Published : 25 Dec 2023 04:08 AM
Last Updated : 25 Dec 2023 04:08 AM
ஓசூர்: ஓசூர் பகுதியில் கடும் பனிப்பொழிவு காரணமாக மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர். பகல் நேரத்திலும் சாலைகளில் புகை மண்டலம் போல பனி படர்வதால், வாகன ஓட்டிகள் பகல் நேரத்தில் முகப்பு விளக்கை ஒளிரவிட்டு செல்கின்றனர்.
தமிழக எல்லையான ஓசூர் கடல் மட்டத்திலிருந்து 2,883 அடி உயரத்தில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர், டிசம்பர், ஜனவரி மாதங்களில் கடும் குளிர் நிலவும். இந்தாண்டு கடந்த சில நாட்களாக ஓசூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களில் கடும் பனி நிலவிவருகிறது. இதனால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகி வருகின்றனர்.
குளிர்ந்த சீதோஷ்ண நிலை காரணமாகப் பொதுமக்கள் சளி, காய்ச்சலால் அவதிப்பட்டு வருகின்றனர். கடும் குளிர் காரணமாக அதிகாலை நேரத்தில் நடை பயிற்சி மேற்கொள்வோர், பணிக்குச் செல்வோர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதியம் 3 மணி அளவில் குளிர்ந்த காற்று வீசத் தொடங்கி நேரம் செல்ல செல்ல பனிப்பொழிவு தொடங்கி காலை 10 மணி வரையில் பனிக் காற்றின் தாக்கம் அதிகம் உள்ளது.
சாலைகளில் எதிரும், புதிருமாகச் செல்லும் வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனி மூட்டம் புகை மண்டலம் போல சாலைகள் முழுவதும் பரவியுள்ளதால், வாகன ஓட்டிகள் பகல் நேரத்திலும் முகப்பு விளக்கை ஒளிரவிட்டபடி செல்கின்றனர். பணிக்குச் செல்லும் தொழிலாளர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைவரும் குளிரைத் தாங்கும் வகையில் குளிர்கால ஆடைகளை அணிந்து செல்கின்றனர்.
மேலும், ஓசூர் நகரப்பகுதியில் உள்ள கடைகள் மற்றும் சாலையோரக் கடைகளில் குளிர் கால ஆடைகள் விற்பனை அதிகரித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment