Published : 04 Jan 2024 06:39 AM
Last Updated : 04 Jan 2024 06:39 AM
மதுரை: பண்பாடு மற்றும் சூழலியல் தளங்களில் பெண் களின் பங்களிப்பு மிகக் குறைவாக உள்ளது. அப்படியே இருந்தாலும் பெண்களின் பங்களிப்பு மறைக்கப்பட்டுவிடுவதாக கருத்து நிலவுகிறது. பெண்களின் பங்கேற்பை ஊக்கப்படுத்தவும், அடையாளத்தை கண்டடையவும், சூழலியல் மற்றும் பண்பாட்டு துறைசார் கருத்துகளை பெண்களிடம் கொண்டு செல்லவும் மதுரை இயற்கை பண்பாட்டு மையம் சார்பில் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
அண்மையில் மதுரை, பேரையூர், ஊட்டி, ராஜபாளையம், திருச்சி, பெரம்பலூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து வந்திருந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள், மதுரை மேலூர் வட்டம் மாங்குளம் பகுதியில் உள்ள பாண்டமுத்துமலையில் பண்பாட்டு சூழல் நடைப்பயணம் மேற்கொண்டனர். இதுபோன்ற சுழல் நடைப்பயணத்தில், பெண்கள், ஆண்கள், குழந்தைகள் என அனைத்து தரப்பினரும் பங்கேற்பது வழக்கம். ஆனால், இந்த நடைப்பயணத்தில் பெண்கள் மட்டுமே பங்கேற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
பாண்டமுத்து மலையில் உள்ள முற்றுப்பெறாத குடைவரை கோயிலை பார்வையிட்டனர். பாண்டமுத்து மலையின் மீது ஏறி அங்குள்ள பாறைமடை அம்மன் கோயிலையும் அங்கிருந்த சுனையையும் பார்வையிட்டனர். மலையின் உச்சியிலிருந்து தெரியும் மதுரையின் அழகை கண்டு ரசித்தனர்.
பேராசிரியர் தேவி அறிவு செல்வம், மருத்துவர் ஹிமோக்ளோபின், தலைமை ஆசிரியர் மு.லிங்கேஸ்வரி, வரலாற்றுத் துறை இணைப் பேராசிரியர் நாகேஸ்வரி, வழக்கறிஞர் கீர்த்தி, ஆசிரியர்கள் மு.பத்மா, சங்கவி, சங்கீதா, விவசாயி நந்தினி, அக்குஹீலர் துர்காதேவி, மாங்குளம் மாயாண்டிபுரம் ஊரை சேர்ந்த தமிழரசி மற்றும் காட்டுயிர் விலங்கியல் பயிலும் கல்லூரி மாணவிகளும் இந்நிகழ்வில் பங்கெடுத்தனர்.
கோயில் கட்டிடக் கலை மற்றும் சிற்பத் துறை ஆய்வாளர் பேராசிரியர் ப.தேவி அறிவுசெல்வம் பேசுகையில், கி.பி. ஏழாம் நூற்றாண்டில் திருப்பரங்குன்றத்தில் கொற்றவை மற்றும் ஜேஷ்டா தேவிக்கு குடைவரை கோயிலை பாண்டிய மன்னரின் தளபதியான சாத்தன் கணபதியின் மனைவி நக்கன் கொற்றி அமைத்துள்ளார்.
12-ம் நூற்றாண்டில் திருவாதவூரில் கவுரி மற்றும் சந்திரசேகருக்கு பெண் ஒருவர் கோயில் எடுத்துள்ளார். இதுபோல், ஏழாம் நூற்றாண்டிலிருந்து 18-ம் நூற்றாண்டு வரை பண்பாட்டிலும், பொது சேவையிலும் பெண்கள் பலர் ஈடுபட்டுள்ளனர். எனவே, பெண்கள் வீட்டு வேலை மற்றும் பணியிடங்களுடன் முடங்கிவிடாமல் வரலாற்றை அறிந்து கொள்ள வெளியே வர வேண்டும்.
தமிழ்நாட்டில் கல் பாறைகளை குடைந்து குடைவரை கோயில்களை அமைக்கும் பணி கி.பி. 5-ம் நூற்றாண்டிலிருந்து கி.பி. 9-ம் நூற்றாண்டு வரை நடைபெற்றுள்ளது. மதுரையில் 9 குடைவரை கோயில்கள் உள்ளன. அதில் ஒன்று இந்த பாண்டமுத்து மலையில் உள்ள குடைவரை கோயில். குடைவரை கோயில்களுக்கு ஆகம விதிகள் கிடையாது. இப்பகுதியைச் சுற்றி 32 குளங்கள் இருக்கின்றன. இவ்வாறு அவர் பேசினார்.
பறவையியல் ஆய்வாளரும், மருத்துவருமான ஹிமோக்ளோபின் பேசுகையில், தினமும் வீட்டு வேலைகள், அலுவலக வேலைகள், குடும்பத்தை கவனிப்பது என உழலும் பெண்களுக்கு பறவை பார்த்தல் என்பது வீட்டை தாண்டி இருக்கும் வேறு ஒரு உலகத்தை தரிசிப்பதாக அமையும்.
பறவைகளை ஆய்வு நோக்கில் பார்ப்பதன் வழியாக நம் சுற்றுச்சூழலில் ஏற்படும் மாற்றங்களை நம்மால் முன்னதாகவே உணர முடியும். பறவைகள் நம் சூழலின் காலக்கண்ணாடி. நம் அடுத்த தலைமுறைக்கு பறவைகளை பற்றிய அறிவியல் செய்திகளை கற்றுக் கொடுக்க வேண்டும்.
இன்றைய சுற்றுச்சூழல் நடைப் பயணத்தில் இந்த பாண்டமுத்து மலையை சுற்றி பூஞ்சை பருந்து, மாங்குயில், சூறைக்குருவி, தகைவிலான் குருவி, புள்ளி ஆந்தை, தேன்சிட்டு, அன்றில், வென்மார்பு மீன்கொத்தி உள்ளிட்ட 34 வகை பறவைகள் இருப்பதை ஆவணப்படுத்தியுள்ளோம் என்று பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT