Published : 12 Jan 2024 06:05 AM
Last Updated : 12 Jan 2024 06:05 AM
விழுப்புரம்: மரக்காணம் அருகே பக்கிங்காம் கால்வாய் அருகில் உள்ள முகத்துவாரம் வழியாக மழைநீர் கடலில் கலக்கிறது. அண்மையில் பெய்த மழையால் பக்கிங்காம் கால்வாயில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தற்போது வெள்ளம் குறையத் தொடங்கியுள்ளதால் பக்கிங்காம் கால்வாயில் மீன்பிடித் தொழில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக மரக்காணம் பகுதியில் உள்ள முகத்துவாரத்தில் இருந்துசுமார் 15 கி.மீ தூரத்துக்கு பக்கிங்காம் கால்வாயில் வாழக்கூடிய பல ஆயிரக்கணக்கான மீன்கள் உயிரிழந்து, கடற்கரையோரம் கரை ஒதுங்கியுள்ளன.
இந்த மீன்கள் பருவநிலை மாற்றத்தின் காரணமாக இறந்து விட்டதா? அல்லது இறால் தொழிற்சாலைகளில் இருந்து வெளியேற்றப்படும் ரசாயனம் கலந்த கழிவுநீர் முகத்துவாரத்தின் வழியாக பக்கிங்காம் கால்வாயில் கலந்ததால் இந்த மீன்கள் உயிரிழந்தனவா? என்று தெரியவில்லை.
சுற்றுச்சூழல் நலன் கருதி கரை ஒதுங்கி இருக்கும் மீன்களை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக அகற்றி, அவற்றை பாதுகாப்பான முறையில் அப்புறப்படுத்த வேண்டும். மீன் உயிரிழப்புக்கான காரணம்என்னவென்று மீன்வளத்துறையினர் வெளிப்படையாக தெரிவிக்க வேண்டும் என்று மரக்காணம் பகுதி மக்கள் மற்றும் மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT