Published : 27 Dec 2023 04:00 AM
Last Updated : 27 Dec 2023 04:00 AM

வன எல்லையில் உள்ள கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு கட்டுப்பாடு @ கோவை

பிரதிநிதித்துவப் படம்

கோவை: வன எல்லையில் உள்ள ரிசார்ட்கள், கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து கோவை மாவட்ட வன அலுவலர் அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டி பல தங்கும் விடுதிகள், ரிசார்ட்கள், கேளிக்கை விடுதிகள் அமைந்துள்ளன. புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக அவை தயாராகி வருகின்றன.அங்கு, இரவு நேரங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது அதிக ஒலி எழுப்பும் ஒலி பெருக்கிகளை பயன்படுத்தக்கூடாது.

வாண வேடிக்கைகள், பட்டாசுகளை வெடிக்கக்கூடாது. அதிக அளவில் கூட்டம் சேர்த்து வாகன நெரிசல் ஏற்படுத்தி, அருகில் உள்ள வனம், வன விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடாது. அதிக ஒளி உமிழும் விளக்குகளை உபயோகிக்கக் கூடாது. ‘கேம்ப் ஃபயர்’ பயன்படுத்தக் கூடாது. வனப் பகுதியில் தீ ஏற்படும் எந்த செயலிலும் ஈடுபடக்கூடாது.

மது அருந்திவிட்டு நள்ளிரவில் வனத்தை ஒட்டியுள்ள சாலைகளில் வாகனத்தில் வரக்கூடாது. இதை கண்காணிப்பது விடுதி உரிமையாளர்களின் பொறுப்பாகும். வனப் பகுதி வழியாக செல்லும் சாலையை பயன்படுத்துவதாக இருந்தால், இரவு 8 மணிக்கு மேல் புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக பயன்படுத்தக்கூடாது.

புத்தாண்டு கொண்டாட்டத்தால் உண்டாகும் கழிவுகள் அனைத்தையும் வனப் பகுதிக்குள் கொட்டாமல், உரிய முறையில் அவற்றை விடுதி பொறுப்பாளர்கள் அப்புறப்படுத்த வேண்டும். விதிமீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும். எங்கேனும் விதிமீறல் இருப்பது தெரியவந்தால் 1800-42545456 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x