Published : 16 Dec 2023 05:03 PM
Last Updated : 16 Dec 2023 05:03 PM
ஒரு நர்சரி கார்டனில் 3 ஆயிரம் மரக்கன்றுகளை பாத்துருப்பீங்க, 4 ஆயிரம் மரக்கன்றுகளை பாத்துருப்பீங்க, 5 ஆயிரம் மரக்கன்றுகளை கூட பாத்துருப்பீங்க... ஒரு கோடி மரக்கன்றுகளை பாத்துருக்கீங்களா? திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் சனமங்கலம் பகுதியில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு கோடி மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. இதில், முதல்கட்டமாக 50 லட்சம் மரக்கன்றுகள் தயாராக உள்ளன. தமிழக அரசு பசுமை தமிழகம் இயக்கத்தை தொடங்கி, அதன் மூலம் தமிழகத்தின் பசுமைப் போர்வையை அதிகரிக்க 10 ஆண்டுகளில் 39 கோடி மரக்கன்றுகள் நடவு செய்யும் வகையில் திட்டமிட்டு பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இத்திட்டத்தை சிறப்பாக செய்ய முடிவு செய்த திருச்சி மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார், ஒரே பகுதியில் ஒரு கோடி மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, மாவட்டம் முழுவதும் நடவு செய்ய திட்டமிட்டார். இதற்கென அதிகாரிகள், மர ஆர்வலர்கள் ஆகியோரிடம் கலந்தாலோசித்து, ஒரு கோடி மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய முடிவு செய்யப்பட்டது. இந்த பணிகள் கடந்த மார்ச் மாதம் தொடங்கின. இந்த மரக்கன்றுகளை உற்பத்தி செய்ய, நீர்வளம், மண் வளம் உள்ள பகுதிகளான மண்ணச்சநல்லூர் வட்டத்தில் உள்ள சனமங்கலம், திருவெள்ளறை, எம்.ஆர்.பாளையம், அய்யம்பாளையம், இருங்களூர் உள்ளிட்ட கிராமங்களில் உள்ள அரசு நிலங்கள் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக பல்வேறு நிறுவனங்கள், அமைப்புகளிடமிருந்து மரக்கன்றுகளை வளர்ப்பதற்கான பைகள், விதைகள் பெறப்பட்டன. இந்த கிராமங்களில் உள்ள தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத் தொழிலாளர்களைக் கொண்டு மரக்கன்றுகளை உற்பத்தி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
50 லட்சம் மரக்கன்றுகள் தயார்: இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் மா.பிரதீப்குமார் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: திருச்சி மாவட்டத்தில் பசுமைப் பரப்பு ஏறத்தாழ 10 சதவீதம் தான் உள்ளது. இதை 33 சதவீதமாக உயர்த்த வேண்டிய தேவை உள்ளது. எனவே, கொஞ்சம், கொஞ்சமாக ஆண்டுக்கணக்கில் மரக்கன்றுகளை உற்பத்தி செய்து, அவற்றை பல ஆண்டுகளுக்கு நடவு செய்வதை விட, ஒரே நேரத்தில் ஒரு கோடி மரக்கன்றுகளை உற்பத்தி செய்து நடவு செய்ய திட்டமிட்டோம். அதற்கான பணிகள் முழுவீச்சில் மேற்கொள்ளப்பட்டு, தற்போது 50 லட்சம் மரக்கன்றுகள் நடுவதற்கு தயார் நிலையில் உள்ளன.
இதில், 50 சதவீத அளவுக்கு மா, பலா, கொய்யா உள்ளிட்ட பழ மரக்கன்றுகளாகும். இதன் மூலம் குரங்கு, அணில், பறவைகள் என பல உயிரினங்களுக்கு உணவு கிடைக்கும். இத்திட்டத்தில், முதல்கட்டமாக மாவட்டத்தில் உள்ள 404 ஊராட்சிகளுக்கு சொந்தமான குளங்களின் கரைகளிலும், அடுத்தகட்டமாக பொதுப்பணித் துறைக்குச் சொந்தமான குளங்கள், ஏரிகளின் கரைகளிலும் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது.
மக்களுக்கும் வழங்கப்படும்: மேலும், ஊரக வளர்ச்சித் துறைக்கு சொந்தமான 1,081 சிறுபாசன ஏரி கரைகள், 1,084 ஏக்கர் அரசு புறம்போக்கு இடங்களிலும் மரக்கன்றுகளை நட திட்டமிடப்பட்டுள்ளது. இதுதவிர மக்கள் தங்கள் வீடுகள், தோட்டங்களில் மரம் வளர்க்க விரும்பினால் அவர்களுக்கும் வழங்கப்படும். எங்களது ஒரே நோக்கம் இந்த மரக்கன்றுகள் திருச்சி மாவட்டத்தின் பசுமைப் பரப்பை அதிகரிக்க உதவ வேண்டும் என்பது தான். இவ்வாறு அவர் கூறினார்.
கின்னஸ் சாதனையாகிறது? - உலக அளவில் அதிகபட்சமாக 20 லட்சம் மரக்கன்றுகள் தான் ஒரு பகுதியில் ஒரே நேரத்தில் உற்பத்தி செய்யப்பட்டுள்ளன. ஆனால் திருச்சி மாவட்டத்தில் ஒரே நேரத்தில் ஒருகோடி மரக்கன்றுகள் உற்பத்தி செய்யப்படுவது உலக சாதனையாக கருதப்படுகிறது. இதை கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெறச் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment