Published : 09 Dec 2023 04:45 PM
Last Updated : 09 Dec 2023 04:45 PM
ஆம்பூர்: ஆம்பூரையொட்டியுள்ள பாலாறு பகுதிகளில் டன் கணக்கில் குவிந்துள்ள குப்பைக் கழிவுகளால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதுடன், நிலத்தடி நீர் மாசடைந்து, பாலாறு தனது அடையாளத்தை மெல்ல, மெல்ல இழந்து வருவதாக நீர்வள ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்றாம்பள்ளி, வாணியம்பாடி மற்றும் ஆம்பூர் போன்ற பகுதிகள் பாலாற்றையொட்டி அமைந்துள்ளன. பாலாறு எப்போதும் வறண்டு காணப்படுவதால் பல்வேறு பகுதிகளில் இருந்து அகற்றப்படும் கழிவுகள் பாலாற்றில் பகிரங்கமாக கொட்டப்படுகின்றன. இதனால், பாலாறு குப்பைக்கழிவுகள் நிறைந்த நீர்நிலையாக மாறிவிடுகிறது.
வடமாவட்ட விவசாயிகளின் தாய் ஆறு என வர்ணிக்கப்பட்ட பாலாறு தற்போது தனது அடையாளத்தை இழந்து குப்பை கழிவுகள் நிறைந்த இடமாகவும், மணல் கடத்தல்காரர்களுக்கு சொர்க்க பூமியாக மாறியுள்ளது. இதேநிலை நீடித்தால் எதிர்காலத்தில் பாலாறு என்ற ஒன்று இருந்ததற்கான சுவடே இல்லாமல் போய்விடும் என நீர்வள ஆர்வலர்கள் ஆதங்கப்படுவதுடன், பாலாற்றை மீட்டெடுக்க மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் அக்கறை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். குறிப்பாக, பாலாற்றில் குப்பை கழிவுகள் கொட்டப்படுவதை முதற் கட்டமாக தடுக்க வேண்டும் என்ற கோரிக்கையே தற்போது பெருகி வருகிறது. ஆம்பூர் பாலாற்று பகுதிகளில் தான் அதிக அளவிலான குப்பை கழிவுகள் கொட்டப்படுவதாக நீர்வள ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
இதுகுறித்து ஆம்பூரைச் சேர்ந்த நீர்வள ஆர்வலர் குமரேசன் என்பவர், ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘‘ஆம்பூர் - பேரணாம்பட்டு பிரதான சாலையை யொட்டி பாலாறு தரைப்பாலம் உள்ளது. நகராட்சிக்கு உட்பட்ட இந்த பகுதியில் போதிய மின் விளக்கு வெளிச்சம் இல்லை. இந்நிலையில், ஆம்பூர் சுற்றுவட்டாரப்பகுதிகளில் இருந்து கோழி மற்றும் மாட்டிறைச்சி கழிவுகள், கட்டுமான கழிவுகள், தோல் கழிவுகள், உணவகங்களில் மீதியாகும் உணவு கழிவுகள், காய்கறி மற்றும் பழ கழிவுகள் உள்ளிட்டவை இரவு நேரங்களில் பாலாறு தரைப்பாலத்தின் கீழே கொட்டப்படுகின்றன.
தரைப்பாலத்தில் நின்று பாலாற்றை பார்த்தால் டன் கணக்கில் குப்பைக் கழிவுகள் மலை போல் குவிந்துள்ளது தெரியவரும். தற்போது, மழைக்காலம் என்பதால் மழைநீர் குப்பைக்கழிவுகளில் கலந்து, அப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இறைச்சிக்கழிவுகள், தோல் கழிவுகள் மழைநீரில் நனைந்து நிலத்தடி நீருடன் கலப்பதால் நிலத்தடி நீர் மாசடைகிறது. இந்த தண்ணீரை குழாய்கள் மூலம் பொதுமக்களுக்கு விநியோகம் செய்யும்போதுபல்வேறு நோய் தொற்றுகளுக்கு மக்கள் ஆளாக வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
பாலாற்றில் கொட்டப்படும் குப்பை கழிவுகளை தடுக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் பொதுப்பணித்துறை அலுவலகம், ஆம்பூர் நகராட்சி அலுவலகத்தில் பலமுறை கோரிக்கை மனு அளித்தும் அதற்கான முயற்சிகளை அரசு அலுவலர்கள் எடுக்கவில்லை. இதனால், பாலாற்றில் குப்பை கழிவுகள் நிறைந்துள்ளன. ஆம்பூர் - பேரணாம்பட்டு பிரதான சாலையையொட்டி ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இந்த வீடுகளில் இருந்து வெளியேற்றப்படும் கழிவுகளும் பாலாற்றில் தான் கலக்கிறது. இதை தடுத்து நிறுத்த மாவட்ட நிர்வாகமும், ஆம்பூர் நகராட்சி நிர்வாகமும் முயற்சி எடுக்க வேண்டும். பாலாறு தனது அடையாளத்தை இழக்காமல் இருக்க தேவையான முயற்சிகளை தமிழக அரசு எடுத்து பாலாற்றை காப்பாற்ற வேண்டும்’’ என்றார்.
இதுகுறித்து பொதுப்பணித்துறை அலுவலர்களிடம் கேட்டபோது, ‘‘கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து பாலாற்றை தூய்மைப்படுத்தின. பின்னர், பொது இடங்கள், பாலாறு, நீர் நிலைகளில் எந்த விதமான குப்பைக்கழிவுகளையும் கொட்டக்கூடாது என பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத் தியும் பயன் இல்லாமல் போகிறது. பாலாற்றில் குவிந்துள்ள குப்பை கழிவுகளை அகற்ற விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT