Published : 07 Dec 2023 04:00 AM
Last Updated : 07 Dec 2023 04:00 AM

உலக மண் தினம்: காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் 2.5 லட்சம் மரக்கன்றுகள் நடவு

கோவை: உலக மண் தினம் மற்றும் நெல் ஜெயராமன் நினைவு தினத்தையொட்டி, காவேரி கூக்குரல் இயக்கம் மூலமாக தமிழகம் முழுவதும் 2.5 லட்சம் மரக்கன்றுகளை விவசாயிகள் தங்கள் நிலங்களில் நடவு செய்துள்ளனர்.

இதற்காக, கடந்த 5 மற்றும் 6-ம் தேதிகளில் கோவை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, நாமக்கல், தஞ்சாவூர், விழுப்புரம், திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் சுமார் 100 இடங்களில் மரக்கன்றுகள் நடும் நிகழ்வுகள் நடைபெற்றன. இதன் மூலம், சுமார் 1,500 ஏக்கர் விவசாய நிலங்களில் 2 லட்சத்து 57 ஆயிரம் மரக்கன்றுகளை விவசாயிகள் நடவு செய்துள்ளனர்.

இது தொடர்பாக காவேரி கூக்குரல் இயக்கத்தின் தமிழக கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் கூறியதாவது: கடந்த 50, 60 ஆண்டுகளாக பின்பற்றப்பட்டு வரும் விவசாய முறைகளால், மண்ணின் கரிம சத்தின் அளவு மிகவும் குறைந்துவிட்டது. ஒரு வளமான மண்ணின் அங்கக கரிமத்தின் அளவு 3 முதல் 6 சதவீதம் இருக்க வேண்டும். ஆனால் தற்போது தமிழக விவசாய நிலங்களில் 0.5 முதல் 0.7 சதவீதம் மட்டுமே உள்ளது. மேலும், விவசாயம் செய்வதற்கு அத்தியாவசியமாக விளங்கும் மேல் மண்ணின் அளவும் குறைந்து வருகிறது.

ஒரு அங்குல மேல் மண் உருவாவதற்கு பல நூற்றாண்டுகள் ஆகும் என விஞ்ஞானிகள் கணக்கிட்டுள்ளனர். எனவே, அழிந்து வரும் மண் வளத்தை மீட்டெடுப்பதற்காக ஈஷா நிறுவனர் சத்குரு ‘மண் காப்போம்’ இயக்கத்தின் மூலம் பல்வேறு பணிகளை மேற்கொண்டு வருகிறார். இயற்கை விவசாயம் மற்றும் மரம் சார்ந்த விவசாயம் மண் வளப் பாதுகாப்புக்கு ஒரு தீர்வாக உள்ளதால் மர விவசாயத்தை காவேரி கூக்குரல் முன்னெடுத்து வருகிறது.

விவசாய நிலங்களிலும், வரப்பு ஓரங்களிலும் மரங்களை நடுவது மண் வள பாதுகாப்புக்கு ஒரு தீர்வாகும். தேக்கு, மலை வேம்பு, கருமருது, வேங்கை, மஞ்சள் கடம்பு, சந்தனம், செஞ்சந்தனம், குமிழ், மகா கனி போன்ற மரங்களை நிலம் முழுவதுமாகவோ அல்லது வரப்பு ஓரங்களில் மட்டுமோ வளர்க்க இயலும். இதன் மூலம் விவசாயிகள் எதிர்காலத்தில் நல்ல வருமானத்தையும் பெற முடியும். ஈஷா இதுவரை ஏறக்குறைய 9 கோடி மரங்களை விவசாயிகளுக்கு விநியோகித்துள்ளது.

கடந்த ஆண்டு தமிழகத்தில் மட்டும் விவசாய நிலங்களில் ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. நடப்பாண்டு தமிழகத்தில் 1.10 கோடி மரங்கள் நடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, இதுவரை 73 லட்சம் மரக் கன்றுகள் நடப்பட்டுள்ளன. இதற்காக தமிழகம் முழுவதும் உள்ள 50 ஈஷா நர்சரிகள் மூலம் தரமான மரக்கன்றுகள் விவசாயிகளுக்கு ரூ.3-க்கு வழங்கப்படுகிறது. தற்போது மழைக்காலத்துக்கு தேவையான நாற்றுகள் உற்பத்தி செய்யப்பட்டு விநியோகத்துக்கு தயாராக உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x