Published : 07 Jan 2024 04:06 AM
Last Updated : 07 Jan 2024 04:06 AM
சென்னை: சென்னை எண்ணூரில் பிடிபட்ட 6 கூழைக்கடா நாரை பறவைகளின் உடல்கள் மீது படிந்துள்ள எண்ணெய் படலங்களை நீக்கும் பணிகளை வனத் துறையினர் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை மணலி பகுதியில் கடந்த டிசம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்ட அதி கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கின் போது, அப்பகுதியில் உள்ள நிறுவனங்களில் இருந்து பெட்ரோலிய எண்ணெய் கசிந்து பக்கிங் ஹாம் கால்வாய் மற்றும் கொசஸ் தலையாற்றில் பரவியது. அது எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் பரவி, மீனவர் குடியிருப்பு பகுதிகளான நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், எண்ணூர் முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் படர்ந்து கடலில் சேர்ந்தது.
இதனால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள், வலைகளில் எண்ணெய் கழிவுகள் படிந்து பாழாயின. ஏராளமான மீன்கள் உள்ளிட்ட கடல்வாழ் உயிரினங்கள் செத்து மிதந்தன. வழக்கமாக எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் ஏராளமான பறவைகள் இரை தேடி வரும் நிலையில்,பெட்ரோலிய எண்ணெய் வாடையால் இரை கிடைக்காமல் பறவைகள் இடம் பெயர்ந்து பிற நீர்நிலைகளுக்கு சென்று விட்டன. சுமார் 100 பறவைகள் அதே பகுதியில் இரைதேடி, முகத்துவாரப் பகுதியில் நீரில் படிந்திருந்த எண்ணெய் படலத்தில் சிக்கி, உடல் முழுவதும், இறக்கைகளிலும் எண்ணெய் படலம் படிந்து, காகங்களை போன்று நிறம் மாறின.
பறவைகளின் சிறகுகளில் எண்ணெய் படிந்ததால் பளு அதிகமாகி அவற்றால் வழக்கமான வேகத்தில் பறக்க முடியவில்லை. இரையை வேட்டையாடவும் முடியாமல் போனது. உணவு கிடைக்காமல் சோர்ந்து கிடக்கும் பறவைகளை பிடிக்கும் பணியில் வனத் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதுவரை 6 கூழைக்கடா நாரை பறவைகளை பிடித்து, கிண்டி சிறுவர் பூங்காவில் பராமரித்து வருகின்றனர்.
இது தொடர்பாக வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது, "பிடிபட்டுள்ளபறவைகளின் மீது படிந்துள்ள எண்ணெய் கழிவுகளை வீரியம் குறைந்த சலவை பொருட்களைக் கொண்டுதினமும் தூய்மைப்படுத்தி வருகிறோம். தினமும் அவற்றுக்கு உயிருள்ள மீன்கள் உணவாக வழங்கப்பட்டு வருகிறது. சுமார் 45 நாட்கள் பராமரித்து, எண்ணெய் படலத்தை நீக்கி, நீர் நிலைகளில் விட திட்டமிட்டிருக்கிறோம்" என்றனர்.
வனத்துறை சார்பில் எண்ணூர் பகுதிகளை சுற்றியுள்ள நீர்நிலைகள், அடையாறு முகத்துவாரம், கூவம் முகத்துவாரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம். வேறு எங்கும் எண்ணெய் கழிவுகள் படிந்த பறவைகளை பார்க்க முடியவில்லை. எண்ணூர் முகத்துவார பகுதியில் மட்டும் தான் காணப்பட்டன. அவை அனைத்தையும் பிடிக்க முடியவில்லை. இதுவரை நடந்த ஆய்வில், எண்ணெய் படிந்து இறந்த நிலையில் பறவைகள் ஏதும் கண்டெடுக்கப்படவில்லை.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT