Published : 22 Dec 2023 03:34 PM
Last Updated : 22 Dec 2023 03:34 PM

கோத்தகிரியில் கட்டிட கழிவுகளால் மாசுபடும் ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலம்

கட்டிட கழிவுகள் கொட்டப்படுவதால் மாசுபடும் கோத்தகிரி ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலம்.

கோத்தகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி நகரை ஒட்டிய பகுதியில் நான்கு புறமும் மலைகள் சூழ அழகிய கிண்ணம் போன்ற அமைப்பில் அமைந்துள்ளது ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலம். ஒரு காலத்தில் 120 ஏக்கர் பரப்பளவில் பரவிக்கிடந்த பகுதி, தற்போது வெறும் 8 ஏக்கராக சுருங்கிவிட்டது. இந்த சதுப்பு நிலத்தில் மதுபான தொழிற்சாலை கட்டப்பட்டு 2 ஆண்டுகள் செயல்பட்டது. அதைத்தொடர்ந்து கால்நடை மருத்துவமனை என ஆக்கிரமிப்புகளை சந்திக்கும் நிலை தொடர்கிறது. இருப்பினும், தற்போது இந்த சதுப்பு நிலத்தில் 7 கிணறுகள் அமைக்கப்பட்டு, கோத்தகிரி நகரின் 75 சதவீத தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்கிறது. எனவே, இந்த நிலத்தை மீட்க பலரும் போராடி வருகின்றனர்.

ஆங்கிலேயர் வருகைக்குப் பின் சதுப்பு நிலங்கள் அனைத்தையும் புறம்போக்கு நிலம் என நினைத்து, அந்த பகுதிகளில் வளர்ச்சி பணிகளை ஏற்படுத்தினர். இதனால், பல ஏக்கர் பரப்பளவில் இருந்த சதுப்புகள் அழிந்தன. ரைபிள் ரேஞ்ச் எனப்படும் இந்த சதுப்பில், ஆங்கிலேயர்கள் துப்பாக்கி சுடும் பயிற்சியை மேற்கொண்டனர். பின்னர் பட்டா நிலமாக மாற்றப்பட்டு, பல ஏக்கரில் குடியிருப்புகள் கட்டப்பட்டுவிட்டன. மேலும், பல்வேறு களை தாவரங்கள் ஆக்கிரமித்துள்ளதுடன், தற்போது வெறும் 8 ஏக்கர் சதுப்பு நிலம் மட்டுமே உள்ளது. மேலும், இந்த நிலத்தின் தன்மையை மக்கள் உணராமல், சதுப்பு நிலத்தில் கட்டிட கழிவுகளை கொட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக கோத்தகிரி நீராதார பாதுகாப்பு குழு ஒருங்கிணைப்பாளர் கே.ஜே.ராஜு கூறும்போது, “கோத்தகிரி ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலம், நகரின் பெரும்பான்மையான மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக விளங்குகிறது. இதன் ஒரு பகுதி, அரசு ஆவணத்தில் ‘மைதானம்' என பதியப்பட்டுள்ளது. இந்த இடத்தில் கடந்த ஆட்சி காலத்தில் மருத்துவமனை, தீயணைப்பு நிலையம், அரசு குடியிருப்புஆகிய கட்டுமானங்கள் கட்டுவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. பொதுமக்களின் எதிர்ப்பால், அன்றைய மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அந்த திட்டங்களை தடுத்து நிறுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சதுப்பு நிலத்தை காக்க சதுப்பு நிலம் என மாற்றி பதிவு செய்ய கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதை ஏற்றுக்கொண்ட அரசு, கடந்த ஆண்டு உதகையில் நடைபெற்ற சட்டப்பேரவை மனுக்கள் குழு கூட்டத்தின்போது, இந்த கோரிக்கை நிறைவேற்றப்படும் என மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக உறுதியளிக்கப்பட்டது. ஆனால், இதுவரை எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை. இதற்கு பொறுப்பான வருவாய் துறை, தன் பொறுப்பை தட்டிக்கழிக்கும் வகையில் வனத்துறையிடம் தள்ளிவிட்டுள்ளது. இதுகுறித்து பல முறை மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்டும், உரிய கவனம் செலுத்தாமல் உள்ளது. தற்போது அங்குள்ள குடியிருப்பு பகுதியிலிருந்து வரும் சாக்கடை நீர், அப்பகுதியை மாசுபடுத்துகிறது. மேலும், அங்கு நிறுத்தப்பட்டுள்ள ஏராளமான வாகனங்கள் சதுப்பு நிலத்தை சாக்கடையாக மாற்றியுள்ளன.

சதுப்பு நிலங்களை பாதுகாக்கும் வகையில் தமிழக அரசு வாரியம் அமைத்துள்ள நிலையில், ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலம் அழிவின் விளிம்புக்கே சென்றுள்ளது, இயற்கை ஆர்வலர்களை கவலைக்கு ஆளாக்கியுள்ளது. மேலும் இங்குள்ள நூற்றுக்கணக்கான கற்பூர மரங்கள் சதுப்பு நிலத்தை பாலைவனமாக மாற்றும் அபாயம் உள்ளது. இப்பிரச்சினையில், மாவட்ட நிர்வாகம் உடனடியாக தீர்வு கண்டு, ரைபிள் ரேஞ்ச் சதுப்பு நிலத்தை காக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x