Published : 03 Dec 2023 04:12 AM
Last Updated : 03 Dec 2023 04:12 AM

கடையநல்லூர் அருகே 16 ஆண்டுகளாக நிரம்பாத குளங்கள் - நீர்ப்பங்கீடு சிக்கலுக்கு தீர்வு எப்போது?

கலிங்கன்குளத்துக்கு நீராதமான முந்தல் அருவி.

தென்காசி: கண்மாய்க்கு நீர் வரும் கால்வாயை வழிமறித்து சாலை அமைத்ததால் 16 ஆண்டுகளாக விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடையநல்லூர் வட்டம், திருவேட்டநல்லூரில் உள்ள கலிங்கன்குளம் கண்மாய் நேரடி பாசனம் மூலம் 49.88 ஹெக்டேர் விவசாய நிலங்களும், பிரதான கால்வாய் மூலம் சங்கரன்குளம் மற்றும் கருவேலன்குளம் கண்மாய்கள் முலம் 53 ஹெக்டேர் நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள கலிங்கன்குளம் கண்மாய் மற்றும் அதற்கு அடுத்து உள்ள குளங்கள் 16 ஆண்டுகளாக நிரம்பாததால் 1,500-க்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு உள்ளது.

கலிங்கன்குளம் கண்மாயின் பிரதான நீர் ஆதாரமான முந்தல் அருவி நீர்ப்பங்கீடு தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பிறப்பித்த உத்தரவை பொதுப்பணித்துறை அதிகாரிகள் அமல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது குறித்து திருவேட்ட நல்லூரைச் சேர்ந்த ராமநாதன் என்பவர் ‘இந்து தமிழ் திசை’ உங்கள் குரல் தொலைபேசி எண்ணில் தொடர்புகொண்டு கூறும்போது, “திருவேட்டநல்லூர் கலிங்கன்குளம் கண்மாயின் பிரதான நீராதாரமாக சொக்கம்பட்டிக்கு அருகே மேற்குத் தொடர்ச்சி மலையில் உள்ள முந்தல் அருவி உள்ளது. இந்த அருவியில் இருந்து நீர் வரும் கால்வாயை அடைத்து சாலை அமைத்ததால் கலிங்கன்குளத்துக்கு நீர்வரத்து தடைபட்டது.

இது குறித்த புகாரில் கடந்த 2013-ம் ஆண்டு நீதிமன்ற உத்தரவுப்படி அப்போதைய திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் மற்றும் பொதுப் பணித்துறை செயற்பொறியாளர் ஆய்வு செய்து, கால்வாயை மறித்து அமைக்கப்பட்ட சாலையை அகற்ற உத்தரவிட்டனர். இந்த உத்தரவை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த உயர் நீதிமன்ற மதுரை கிளை, முந்தல் அருவி நீர் குறித்து ஆய்வு செய்து நீர்ப்பங்கீடு செய்யுமாறு தென்காசி மாவட்ட ஆட்சியருக்கு உத்தரவிட்டது.

அதன் பேரில் மாவட்ட ஆட்சியர் துரை.ரவிச்சந்திரன், இரு தரப்பு விவசாயிகளுடன் அமைதி கூட்டம் நடத்தினார். மேலும் முந்தல் அருவி, நீர்வரத்து ஓடை மற்றும் குளங்களை ஆய்வு செய்தார். வருவாய் ஆவணங்கள் மற்றும் பாசனப் பரப்பு அடிப்படையில் கலிங்கன்குளம் கண்மாய்க்கு 9.70 சதவீதமும், புன்னையாபுரம் மாடன்சேர்வை குளத்துக்கு 1 சதவீதமும் நீர் பங்கீடு செய்து கடந்த ஜூலை மாதம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டார்.

சமீபத்தில் பெய்த வடகிழக்கு பருவமழை காரணமாக முந்தல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தண்ணீர் முழுவதும் மாடன்சேர்வை குளத்துக்கு சென்று கண்மாய் நிரம்பி, அதன் உபரி நீர் சென்று மேலும் 3 கண்மாய்கள் மறுகால் பாய்ந்து வருகிறது. ஆனால் முந்தல் நீரை பிரதானமாக கொண்ட கலிங்கன்குளம் கண்மாய் நிரம்பாததால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இது குறித்து பொதுப் பணித்துறை செயற்பொறியாளரிடம் முறையிட்ட பின்னர், அதிகாரிகள் கால்வாயை திறக்க வந்தபோது போலீஸார் ஒத்துழைப்பு வழங்காததால் அதிகாரிகள் தண்ணீர் திறக்காமல் திரும்பிச் சென்றனர். கலிங்கன்குளம், அதற்கு அடுத்து உள்ள சங்கரன்குளம், கருவேலன்குளம் உள்ளிட்ட குளங்கள் கடந்த 16 ஆண்டுகளாக நிரம்பவில்லை.

இதனால் விவசாயம், குடிநீருக்கான நிலத்தடி நீராதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான மக்கள் வேலைவாய்ப்பின்றி கேரளாவுக்கு கூலி வேலைக்கு செல்கின்றனர். தண்ணீரை பகிர்ந்தளிக்க கால்வாயில் தடுப்பணை கட்ட வேண்டும். கால்வாயின் குறுக்கே பாலம் அமைக்காமல் அமைக்கப்பட்ட சாலையை உடைத்து, பாலம் அமைத்து நீர்வரத்தை ஏற்படுத்த வேண்டும். கால்வாய்க்கு நீர்வரத்தை உறுதிப் படுத்த மாவட்ட நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x