Published : 24 Dec 2023 04:12 AM
Last Updated : 24 Dec 2023 04:12 AM

ஒருபுறம் குப்பை குவியல், மறுபுறம் கழிவுநீர் சாக்கடை... - அவதியில் அத்திப்பட்டு, அயப்பாக்கம் மக்கள்!

சென்னை: அம்பத்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட அம்பத்தூர் தொழில்பூங்கா, அத்திப்பட்டு மற்றும் அயப்பாக்கம், மேல், கீழ் அயனம்பாக்கம் பகுதிகளில் தொழிற்சாலைகள் ஏராளம்.

இப்பகுதிகளில் உள்ள கனகர தொழிற்சாலைகளுக்கு இணையாக அடுக்குமாடி குடியிருப்புகளும் ஏராளமாக கட்டப்பட்டு வருகின்றன. குறிப்பாக அத்திப்பட்டில் அரசு பன்னடுக்கு குடியிருப்பும், தனியார் பன்னடுக்கு குடியிருப்பு வளாகங்களும் மிகுதியாக உள்ளன. இப்பகுதி வெளி நாடுகளில் இருப்பது போன்ற புறத்தோற்றத்தை தந்தாலும், அகத்தோற்றம் இப்பகுதி மக்களை வாட்டி வதைக்கும் வகையில் உள்ளது.

அம்பத்தூர் தொழில் பூங்கா அத்திப்பட்டு நடேசன் நகரில் கனரக தொழிற்சாலைகளுக்கான உதிரி பாகங்கள்தயாரிக்கும் சிறிய தொழிற்சாலைகளும், பேக்கேஜிங் தொழிற்சாலைகளும், உணவுப் பொடருட்கள் உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளும், பெயிண்ட் தொழிற்சாலைகளும் அதிகமாக இயங்கி வருகின்றன.

முகப்பேர் மேற்கு விரிவாக்கத்தில் இருந்து மாந்தோப்பு சாலை வழியாக மேல் அயனம்பாக்கம் பகுதிகளில் உள்ள தனியார் பள்ளிகளுக்கு அதிகப்படியான வாகனங்கள் வந்து செல்வதால் அவ்வப்போது மேல் அயனம்பாக்கம் - அத்திப்பட்டு - வானகரம் பிரதான சாலை போக்குவரத்து நெரிசலில் சிக்கித் தவிக்கிறது.

இதனால் பிரதான சாலை வழியாக செல்ல முடியாதவர்கள் அயப்பாக்கம் ஐசிஎஃப் காலனி மற்றும் செல்லியம்மன் நகர், ராம் பூர்ணம் நகர் விரிவாக்கம், ஜேஆர் கேஸ்டில் டவுன் போன்ற பகுதிகளுக்கு செல்வோர் இப்பகுதியில் கல்பக கோபாலன் நடேசன் நகர் 2-வது குறுக்குத் தெரு வழியாக செல்லும் குறுகலான சிமெண்ட் பாதையை அதிகமாக பயன்படுத்தி வருகின்றனர்.

தனியார் பள்ளிகளுக்கு தங்களின் குழந்தைகளை குறித்த நேரத்துக்கு கொண்டுபோய்விட நினைக்கும் பெற்றோர் குறுகலான இவ்வழித்தடத்தில் உள்ள அபாயத்தைக் கருத்தில் கொள்ளாமல் ஆபத்பாந்தவனாய் இவ்வழித்தடத்தை கருதி பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பள்ளி நேரங்களில் இந்த வழித் தடம் பிஸியாகி விடுகிறது. ஆனால், ஆகாயத்தாமரை செடிகளுடன் கழிவுநீர் சூழ்ந்து நடுவே ஐந்தடி அகலம் கொண்ட இந்த வழித் தடத்தில் இருசக்கர வாகனங்கள் மட்டுமே அதுவும் பகலில் மட்டுமே பயணிக்க முடியும்.

அதுவும், தற்போது கழிவுநீர் முழுவதும் சூழ்ந்து உபயோகப்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இப்பாதையின் கீழே செல்லும் பாதாள சாக்கடையின் மேல் மூடிகள் ஆங்காங்கே உடைந்து இருப்பதால் இரவு நேரங்களில் இப்பாதையில் சென்றால் சாக்கடை பள்ளத்துக்குள் தவறி விழுந்து விபத்தில் சிக்க நேரிடும். அதே நேரம் இப்பகுதி குடியிருப்பாளர்கள் வளர்க்கும் எருமை மற்றும் பசு மாடுகளும் குப்பைகளில் உணவு தேடுவதற்காக இவ்வழித்தடத்தில் சுற்றித்திரிவதால் கழிவுநீர் சாக்கடையில் தவறி விழும் அபாயம் உள்ளது.

மேலும் சமீபத்தில் பெய்த மிக்ஜாம் புயல் காரணமாக இந்த வழித்தடம் முற்றிலுமாக வெள்ளம் சூழ்ந்து பயன்படுத்த முடியாத அளவுக்கு நீர்மட்டம் உயர்ந்தது. அதனால் செல்லியம்மன் நகர், ராம்பூர்ணம் நகர் மற்றும் அத்திப்பட்டு ஐசிஎஃப் காலனி பகுதியில் வசிப்போர் மேல் அயனம்பாக்கம் பகுதிக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இப்பகுதியில் தொழிற்சாலைகளின் கழிவுகளில் உள்ள வேதிப் பொருட்கள் அவ்வப்போது தீப்பற்றி எரியும்போது அருகில் உள்ள குப்பை குவியலும் பற்றி எரிகிறது. சில நேரங்களில் இந்த கழிவுகளுக்கு சிலர் தீ வைத்தும் செல்கின்றனர். இதனால் இப்பகுதிகளில் சுற்றுச்சூழல் கடுமையாக மாசடைந்துள்ளது.

அயப்பாக்கம், அத்திப்பட்டு மற்றும் மேல் அயனம்பாக்கம் பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் குறுகலான இப்பாதையையும், அருகில் உள்ள ‘எஸ்’ வளைவு சிமெண்ட் சாலையையும் விரிவுபடுத்த வேண்டுமென சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பலமுறை கோரிக்கை விடுத்தும், எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என குற்றம் சாட்டுகின்றனர்.

இது தொடர்பாக இப்பகுதியில் குடியிருக்கும் ரவி என்பவர் கூறும்போது, ‘‘இந்த வழித்தடத்தில் சாதாரண குப்பைகள் முதல் தொழிற்சாலைகளின் ரசாயன கழிவுகள் வரை கொண்டு வந்து கொட்டப்படுகிறது. இறைச்சிக் கடைக்காரர்கள் கெட்டுப்போன இறைச்சிகளை இப்பகுதி கழிவுநீர் சாக்கடைப்பகுதிகளில் ஆள்நடமாட்டம் இல்லாத இரவு நேரங்களில் வந்து கொட்டிவிட்டு செல்கின்றனர். இதனால் ஏற்படும் துர் நாற்றத்தால் மூக்கைப் பொத்திக் கொண்டு செல்ல நேரிடுகிறது.

இப்பகுதியில் உள்ள 2 தனியார் பள்ளிகளில் ஆயிரக் கணக்கான மாணவ, மாணவியர் படிக்கின்றனர். இதனால் பள்ளி நேரங்களில் மாணவர்களை குறுக்குப் பாதையில் விரைவாக டூவீலர்களில் அழைத்துச் செல்ல இந்த வழித்தடமே பிரதானமாக உள்ளது. நடேசன் நகர் 2-வது குறுக்குத்தெருவில் இருந்து ராம்பூர்ணம் நகர் விரிவாக்கம் வரை செல்லும் இந்த சிமெண்ட் பாதை வேலன் இன்ப்ரா நிறுவனம் வரை ஒற்றையடி பாதையாகவும், அங்கிருந்து 10 அடி பாதையாகவும் விரிந்து செல்கிறது.

தற்போது இந்த வழித்தடத்தில் குடியிருப்புகளும் அதிகமாக கட்டப்பட்டு வருவதால் இவ்வழித்தடத்தை விரிவுபடுத்தினால். இப்பகுதி குடியிருப்பு வாசிகளுக்கும், மாணவ, மாணவியருக்கும் பேருதவியாக இருக்கும். அத்துடன் கொசுத் தொல்லைக்கு தீர்வளிக்கும் வகையில் கழிவுநீரையும், தொழிற்சாலை கழிவுகளையும் அகற்ற வேண்டும் என்றார்.

இது குறித்து, சென்னை மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, இந்த சாலையில் அதிகப்படியான போக்குவரத்து நடைபெறுவதால், சாலையை விரிவாக்கம் செய்ய பல்வேறு தரப்பிலிருந்து கோரிக்கைள் வந்துள்ளன. எனவே, இந்த சாலையை விரிவாக்கம் செய்வதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம்.

மேலும், இப்பகுதியில் இனி வரும் காலங்களில் மழைநீர் தேங்காத அளவுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க ஆலோசிக்கப்பட்டு வருகிறது. இறைச்சிக் கழிவுகள் உள்ளிட்டவற்றை கொட்டுவதை தடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Be the first person to comment

 
x