Published : 27 Dec 2023 08:42 PM
Last Updated : 27 Dec 2023 08:42 PM
பழநி: திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயிலில் ரூ.20 லட்சம் செலவில் பக்தர்கள் சாப்பிட்ட இலைகளை அரைத்து கூழாக்கி உரம் தயாரிக்க ஏற்பாடு நடந்து வருகிறது. இதற்காக, அன்னதான கூடத்தில் இருந்து மலையடிவாரம் வரை ராட்சத குழாய் பொருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.
பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு விடுமுறை நாட்கள் மற்றும் திருவிழாக் காலங்களில் அதிகளில் பக்தர்கள் வருகின்றனர். தற்போது சபரிமலை ஐயப்ப சீசனை முன்னிட்டு தினமும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இங்கு வரும் பக்தர்களுக்காக 2002-ம் ஆண்டு தமிழக முதல்வரின் அன்னதான திட்டத்தில் தினமும் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
அதன் பின், கடந்த 2012-ம் ஆண்டு முதல் நாள் முழுவதும் அன்னதான திட்டமாக விரிவுப்படுத்தப்பட்டது. இத்திட்டத்தில் தினமும் காலை 8 முதல் இரவு 10 மணி வரை தொடர்ந்து சாதம், சாம்பார், ரசம், கூட்டு, பொரியல், பாயாசம், அப்பளம் மற்றும் ஊறுகாயுடன் அன்னதானம் வழங்கப்படுகிறது.
ஒரு பந்திக்கு 350 முதல் 450 பேர் வீதம் தினமும் 5,000 முதல் 7,000 பேர் வரை அன்னதானம் சாப்பிடுகின்றனர். பக்தர்கள் சாப்பிட்ட அன்னதான இலைகள் குப்பையில் கொட்டப்படுகிறது.
இந்நிலையில் அதில் இருந்து உரம் தயாரிக்க கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. இதற்காக, ரூ.20 லட்சம் மதிப்பில் நவீன இயந்திரம் மற்றும் ராட்சத குழாய்கள் சென்னையில் இருந்து வாங்கி பழநிக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
தற்போது மலைக்கோயிலில் உள்ள அன்னதான கூடத்தில் இருந்த மலையடிவாரம் வரை ராட்சத குழாய்கள் பொருத்தும் பணி நடந்து வருகிறது. நவீன இயந்திரத்தில் பக்தர்கள் சாப்பிட்ட இலைகள், காய்கறி கழிவுகளை போட்டு அரைத்து கூழாக்கி, குழாய் மூலம் மலையடிவாரத்தில் அமைக்கப்பட உள்ள உரத் தொட்டியில் சேமித்து உரமாக மாற்றுவதற்கு ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment