Published : 03 Jan 2024 04:41 PM
Last Updated : 03 Jan 2024 04:41 PM
ராமேசுவரம்: ராமநாதபுரம் மாவட்ட கடற்பகுதியில் அரியவகை பறக்கும் கர்னார்ட் மீன்கள் மீனவர்கள் வலையில் சிக்கினால் கடலிலேயே மீண்டும் விட்டு விடுமாறு மீனவர்களிடம் வலியுறுத்தப்பட்டு வருகிறது. பறக்கும் கர்னார்ட் மீன் பசிபிக், அட்லாண்டிக், ஆர்டிக் மற்றும் இந்தியப் பெருங்கடல்களில் வாழும் மீனினம். பழுப்பு, பச்சை, மஞ்சள் மற்றும் சிகப்பு நிறங்களில் காணப்படுகிறது. இவை மன்னார் வளைகுடா கடற்பகுதியில் அரிதாகக் காணப்படுகிறது.
இந்த மீனின் துடுப்புகள் மீன்களை இல்லாமல் பறவைகளின் இறக்கையைப் போன்று பெரிதாக உள்ளது. இதனால் நீரைக் கிழித்து கடலின் மேற்பரப்பில் தனது துடுப்புகளை இறக்கைகள் போன்று பயன்படுத்தி சில மீட்டர் தூரம் பறக்கவும் முடியும். மீண்டும் தண்ணீருக்குள் செல்லும்போது துடுப்புகளை சுருக்கிக் கொள்ளும். வேட்டையாடுவதற்கும், தன்னை இரையாக்கிக் கொள்ள வரும் மற்ற கடல்வாழ் உயிரினங்களிடமிருந்து தற்காத்துக்கொள்ள பறக்கும் திறன் பெற்றிருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
இதனால் இந்த மீனுக்குப் பறக்கும் கர்னார்ட் மீன் (flying gurnard fish) என்று பெயர் உருவானது. இந்த. மீனுக்கு பெரிய கண்களும் உண்டு. இது இரண்டு கிலோ எடை, 50 செமீ நீளம் வரையிலும் வளரக்கூடியது. டால்பின், சூறை உள்ளிட்ட மீன்களும், சில கடற் பறவைகளும் இந்த மீனை விரும்பிச் சாப்பிடுகின்றன.
இதுகுறித்து மீன்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது: எக்சோசீடஸ்டே (Exocoetidae) என்ற குடும்பத்தைச் சேர்ந்த பறவை முறல் மீன்கள் அட்லாண்டிக் மற்றும் ஆர்டிக் பகுதிகளைத் தவிர்த்து மற்ற உலகம் முழுவதும் உள்ள கடற்பகுதிகளில் காணப்படுகின்றன.
ஆனால் பறக்கும் கர்னார்ட் மீன்கள் இந்தியாவில் மன்னார் வளைகுடா பகுதியில் மட்டுமே அரிதாகக் காணப்படுகின்றன. இதனை மீனவர்கள் சாப்பிடுவது கிடையாது. மீனவர்கள் பயன்படுத்தும் இரட்டை மடி, சுருக்கு மடிகளில் இவை சிக்குகின்றன.
இது அரியவகை மீன் என்பதால் மீனவர்கள் வலையில் பறக்கும் கர்னார்ட் மீன்கள் சிக்கினால் கடலிலேயே விட்டு விடுமாறு மீனவர்களிடம் வலியுறுத்தப்படுகிறது, என்று கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT