Published : 08 Dec 2023 03:25 PM
Last Updated : 08 Dec 2023 03:25 PM

மைக்ரோ பிளாஸ்டிக் மாசு அதிகரிப்புக்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் பொருட்களே முக்கிய காரணம்: சென்னை ஐஐடி

சென்னை: மைக்ரோ பிளாஸ்டிக் மாசுபாட்டுக்கு வீடுகளில் பயன்படுத்தப்படும் முக்கியமான, அதே நேரத்தில் கவனிக்கப்படாத மைக்ரோ பிளாஸ்டிக்குகள்தான் காரணம் என கண்டறியப்பட்டுள்ளதாக சென்னையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: சுற்றுச்சூழலில் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் பரவுவதற்கு பங்களிக்கும் பல்வேறு ஆதாரங்களில், மாசடைந்த கழிவு நீர் ஒரு முக்கிய ஆதாரமாக இருக்கிறது என்று ஆய்வு தெரிவிக்கிறது. அன்றாட வீட்டுச் செயல்பாடுகளான பாத்திரங்களைக் கழுவுதல், துணி துவைத்தல், குளித்தல், கழிப்பறைகளைப் பயன்படுத்துதல் போன்ற அனைத்தும் மாசடைந்த கழிவுநீரின் உற்பத்திக்கு பங்களிக்கின்றன. உதாரணமாக, பாத்திரங்களைக் கழுவ பிளாஸ்டிக்கால் ஆன துடைக்கும் பட்டைகள் (scouring pads) பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் மென்மையான பகுதி பாலியூரிதீன் (PU), மெஷ் பகுதி பாலிஎதிலின் (PE) ஆகியவற்றால் தயாரிக்கப்பட்டவை. நாட்கள் செல்லச்செல்ல ஸ்பான்ஞ் தேய்ந்து, பிளாஸ்டிக் பொருட்கள் உதிர்வதால் இரண்டாம் மைக்ரோ பிளாஸ்டிக் உருவாக்கத்திற்கு காரணமாக அமைகிறது.

சென்னை ஐஐடியின் சிவில் இன்ஜினியரிங் துறையின், சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளப் பொறியியல் பிரிவைச் சேர்ந்த செல்வி ஏஞ்சல் ஜெசிலீனா, செல்வி கிருத்திகா ஈஸ்வரி வேல்மயில், அஞ்சு அன்னா ஜான் மற்றும் பேராசிரியை இந்துமதி எம்.நம்பி, ஐஐடி மெட்ராஸ் உயிரிப் பொறியியல் துறையைச் சேர்ந்த செல்வி சசிகலாதேவி ரத்தினவேலு ஆகியோர் இந்த மதிப்பாய்வை மேற்கொண்டனர். அவர்களின் மதிப்புரை சுற்றுச்சூழல் அறிவியல் மற்றும் மாசு ஆராய்ச்சி (https://doi.org/10.1007/s11356-023-26918-1) என்ற புகழ்பெற்ற இதழில் பிரசுரிக்கப்பட்டது. இத்தகைய மதிப்புரையின் அவசியத்தை எடுத்துரைத்த சென்னை ஐஐடி சிவில் இன்ஜினியரிங் துறையின் சுற்றுச்சூழல் மற்றும் நீர்வளப் பொறியியல் பிரிவு பேராசிரியை இந்துமதி எம் நம்பி, "மனிதர்களில் மைக்ரோ பிளாஸ்டிக்ஸின் வெளிப்பாட்டுடன் தொடர்புடைய ஆபத்து தொடர்பான உண்மைகளை அறிய சுற்றுச்சூழல் மைக்ரோபிளாஸ்டிக்ஸ் மற்றும் மைக்ரோஃபைபர்ஸ் குறித்து நிகழ்நேரத்துடன் இன்னும் விரிவான ஆராய்ச்சி செய்யப்பட வேண்டும்" எனக் குறிப்பிட்டார்.

மேலும் அவர் கூறுகையில், “மிகப் பெரிய அளவில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் மாசுபாடு பிரச்சினை தொடர்பாக உடனடி கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம். ஒவ்வொரு ஆண்டும் 4.88 முதல் 12.7 மில்லியன் மெட்ரிக் டன் பிளாஸ்டிக் கடலில் கலப்பதாக தற்போதைய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன. 2050 ஆம் ஆண்டு வாக்கில், பெருங்கடல்களில் உள்ள பிளாஸ்டிக்கின் ஒட்டுமொத்த எடையானது, மீன்களின் மொத்த உயிரி ஆற்றலை விஞ்சிவிடும் என்று கணிப்புகள் சுட்டிக்காட்டுகின்றன" எனத் தெரிவித்தார்.

இந்த மதிப்பீடுகளில் பாலிஎத்திலீன் டெரெப்தாலேட் (PET), பாலியமைடு (PA) மற்றும் பாலிஅக்ரிலேட் போன்ற எங்கும் நிறைந்திருக்கும் செயற்கை இழைகள் போன்றவைகூட கணக்கில் கொள்ளப்படவில்லை என்று ஆராய்ச்சியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். துணிகளைத் துவைக்கும்போது கணிசமான அளவுக்கு மைக்ரோஃபைபர்கள் கழிவுநீருடன் கலக்கின்றன. அதே நேரத்தில் ஷவர் ஜெல், ஃபேஸ் க்ளென்சர், பற்பசை போன்ற தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களில் மைக்ரோபீட்ஸ் எனப்படும் மைக்ரோ பிளாஸ்டிக் சேர்மானங்கள் கலந்திருக்கின்றன. மேலும், முகக்கவசங்கள், வீட்டில் பயன்படுத்தப்படும் செயற்கைத் தரைவிரிப்புகள் போன்றவையும் சுற்றுச்சூழல் மற்றும் உட்புற மாசுபாட்டிற்கு காரணமாக அமைகின்றன. இதனால் மனிதர்கள், செல்லப்பிராணிகள் உள்ளிட்ட நிலம் மற்றும் நீரில் வாழும் சுற்றுச்சூழல் அமைப்புகளின் ஆரோக்கியத்திற்கு தீங்கை விளைவிக்கின்றன.

மைக்ரோ பிளாஸ்டிக் மாசுபாட்டை எதிர்த்துப் போராட வேண்டுமெனில் அதற்கான மூலாதாரங்களைக் குறைப்பது குறித்துப் பரிசீலிக்க வேண்டும் என இந்த மதிப்பாய்வு கருதுகிறது. தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களை மக்கும் பொருட்களாக மாற்ற வேண்டும் என்றும், பிளாஸ்டிக்கில் தயாரிக்கப்படும் துடைக்கும் பட்டைகளின் (scouring pads) பயன்பாடு குறைக்கப்பட வேண்டும் என்றும் இந்த மதிப்பாய்வு சுட்டிக்காட்டுகிறது. அத்துடன் துணி துவைக்கும் இயந்திரங்கள் சிறந்த வடிகட்டிகளைக் கொண்டிருப்பதும் அவசியம் என்று அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT

    Loading comments...

 
x