Published : 24 Dec 2023 10:39 AM
Last Updated : 24 Dec 2023 10:39 AM
சென்னை: சென்னை மணலி பகுதியில் டிசம்பர் முதல் வாரத்தில் ஏற்பட்ட அதி கனமழை மற்றும் வெள்ளப் பெருக்கின்போது, அப்பகுதியில் உள்ள நிறுவனங்களில் இருந்து பெட்ரோலிய எண்ணெய் கசிந்து பக்கிங் ஹாம் கால்வாய் மற்றும் கொசஸ்தலை யாற்றில் பரவியது.
அது எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் பரவி, மீனவர் குடியிருப்பு பகுதிகளான நெட்டுக்குப்பம், எண்ணூர் குப்பம், எண்ணூர் முகத்துவாரம் உள்ளிட்ட பகுதிகளில் படர்ந்து கடலில் சேர்ந்தது. இதனால் கரையோரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மீன்பிடி படகுகள், வலைகளில் எண்ணெய் கழிவுகள் படிந்து பாழாயின. ஏராளமான மீன்கள் உள்ளிட்ட கடல் வாழ் உயிரினங்கள் செத்து மிதந்தன.
வீடுகளுக்குள்ளும், வெளியில் சுவர் பகுதிகளிலும் எண்ணெய் கழிவுபடிந்து பாதிப்பை ஏற்படுத்தியது. வீடுகளில் இருந்து ஏராளமான உடமைகள் சேதமாயின. இதனால் அப்பகுதிவாழ் மக்கள் மற்றும் மீனவர்கள் கடும் அவதிக்குள்ளாயினர். மீனவர்கள் இதுவரை கடலுக்கு செல்லாததால், அவர்கள் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.
எண்ணெய் படலங்களை அகற்றும் பணிகளை சிபிசிஎல் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. இதற்கிடையே பாதிக்கப்பட்டோர் விவரங்களை தமிழக அரசு சேகரித்துள்ளது. அதன்படி, எண்ணெய் கசிவால் 6 ஆயிரத்து 700 வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றுக்கு தலா ரூ.7,500, வாழ்வாதாரத்தை இழந்த 2,300 மீனவ குடும்பங்களுக்கு தலாரூ.12,500, பாதிக்கப்பட்ட 787 படகுகளுக்கு தலா ரூ.10 ஆயிரம் என ரூ.8 கோடியே 68 லட்சத்து 70 ஆயிரம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
வழக்கமாக எண்ணூர் முகத்துவாரப் பகுதியில் ஏராளமான பறவைகள் இரைதேடி வரும் நிலையில், எண்ணெய் கசிவால் அந்த பறவைகளும் பாதிக்கப்பட்டுள்ளன. அப்பகுதிகளில் ஏராளமான பறவைகளின் சிறகுகளில் எண்ணெய் கழிவுகள் படிந்து, பறக்கவே சிரமப்பட்டு வரு கின்றன.
வேட்டையாட, நீந்த முடியாது: இது தொடர்பாக பறவை ஆராய்ச்சியாளர் எஸ்.பாலச்சந்தர் கூறும்போது, ‘‘எண்ணூர் முகத்துவாரத்துக்கு வரும் பறவைகள் இரைதேடியே வருகின்றன. அவை வேட்டையாடி உண்ணக் கூடியவை. அதற்கு வேகம் அவசியம். பறவைகளின் சிறகுகளில் எண்ணெய் படியும்போது, பளு அதிகமாகி அவற்றால் வழக்கமான வேகத்தில் பறக்கவும் முடியாது. இரைக்காக வேட்டையாடவும் முடியாது. நீரில் நீந்தி செல்லவும் சிரமப்படும். இதனால் அவற்றுக்கு சரிவர உணவுகிடைக்காமல் நாளடைவில் இறக்க வும் நேரிடும்’’ என்றார்.
பறவைகளுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து வனத் துறை அதிகாரிகள் கூறியதாவது: எண்ணெய் கசிவால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் விலங்கினங்கள் மற்றும் தாவரங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்து வருகிறோம். எண்ணெய் கழிவு படர்ந்த உடனே பெரும்பாலான பறவைகள் முகத்துவாரப் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்துவிட்டன. சுமார் 100-க்கும் மேற்பட்ட பறவைகள் எண்ணெய் படர்ந்த நீரில் இரைதேடி, சிறகுகளில் எண்ணெய் படிவுகளுடன் காணப்படுகின்றன.
பல மாதங்களாகும்: அவற்றை பிடிப்பது சிரமம். இருப்பினும் சில பறவைகளை பிடித்து எண்ணெய் கறையை நீக்கி வருகிறோம். பறவைகளே நீரிலும், மண்ணிலும் புரண்டோ, வெயில் பட்டோ, எண்ணெய் கழிவு தானாக நீங்க சிறிது வாய்ப்பு உள்ளது. இதற்கு பல மாதங்கள் ஆகும். அதுவரை அவற்றுக்கு இரை தேடலில் நிச்சயம் சிரமம் இருக்கும். நாங்கள் எண்ணூர், அடையாறு போன்ற பகுதிகளில் செய்த ஆய்வுகளில், இதுவரை எண்ணெய் கழிவு படிந்த பறவைகள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்படவில்லை. இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...