Published : 22 Dec 2023 04:48 PM
Last Updated : 22 Dec 2023 04:48 PM
திருச்சி: திருச்சி மாநகரில் உய்யக்கொண்டான் வாய்க்காலில் இருந்து பிரிந்து செல்லும் 8 துணை வாய்க்கால்கள் ஆக்கிரமிப்பின் பிடியில் சிக்கி உள்ளன. சென்னை, தென் மாவட்டங்களை புரட்டியெடுத்த மழை வெள்ளப் பாதிப்பை கண்கூடாக கண்ட பிறகும், இது போன்ற ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்காமல் அதிகாரிகள் மவுனம் காப்பது சரியல்ல என சமூக மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கரூர் மாவட்டம் மாயனூர் காவிரி ஆற்றிலிருந்து பிரியும் தென்கரை வாய்க்காலில் இருந்து, திருச்சி மாவட்டம் பேட்டை வாய்த்தலையில் தொடங்கி வாழவந்தான் கோட்டை வரை 70 கி.மீ. தொலைவுக்கு வெட்டப்பட்ட உய்யக் கொண்டான் வாய்க்கால், ஆங்கிலேயர்கள் வருகைக்குப்பின் மேலும் 22 கி.மீ. தொலைவுக்கு விரிவாக்கம் செய்யப்பட்டு, தஞ்சை மாவட்டம் பூதலூர் சேரான்டி ஏரி வரை கொண்டு செல்லப்பட்டது.
இந்த பிரதான வாய்க்காலில் இருந்து 120 துணை வாய்க்கால்கள் பிரிகின்றன. இவை அனைத்தும் பெரும்பாலும் காவிரியில் சென்று கலக்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளன. மழைக்காலங்களில் ஊருக்குள் வெள்ளம் வந்தாலும், அந்த நீர் முழுவதும் காவிரியில் சென்று சேர்ந்துவிடும். திருச்சி மாநகரில் மட்டும் ஆட்சியர் அலுவலகம் பின்புறம் உள்ள குழுமாயி அம்மன் கோயிலில் இருந்து காட்டூரை அடுத்த ஆலத்தூர் வரை 16.2 கி.மீ. பயணிக்கும் பிரதான உய்யக்கொண்டான் வாய்க்காலில் இருந்து 10-க்கும் மேற்பட்ட துணை வாய்க்கால்கள் செல்கின்றன.
திருச்சி மாநகரப் பகுதியில் நாளடைவில் குடியிருப்பு பகுதிகள் அதிகரித்து, விவசாயம் குறைந்ததை தொடர்ந்து, காத்தான் வாய்க்கால் (4.5 கி.மீ), தொட்டி வாய்க்கால் (4.8 கி.மீ), வண்ணாரப்பேட்டை வாய்க்கால் (4.3 கி.மீ), விருப்பாச்சிபுரம் வாய்க்கால் (4.1 கி.மீ), தென்னூர் வாய்க்கால் (3.5 கி.மீ), கோட்டை வாய்க்கால் (3.2 கி.மீ), தேவதானம் வாய்க்கால் (6 கி.மீ), தாராநல்லூர் வாய்க்கால் (4.8 கி.மீ) ஆகிய 8 துணை வாய்க்கால்கள் பொதுப் பணித் துறையிடமிருந்து மாநகராட்சி வசம் ஒப்படைக்கப்பட்டன. அதன்பின் இந்த துணை வாய்க்கால்கள் உரிய பராமரிப்பின்றி, புதர் மண்டியும், ஆக்கிரமிப்பாளர்களின் பிடியிலும் சிக்கித் தவிக்கின்றன. 7 மீட்டர் அகலம் கொண்ட வாய்க்கால்கள் பல இடங்களில் 2 மீட்டர் கூட இல்லாத நிலை உள்ளது.
பல இடங்களில் வாய்க்கால்கள் இருந்த சுவடே இல்லாத அளவுக்கு குடியிருப்புகள் சூழ்ந்துவிட்டன. இதனால், வெள்ளக்காலங்களில் துணை வாய்க்கால்கள் வழியாக வடிந்து செல்ல முடியாமல், குடியிருப்புப் பகுதிகளை வெள்ளம் சூழ்ந்து நிற்கும் நிலை ஏற்படுகிறது. அதிலும் குறிப்பாக, பாரதிநகர் மேல்புறமும் - குமரன்நகர் கீழ்புறமும் பயணிக்கும் தொட்டி வாய்க்கால் பல இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. அதேபோல கல்லாங்காடு வழியாக அம்மையப்ப நகர், சீனிவாசாநகர், வயலூர் சாலை, கீதா நகர் வழியாக செல்லும் காத்தான் வாய்க்காலிலும் ஆக்கிரமிப்புகள் உள்ளன.
சென்னை மற்றும் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிடட தென் மாவட்டங்களை புரட்டியெடுக்கும் மழை வெள்ளப் பாதிப்பை கண்கூடாக கண்ட பிறகும், இங்கு வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் அதிகாரிகள் மவுனம் காப்பது சரியல்ல என சமூக மற்றும் சூழலியல் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.எனவே, ஆக்கிரமிப்புகளை அகற்றி துணை வாய்க்கால்களை தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து உய்யக்கொண்டான் பாதுகாப்புக்குழு உறுப்பினர் கே.சி.நீல மேகம் கூறியது: உய்யக்கொண்டான் ஆறு திருச்சியின் கூவமாக மாறிவிட்டது. மாநகரின் பல பகுதிகளில் சாக்கடைநீர் கலந்து அசுத்தமாகிறது. இந்த வாய்க்காலை மீட்டெடுக்க இங்கு ஆட்சியராக ஜெயஸ்ரீ முரளிதரன் இருந்தபோது, உய்யக்கொண்டான் பாதுகாப்புக்குழு ஏற்படுத்தப்பட்டது. அதன்பின், ஆட்சியர்கள் ராசாமணி, சிவராசு வரை பாகாப்புக்குழுக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. தற்போது அந்த குழு இருக்கிறதா என்றே தெரியவில்லை. உய்யக்கொண்டான் துணை வாய்க்கால்களில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, சாக்கடை நீர் கலக்காத வகையில் சுத்தம் செய்ய வேண்டும்.
அப்போது தான் மழைக்காலங்களில் தீரன்நகர், கருமண்டபம், கல்லாங்காடு, வயலூர் சாலை பகுதிகளில் வெள்ளநீர் சூழாமல் இருக்கும். தற்போது சென்னையிலும், தென் மாவட்டங்களிலும் கனமழையால் வெள்ளத்தில் மக்கள் அவதிப்பட்டு வருவதற்கும் பல இடங்களில் வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது தான் காரணம் என்று கூறப்படுகிறது. எனவே, வரும் முன் காக்கும் வகையில், வாய்க்கால்கள் ஆக்கிரமிப்புகளை அகற்ற அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். இதுகுறித்து திருச்சி நகரப் பொறியாளர் சிவபாதத்திடம் கேட்டபோது, ‘‘மாநகராட்சியில் புதை சாக்கடை பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்பணிகள் முடிவடைந்த பின் உய்யக்கொண்டான் வாய்க்காலில் கழிவுநீர் கலக்காது. அப்படியே கலந்தாலும் அதை தடுக்கும் வகையிலான திட்டத்தை தயாரித்து வருகிறோம். ஆண்டுதோறும் ஆகஸ்ட் மாதம் உய்யக்கொண்டான் துணை வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டு வருகின்றன. காத்தான் வாய்க்கால், தொட்டி வாய்க்கால்களில் இருந்த ஆக்கிரமிப்புகள் ஏற்கெனவே அகற்றப் பட்டுவிட்டன. ஆக்கிரமிப்புகள் இருந்தால் பாரபட்சமின்றி அகற்றப்பட்டு, துணை வாய்க்கால்கள் மீட்கப்படும்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment