Published : 12 Dec 2023 07:21 AM
Last Updated : 12 Dec 2023 07:21 AM
மதுராந்தகம்: வேடந்தாங்கல் ஏரிக்கு கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் சரணாலயத்துக்கு வரும் வெளிநாட்டுப் பறவைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதை சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சியுடன் கண்டு ரசித்து வருகின்றனர். செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அடுத்த வேடந்தாங்கல் கிராமத்தில் 73 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள ஏரியின் நடுவே, அடர்ந்த கருவேல மரங்களுடன் பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்கு, பறவைகளுக்கான இதமான சீதோஷ்ணம் நிலவுவதால், ஆண்டுதோறும் நவம்பர் மாதத்தில் உள்ளூர் மற்றும்வெளிநாட்டில் இருந்து பல்வேறுவிதமான பறவைகள் இனப்பெருக்கத்துக்காக இங்கு வருகின்றன.
மேலும், ஏரியின் நடுவே உள்ள மரக்கிளைகளில் கூடுகட்டிமுட்டையிட்டு, குஞ்சு பொறிக்கும் பறவைகள், குஞ்சுகள் வளர்ந்ததும் தாய்நாட்டுக்கு திரும்பிச் செல்வது வழக்கம். இந்நிலையில், நடப்பாண்டில் மிக்ஜாம் புயல் காரணமாக வேடந்தாங்கல் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதிகளில் மழைபெய்ததால், நீர் நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. குறிப்பாக, வளையபுத்தூர் ஏரி நிரம்பி உபரிநீர் வெளியேறி வருவதால் வேடந்தாங்கல் ஏரிக்கு நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. இதன்மூலம், தற்போது ஏரியில் 11 அடிக்கு மேல் நீர் நிரம்பி ரம்மியமாகக் காட்சியளிக்கிறது. சீசன் தொடங்கியுள்ள நிலையில், பறவைகளின் வருகையும் அதிகரித்துள்ளது.
தற்போது, 10 ஆயிரத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் பறவைகள் முகாமிட்டுள்ளதாக வனத் துறையினர் தெரிவிக்கின்றனர். வரும் நாட்களில் பறவைகளின் எண்ணிக்கை கணிசமாக உயரும் எனக் கூறப்படுகிறது. ஏரியில் உள்ள மரங்களில் தங்கிஉள்ள பறவைகளைக் கண்டு ரசிப்பதற்காக சுற்றுலா பயணிகளும் வரத்தொடங்கியுள்ளதால், உள்ளூரை சேர்ந்த தின்பண்ட விற்பனையாளர்களும் சுறுசுறுப்படைந்துள்ளனர். பறவைகளின் வருகைஅதிகரிக்கும்போது சுற்றுலா பயணிகளும் அதிக எண்ணிக்கையில் வருவார்கள் என உள்ளூர் மக்கள் கருதுகின்றனர். இதற்கிடையே, சரணாலயம் அருகே சுற்றுலாப் பயணிகளைக்கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ள பறவைகளின் ஓவியங்களை புதுப்பிக்கும் பணிகளை வனத்துறை மேற்கொண்டு வருகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment