Published : 03 Dec 2023 04:10 AM
Last Updated : 03 Dec 2023 04:10 AM
சிவகங்கை: வறண்ட சிவகங்கை மாவட்டத்தை பசுமையாக்க 6 லட்சம் மரங்களுடன் 1,108 குறுங்காடுகள் உருவாக்கும் பணி தொடங்கியது.
சிவகங்கை வறண்ட மாவட்டமாக உள்ளது. கடந்த சில ஆண்டுகளாக, மழையும் குறைந்ததால் விவசாயமும் பொய்த்து போனது. பெரும்பாலான இடங்களில் சீமைக் கருவேல மரங்களே வளர்ந்துள்ளன. இந்நிலையில், சிவகங்கை மாவட்டத்தை பசுமை நிறைந்ததாக மாற்றவும், வறட்சியை மாற்றி மழையளவை அதிகரிக்கவும், சீமைக் கருவேல மரங்களை ஒழிக்கவும் மாவட்ட நிர்வாகம் முடிவு செய்தது.
இதையடுத்து 445 ஊராட்சி களிலும் காலியாக உள்ள அரசு புறம் போக்கு, நீர் நிலை புறம்போக்கு பகுதிகளில் குறுங்காடுகளை உருவாக்கவும் முயற்சி எடுத்துள்ளது. இதற்காக மாவட்டம் முழுவதும் 6 லட்சம் மரக் கன்றுகளை நடவு செய்து, 1,108 குறுங்காடுகளை உருவாக்கும் பணி தொடங்கியது. இப்பணியை மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் வாணியங்குடி ஊராட்சி காட்டு குடியிருப்பு கிராமத்தில் தொடங்கி வைத்தார்.
ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், ஊராட்சித் தலைவர் புவனேஸ்வரி, முன்னாள் ஊராட்சித் தலைவர் சுரேஷ்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதற்கான மரக்கன்றுகள் ஊராட்சிகளில் உள்ள நர்சரிகளில் இருந்தும், நன்கொடையாளர்கள் மூலமும் பெறப்பட்டன. இதில் பூவரசு, புளி, புங்கன், வேம்பு, வாகை, மா, நெல்லி, சீதா உள்ளிட்ட மரக்கன்று கள் நடவு செய்து வருகின்றனர்.
இது குறித்து ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன் கூறியதாவது: கிராமங்களில் காலியாக உள்ள 10 சென்ட் முதல் 6 ஏக்கர் வரை மரக் கன்றுகளை நடவு செய்கிறோம். 6 லட்சம் மரக் கன்றுகளையும் 100 நாள் திட்ட பணியாளர்கள், தன்னார்வலர்கள் மூலம் நடவு செய்து பராமரிக்க உள்ளனர். ஓரிரு ஆண்டுகளில் குறுங்காடுகள் உருவானதும், சீமைக்கருவேல மரங்கள் வளர்வது தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment