Published : 13 Dec 2023 05:12 AM
Last Updated : 13 Dec 2023 05:12 AM
சென்னை: எண்ணூர் பகுதிகளில் வெள்ள நீரில் எண்ணெய் கலந்தது இயற்கை பேரிடர் அல்ல என்றும், மனிதரால் ஏற்படுத்தப்பட்ட செயற்கை பேரிடர் என பசுமை தீர்ப்பாயத்தில் நடந்த வழக்கில் சிபிசிஎல் நிறுவனம் மீது தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியை துரிதப்படுத்துமாறு தமிழக அரசு, எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவி்ட்டுள்ளது.
சென்னை மணலி, எண்ணூர் பகுதிகளில் தேங்கியுள்ள வெள்ள நீரில் எண்ணெய் கசிவு ஏற்பட்டது குறித்து சென்னையில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வு தாமாக முன்வந்து வழக்காக விசாரணைக்கு எடுத்திருந்தது. இந்த அமர்வின் நீதித்துறை உறுப்பினரான ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்யநாராயணா மற்றும் நிபுணத்துவ உறுப்பினரான சத்யகோபால் ஆகியோர் எண்ணெய் கசிவு பாதிப்பு உள்ள இடங்களை ஆய்வு செய்ய குழு அமைத்து ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு நேற்று மீண்டும் இதே அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு தரப்பில் வழக்கறிஞர் டி.சண்முகநாதன், தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் சாய் சத்யஜித், எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் அப்துல் சலீம், காட்டுக்குப்பம் மீனவர்கள் தரப்பில் யோகேஸ்வரன், சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகம் தரப்பில் எம்.டி.அருணன் ஆகிய வழக்கறிஞர்கள் ஆஜராகி வாதிட்டனர்.
மாசு கட்டுப்பாட்டு வாரியம் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால அறிக்கையில், இந்த எண்ணெய் கசிவு சிபிசிஎல் நிறுவனத்தின் தெற்கு வாயிலில் இருந்து வெளியேறியுள்ளது. மணலி, கொடுங்கையூர் உள்ளிட்ட பகுதிகளில் தண்ணீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பூண்டி மற்றும் புழல் ஏரிகளில் இருந்து வந்த தண்ணீர் சிபிசிஎல் வளாகத்துக்குள் புகுந்து, தண்ணீரின் அளவு உயர்ந்ததால், எண்ணெய் கசிவு ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து உடனடியாக டிச.8 அன்று சிபிசிஎல் உள்ளிட்ட அனைத்து எண்ணெய் நிறுவனங்களுக்கும் எண்ணெய்யை வெளியேற்றக்கூடாது என உத்தரவிடப்பட்டது. இந்த எண்ணெய் கசிவு பக்கிங்ஹாம் கால்வாய் முதல் 11 கிமீ தூரத்துக்கு பரவியுள்ளது. சிபிசிஎல் நிறுவனம் அருகேயுள்ள தோஷிபா ஆயில் நிறுவனமும் கழிவுகளை முறையாக கையாளவில்லை. அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. தவறு நடந்திருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தமிழக அரசு தரப்பில், எண்ணெய் கசிவு விவகாரத்தில் தலைமைச் செயலர் தலைமையில் குழு அமைத்து ஆலோசிக்கப்பட்டு வருகிறது. மீனவர்கள் இதுவரை மீன்பிடிக்க செல்லவில்லை. மீனவர்களுக்கான இடைக்கால நிவாரண தொகையை சிபிசிஎல் நிர்வாகம் வழங்க வேண்டும். வெள்ள நீரில் எண்ணெய் கலந்தது இயற்கை பேரிடர் அல்ல. இது மனிதரால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர் என குற்றம் சாட்டப்பட்டது.
எண்ணூர் காமராஜர் துறைமுகம் தரப்பில் வாதிடும்போது, இரு கப்பல்கள் மோதியதால் கடலில் எண்ணெய் கசிவு ஏற்பட்டபோது அதை அகற்றிய கடந்தகால அனுபவத்தின் அடிப்படையில் உதவத் தயாராக இருப்பதாகவும் தண்ணீரில் கலந்துள்ள எண்ணெய்யை அகற்றுவதற்கான வழிமுறைகள் தங்களிடம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
காட்டுக்குப்பம் மீனவர்கள் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்வதைத் தவிர மாசு கட்டுப்பாட்டு வாரியம் எதுவும் செய்வது இல்லை என்றும், மக்களுக்கு தேவையானவற்றைக்கூட கண்டறியவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டது.
அப்போது தீர்ப்பாய உறுப்பினர்கள் தெரிவித்ததாவது: டிச.7 அன்று சிபிசிஎல்-ன் தெற்கு வாயிலில் மட்டுமே கசிவு இருந்ததாக கூறப்படும் நிலையில் குழாய்கள், எண்ணெய் கலன்களின் கசிவை ஆய்வு செய்யவில்லையா?
மேலும் விவசாயம் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு அரசு என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது, மழை வெள்ள நிவாரணம் போல எண்ணெய் பாதிப்புக்கு எந்த நிவாரணமும் அறிவிக்கவில்லையே ஏன்?
மேலும் 48 மணி நேரமாக எண்ணெய் கசிவை தடுக்க பூம்ஸ் தடுப்பாண்களை வைக்க முடியவில்லையா, தற்போது 11 கி.மீ. தூரத்துக்கு பரவியுள்ள நிலையில் இரு துறைமுகங்கள், கடலோர காவல்படை ஆகியவற்றின் ஆலோசனைகளையும் அரசு பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இவ்வாறு அறிவுறுத்தினர்.
மேலும் தொடர்ந்து அவர்கள் கூறும்போது, எவ்வளவு எண்ணெய் கசிவு ஏற்பட்டது என்பது குறித்தும், எவ்வளவு அகற்றப்பட்டுள்ளது என்பது குறித்தும் எந்த விவரமும் அறிக்கையில் இல்லை. ஏன் ட்ரோன் மூலமாக இந்த கசிவை மதிப்பிடக் கூடாது, எவ்வளவு பேர் பாதிக்கப்பட்டுள்ளனர், குடியிருப்பு பகுதிகள், மீனவர்கள் மற்றும் விவசாய பகுதிகளின் சேதம் எவ்வளவு என தொடர்ச்சியாக பல்வேறு கேள்விகளை எழுப்பினர். இதுதொடர்பாக விளக்கமளிக்க அரசு உயர் அதிகாரிகள் யாரும் வரவில்லையா எனக்கூறி அதிருப்தி தெரிவித்தனர்.
எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில், கடலில் எண்ணெய் கலப்பதை தடுக்க 75 மீட்டருக்கு தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. சென்னை துறைமுகத்தில் இருந்து 380 மீட்டருக்கும், காரைக்கால் துறைமுகத்தில் இருந்து 350 மீட்டருக்கும் தடுப்புகள் கொண்டு வரப்பட்டுள்ளன. அவையும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
தமிழக அரசு தரப்பில் கூறும்போது, கடலில் எண்ணெய் கலக்கவில்லை என்பது கடலோர காவல்படை ஆய்வில் உறுதியாகியுள்ளது. கழிமுகத்தில் இருந்து கடலுக்குள் எண்ணெய் செல்லாமல் தடுக்க ஒரு கிமீ தூரத்துக்கு மிதவைகள் அமைக்க வேண்டியுள்ளது. தற்போது வரை 75 மீட்டருக்கு மிதவைகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த எண்ணெய் கசிவை தடுக்கவும், கலப்பை சரிசெய்யவும் போர்க்கால அடிப்படையில் பணிகள் நடந்து வருகின்றன என தெரிவிக்கப்பட்டது.
சிறார்களை இப்பணியில் ஈடுபடுத்தக் கூடாது. எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபடுபவர்களுக்கு போதுமான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்கு போதிய நிவாரணம் மற்றும் தேவையான பாதுகாப்பு உபகரணங்களை வழங்கவும் தீர்ப்பாய உறுப்பினர்கள் உத்தரவிட்டனர்.
இதுதவிர, எண்ணெய் கழிவுகளை அகற்றும் பணியை துரிதப்படுத்தவும் தமிழக அரசு மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரியம் மற்றும் எண்ணெய் நிறுவனங்களுக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை வரும் டிச.14-க்கு தள்ளி வைத்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT