Published : 11 Jan 2024 09:46 PM
Last Updated : 11 Jan 2024 09:46 PM
சென்னை: தமிழக கடலோர வளங்களை மீட்பதற்காக “நெய்தல் மீட்சி இயக்கத்தினை” தொடங்குவதற்கான ஆணைகளை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டது. தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில், 1076 கிலோமீட்டர் தூரத்தை மையமாகக் கொண்டு, வரும் ஐந்து ஆண்டுகளில் உலக வங்கியின் நிதி உதவியுடன் நெய்தல் மீட்சி இயக்கம் செயல்படுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: தமிழ்நாடு காலநிலை மாற்ற இயக்கம், பசுமைத் தமிழ்நாடு இயக்கம், தமிழ்நாடு ஈரநில இயக்கம், ஆகியவற்றைத் தொடர்ந்து, அரசின் நான்காவது திட்டமான தமிழக கடலோர வளங்களை மீட்பதற்காக “நெய்தல் மீட்சி இயக்கத்தினை” தொடங்குவதற்கான ஆணைகளை தமிழக அரசு புதன்கிழமை வெளியிட்டது. இதற்கான அறிவிப்பை 2023-2024 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை உரையில் நிதி மற்றும் மனிதவள மேலாண்மை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தின் 14 கடலோர மாவட்டங்களில், 1076 கிலோமீட்டர் தூரத்தை மையமாகக் கொண்டு, வரும் ஐந்து ஆண்டுகளில் உலக வங்கியின் நிதி உதவியுடன் நெய்தல் மீட்சி இயக்கம் செயல்படுத்தப்படும். கடற்கரையோர பல்லுயிர் பெருக்கம், கடற்கரையோரப் பாதுகாப்பு, கடற்கரையோர சமூகங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துதல் மற்றும் கடலோரப் பகுதிகளில் மாசுக் கட்டுப்பாடு உள்ளிட்ட நான்கு முக்கிய கருப்பொருட்களை இத்திட்டம் கொண்டுள்ளது.
நீலப் பொருளாதாரத்தின் திறனைப் பயன்படுத்திக் கொள்ள முதன்முதலில் தமிழ்நாடு புளூ கார்பன் நிறுவனத்தை அமைப்பதை இந்தத் திட்டம் கருதுகிறது. தமிழ்நாடு "புளூ கார்பன் ஏஜென்சி" சதுப்புநிலங்கள், பவளப்பாறைகள் மற்றும் உவர் சதுப்பு நிலங்களை மீட்டெடுக்கும். மன்னார் வளைகுடாவில் உள்ள கரியாச்சல்லி தீவு, பவளப்பாறைகளை புனரமைக்கும் திட்டத்தின் கீழ் எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் பின்வரும் முயற்சிகளையும் மேற்கொள்ளும்.
இம்முயற்சியின் கீழ் கடற்கரையோர பல்லுயிர் பாதுகாப்புக்கு குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. 11 கடற்கரைகளை நீலக் கொடி கடற்கரைகள் என சான்றளிக்க அரசு திட்டமிட்டுள்ளது. பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை வசதிகளை அமைப்பதில் கடற்கரையோர சமூகங்களைச் சேர்ந்த இளைஞர்களை ஈடுபடுத்தவும், கைவிடப்பட்ட மற்றும் பயனற்ற மீன்பிடி உபகரணங்களை அகற்றவும், பிளாஸ்டிக் கழிவுகள் அதிகம் உள்ள இடங்களைக் கண்டறிதல் உள்ளிட்ட மாசுக் குறைப்புக்கான சுழற்சிப் பொருளாதாரத் தீர்வுகளுக்கான முன்முயற்சிகளில் ஈடுபடவும் திட்டமிடப்பட்டுள்ளது.
ஆறுகளின் வழித்தடங்களில் அதிக மாசு உள்ள பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகளை முறையாகப் பிரித்து சேமித்து வைப்பதற்கான பொருள் சேகரிப்பு வசதிகள் மற்றும் அப்பொருட்களை மறுசுழற்சி செய்யும் வசதிகள் ஆகியவற்றை நிறுவுவதன் மூலம் கடல் மாசுபாடு தடுக்கப்படும். மேலும் சேகரிப்பு வசதிகளை இணைக்க மின்னணு கழிவுப் பரிமாற்ற தளத்தை உருவாக்குதல், மறுசுழற்சி மற்றும் பொருட்களை மீண்டும் பயன்படுத்துதல், பயனுள்ள பிளாஸ்டிக் கழிவு மேலாண்மை. மீள்குடியேற்றமான வீடுகள், சுற்றுச்சூழலுக்கு உகந்த உள்கட்டமைப்பு, காலநிலைக்கேற்ற கடலோர விவசாயம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆதாரங்கள், விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் காலநிலை மாதிரி கடலோர கிராமங்களை உருவாக்குதல் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் திறன் மேம்பாட்டு முயற்சிகள் மூலம் சமூகத்தினை ஈடுபடுத்துதல் ஆகியவை இத்திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும், என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT