற்று முன்னேறியுள்ளது. இவ்வாறு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x