Published : 04 Jan 2024 06:38 PM
Last Updated : 04 Jan 2024 06:38 PM
ராமேசுவரம்: ராமேசுவரம் தீவைச் சுற்றிலும் உள்ள மன்னார் வளைகுடா உயிர்க்கோளக் காப்பக கடல் பிராந்தியத்தில் பவளப்பாறைகள் அதிகம் உள்ளன. இவை பல அரியவகை கடல் வாழ் உயிரினங்களின் வாழ்விடமாக திகழ்கின்றன. விற்பனைக்காக வெட்டி எடுப்பது, வலைகளில் சிக்கிக் கொள்வது உள்ளிட்ட காரணங்களால் இவை அழியத் தொடங்கியதால் அவற்றை பாதுகாக்க பவளப்பாறைகளின் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.
ராமேசுவரத்துக்கு வரும் பக்தர்களிடம் தண்ணீரில் பவளப்பாறைகளை மிதக்க வைத்து ‘ராமர் பாலம் கட்டிய கல்' என கூறி காணிக்கைகளை வசூலித்து வருகின்றனர். மேலும் சிலர் 100 கிராம் எடை கொண்ட சிறிய பவளப்பாறைகளை கூட ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து வருகின்றனர்.
எனவே, தடை செய்யப்பட்ட பவளப்பாறை விற்பனையைத் தடுக்க மாவட்ட நிர்வாகமும், காவல் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமேசுவரத்தைச் சேர்ந்த சுப்புராமன் ‘இந்து தமிழ் திசை' உங்கள் குரல் சேவையில் தொடர்பு கொண்டு கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரிகள் கூறியதாவது: 2000 ஆண்டுகள் வரையிலும் வாழக்கூடிய பவளப்பாறைகளை அழிப்பது எளிது. ஆனால் அதனை செயற்கையாக உருவாக்குவது மிகக் கடினம். பவளப்பாறைகளை அழிப்பதால் கடலில் வாழும் ஏராளமான உயிரினங்கள் அழிவதுடன், புவி வெப்பமயமாதலும் அதிகரிக்கும்.
பவளப்பாறை கடலிலிருந்து வெளியே எடுக்கப்பட்ட உடன் அது உயிரிழந்து விடும். அது உலர்ந்த பின்னர் தண்ணீரில் மிதக்கும் திறனைப் பெறும். கடற்கரை அல்லது கடலின் உள்ளே இருந்து பவளப்பாறைகளை எடுப்பதோ, கையில் வைத்து புகைப்படம் எடுப்பதோ, பிற நபர்களுக்கு விற்பனை செய்ய முயற்சிப்பதோவன உயிரின பாதுகாப்புச் சட்டம் 1972-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும். இதற்கு 3 முதல் 7 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், ரூ. 25 ஆயிரம் முதல் அபராதமும் விதிக்கப்படும், என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT