Published : 23 Dec 2023 09:53 AM
Last Updated : 23 Dec 2023 09:53 AM
புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த பூரணாங்குப்பம் பகுதியைச் சேர்ந்தவர் சிவ பூங்குன்றன். இவர், தேங்காய்திட்டு அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார். தனக்கு சொந்தமான இரண்டரை ஏக்கர் நிலத்தில் தென்னை, வாழை, மா, சப்போட்டா உள்ளிட்டவைகளை வளர்ப்பதுடன் சிறிய அளவில் மாடு, கோழிகளையும் வளர்த்து, இயற்கைச் சூழலில் பண்ணை அமைத்துள்ளார். இவர், அங்கேயே இயற்கை உரங்களை தயார் செய்து, தனது தேவை போக மற்றதை இலவசமாக வழங்கி வருகிறார். இதற்காக, அந்த சிறு பண்ணையின் ஒரு புறத்தில் 10 அடி ஆழம், 10 அடி அகலம், 25 அடி நீளம் கொண்ட சிமென்ட் தொட்டி ஒன்றை அமைத்து அடியில் தென்னை மட்டை மற்றும் இலை தழைகளை பரப்பி, தொடர்ந்து சாணங்களால் நிரப்பி அசோஸ்பைரில்லம், சூடோமோனஸ், வெட்ரிசீரியம், வெபேரியா போன்ற நுண்ணுயிர் உரங்களை இடையிடையே தந்து, மாட்டு கோமியத்தை முறையாக சேகரித்து அதனுள் கலந்து, தொடர்ந்து தண்ணீர் பாய்ச்சி அடிப்பகுதியில் வடிப்பான் வசதி செய்து உர வடிநீர் தயார் செய்து வருகிறார்.
இந்த உர வடிநீர் தொட்டியில் இருந்து, சிறிய மோட்டார் மூலம் ஆழ்குழாய் கிணற்றில் இணைத்து, அதிலிருந்து அனைத்து மரங்கள் மற்றும் பயிர்களுக்கும் சத்துநீராக குழாய் மூலம் பாய்ச்சி வருகிறார். கால்நடை கழிவுகளை மறுசுழற்சி செய்வதோடு, தோட்டத்தில் சேகரமாகும் இலைச் சருகுகள், சாணங்களை சேமித்து வைத்து பல்வேறு நுணுக்கங்களை கையாண்டு பஞ்சகவ்யம், அமுத கரைசல், மீன் அமிலம், மக்கு உரம், மண்புழு உரம், கொம்பு சாண உரம், பூச்சி விரட்டி ஆகியவற்றை தயாரித்து வருகிறார். ஆண்டு முழுவதும் யார் வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக்கொள்ளும் வகையில் கேன்கள், மண்பானைகளில் இந்த இயற்கை உரங்களை சேகரித்து வைத்துள்ளார்.
பெய்யும் மழைநீர் எந்த சூழ்நிலையிலும் வீணாகி விடக்கூடாது என்பதற்காக மழைநீர் சேகரிப்பு முறையையும் தனது பண்ணையில் உருவாக்கியுள்ளார். மாடித்தோட்டம் ஒன்றையும் அமைத்து காய்கறிகள், பூச்செடிகளையும் பயிரிட்டுள்ளார். பயோ காஸ் மூலம் வீட்டில் சமைத்து, எரிவாயுக்கான செலவையும் குறைத்து அசத்தி வருகிறார். இவரது இந்த செயல்களை இப்பகுதி விவசாயிகள், பொதுமக்கள் வந்து ஆர்வத்துடன் பார்த்துச் செல்கின்றனர். ஆசிரியர் சிவ பூங்குன்றன் நம்மிடம் கூறும்போது, “பரம்பரை பரையாகவே நாங்கள் விவசாய குடும்பம்தான். அதே நேரத்தில் என் தாத்தா, அப்பா, மனைவி, என் உறவினர்களில் பலரும் ஆசிரியர்கள்.
இயற்கை மீதான பெரும் ஆர்வம் வர, எனக்கு ஆசிரியராக இருந்த கிருஷ்ணன் தான் அடிப்படை காரணம். பின்னாளில் ஆசிரியப் பணிக்கு நடுவில் இந்த ஆர்வம் தீவிரமாக, உம்பளச்சேரி மாடு ஒன்றை வாங்கி இயற்கை விவசாயத்தை தொடங்கினேன். இப்போது இந்தப் பண்ணையில் 8 மாடுகள், 30 கோழிகள் உள்ளன. நிலத்தில் தென்னை மரங்களுக்கு இடையே, வாழை, சப்போட்டா, அண்ணாசி நடவு செய்துள்ளேன். தானே புயல் வந்த போது, நான் வளர்த்த நிறைய தென்னை மரங்களும், மா மரங்களும் சாய்ந்துவிட்டன. அதன்பிறகு தோட்டத்தைச் சுற்றி மூங்கில் வேலி அமைத்தேன். அது நல்லதொரு இயற்கையான சூழலை அமைத்து கொடுத்திருக்கிறது. மாதம் ஒருமுறை இங்கிருக்கும் மரங்களைக் கவாத்து செய்வேன்.
நான் உருவாக்கும் இயற்கை உரங்களை என் தேவை போக மீதம் உள்ளதை விவசாயிகள், மாடித்தோட்டம் அமைப்போர் அனைவருக்கும் இலவசமாகவே வழங்கி வருகிறேன். என் தோட்டத்தை சுற்றிப் பார்ப்பவர்கள், இயற்கை விவசாயம் தொடர்பான ஆலோசனைகளை கேட்பார்கள். அதையும் அவர்களுக்கு வழங்கி வருகிறேன். 94429 34537 என்ற எண்ணில், என்னைத் தொடர்பு கொண்டு இயற்கை விவசாயம் தொடர்பாக ஆலோசனை பெறலாம் ”என்று கூறியவர், தான் வைத்துள் 30 அடி ஆழத்திலான மழைநீர் சேகரிப்பை காட்டினார். இந்த மழைநீர் சேகரிப்பின் மூலம், கடற்கரை அருகில் இருந்தாலும் 16 அடியிலேயே நல்ல தண்ணீர் கிடைக்கிறது என்று தெரிவித்தார்.
“200 கிலோ மாட்டுச் சாணத்தை, 200 லிட்டர் தண்ணீரில் கரைத்தால், 8 நாளில் பயோ காஸ் தயார்” என்று சொல்லும் சிவ பூங்குன்றன், நம்மைப் போல காஸ் சிலிண்டர் விலையேற்றம் பற்றி கவலைப்படுவதில்லை. “மாடு வைத்திருக்கும் அனைவரும் கண்டிப்பாக ‘பயோ காஸ்’ முறைக்கு மாற வேண்டும்” என்று கூறுகிறார். அதன் உபரியாக மண்புழு உரத்தையும் தயாரிக்கலாம் என்று ஆலோசனை வழங்குகிறார். “இயற்கை சார்ந்த நல வாழ்வே நம்மை ஆரோக்கியமாகவும், சுயசார்புடனும் இருக்க வைக்கும். அதை நோக்கி நாம் ஒவ்வொருவரும் நகர வேண்டியது அவசியம். அதன் மூலமே நிறைவான ஒரு வாழ்வு நமக்கு கிடைக்கும்” என்று இயற்கை வேளாண் அறிவியலாளர் நம்மாழ்வார் அடிக்கடி சொல்வதுண்டு. சிவ பூங்குன்றனின் பண்ணையைச் சுற்றி வரும் போது நம்மாழவார் சொல்லியதே நம் மனதில் வந்து போகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment