Last Updated : 28 Dec, 2023 06:13 PM

 

Published : 28 Dec 2023 06:13 PM
Last Updated : 28 Dec 2023 06:13 PM

மன்னார் வளைகுடா பகுதியில் கடற்பசு, டால்பின்களை பாதுகாக்க செயற்கை பவளப்பாறைகள், கடற்புற்கள்

செயற்கையாக வளர்க்கப்பட்ட பவளப்பாறைகள்

ராமநாதபுரம்: மன்னார் வளைகுடா பகுதியின் கடல் வளத்தையும், கடற்பசு, டால்பின்கள் உள்ளிட்ட கடல்வாழ் அரிய உயிரினங்களையும் பாதுகாக்கும் பொருட்டு, செயற்கை பவளப்பாறைகள், கடற்புற்கள் நட்டு வளர்க்கும் பணி நடைபெற்று வருகிறது. தமிழக கிழக்குக் கடற்கரையில் பாம்பன் தீவிலிருந்து கன்னியாகுமரி வரை மன்னார் வளைகுடா பகுதியாகும். இதில் ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் முதல் தூத்துக்குடி மாவட்டம் வரையுள்ள 560 சதுர கி.மீட்டர் பரப்பைக் கொண்ட 21 தீவுகள், ‘மன்னார் வளைகுடா கடல்வாழ் உயிரின தேசியப் பூங்காவாக’ பாதுகாக்கப்பட்டு வருகிறது.

இந்த தேசிய பூங்கா இந்தியா மட்டுமில்லாமல், தென் மற்றும் தென்கிழக்கு ஆசியாவிலேயே ஏற்படுத்தப்பட்ட முதல் கடல்சார் தேசியப் பூங்காவாகும். இப்பூங்கா பகுதியில், அரிய கடல்வாழ் உயிரினங்கள், பவளப்பாறைகள், மாங்குரோவ் காடுகள் உள்ளன. இதில் 104 வகையான பவளப் பாறைகள், 147 வகையான கடற்பாசிகள், 160 வகையான இடம்பெயர்ந்து செல்லக்கூடிய பறவையினங்கள், 450 வகையான மீன் இனங்கள் என 3,600 வகை கடல்வாழ் உயிரினங்கள் காணப்படுகின்றன. மேலும், உலகின் அரிய வகையான கடற்பசு (டுகாங் டுகான்), டால்பின்கள், கடற்குதிரை, கடற்புல் உள்ளிட்ட பல்வேறு வகைகள் உள்ளன.

மன்னார் வளைகுடாவில் கடலுக்கு அடியில் வளர்க்கப்பட்டு வரும் கடற்புற்கள்

கடற்கரையோரங்களில் கழிவுநீர் கலப்பு போன்ற சுற்றுச்சூழல் பாதிப்பு, சட்டத்துக்குப் புறம்பாக பவளத்திட்டுகளை அழித்தல் உள்ளிட்ட செயல்பாடுகளால் காப்பகத்துக்கு பெரும் அச்சுறுத்தல் தொடர்கிறது. இதுவரை 65 சதவீத பவளத்திட்டுகள் அழிந்துவிட்டன. அதனால் தேசிய பூங்கா பகுதியில் கடல்வாழ் உயிரினங்களை பாதுகாக்கும் வகையில், நடுக்கடலில் இருந்து பவளப்பாறைகளை எடுத்துவந்து தீவுப்பகுதியில் ஓரளவுக்கு ஆழமுள்ள இடங்களில் செயற்கையாக வளர்க்கும் பணி, கடந்த சில ஆண்டுகளாக நடைபெற்று வருகிறது. இதற்காக மத்திய, மாநில அரசுகள் நிதி ஒதுக்கி வருகின்றன.

இதுகுறித்து மன்னார் வளைகுடா தேசிய பூங்கா வன உயிரினக் காப்பாளர் பகான் ஜகதீஷ் சுதாகர் கூறியதாவது: ராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களில் கடந்த 2022-ல் 600 சதுர மீட்டருக்கு ரூ.20 லட்சம் செலவில் செயற்கை பவளப்பாறைகள், கடற்புற்கள் அமைக்கப்பட்டன. 2023-ம் ஆண்டு 4,500 ச.மீ. பரப்பில் செயற்கை பவளப்பாறைகள் அமைக்க திட்டமிட்டு, இதுவரை 1,500 ச.மீட்டருக்கு அமைக்கப்பட்டுள்ளன. மேலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்க கடந்தாண்டு 70 ஹெக்டேர் பரப்பில் மாங்குரோவ் (அலையாத்தி காடுகள்) செடிகள் நடப்பட்டன. இந்தாண்டு 85 ஹெக்டேர் பரப்பில் மாங்குரோவ் செடிகள் நட திட்டமிட்டு, இதுவரை ராமநாதபுரம், தூத்துக்குடியில் 25 ஹெக்டேருக்கு செடிகள் நடப்பட்டுள்ளன என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x