Published : 30 Nov 2023 05:53 PM
Last Updated : 30 Nov 2023 05:53 PM
புதுடெல்லி: 2023-ஆம் ஆண்டு தொடங்கியதிலிருந்து செப்டம்பர் வரை முதல் 9 மாதங்களுக்கு இந்தியா ஒவ்வொரு நாளுமே கடுமையான வானிலையை சந்தித்ததாக ஓர் ஆய்வறிக்கை தெரிவிக்கின்றது. இதன்மூலம் நாடு முழுவதும் கிட்டத்தட்ட 3,000 உயிரிழப்புகள் ஏற்பட்டதாகவும் அந்த அறிக்கை குறிப்பிடுகின்றது. சுயாதீன சிந்தனை மையமான சிஎஸ்இ (CSE - tank Centre for Science and Environment) புதன்கிழமை) வெளியிட்ட ஆய்வறிக்கையில் இத்தகவல் இடம்பெற்றுள்ளது. அந்த அறிக்கையின்படி ஜனவரி 2023 முதல் செப்டம்பர் 2023 வரையிலான காலகட்டத்தில் இந்தியாவில் சுமார் 86 சதவீத நாட்கள் கடுமையான வானிலை நிலவியுள்ளது.
மேலும், இந்த காலக்கட்டத்தில் 2,923 பேர் வானிலை சார்ந்த பாதிப்புகளால் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் 80,000 வீடுகள் சேதமடைந்துள்ளன. 92,000-க்கும் மேற்பட்ட கால்நடைகள், பிற விலங்கினங்கள் இறந்துள்ளன என சிஎஸ்இ அறிக்கை கூறுகின்றது. இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாகக் கூட இருக்கலாம் என்றும் அந்த ஆய்வு அமைப்பு கணிக்கின்றது. சில புள்ளிவிவரங்கள் தவறவிடப் பட்டிருக்கலாம் என்பதால் இவ்வாறாகக் கணிப்பதாகவும் அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இந்த ஆய்வறிக்கை குறித்து சிஎஸ்இ அமைப்பின் இயக்குநர் சுனிதா நரைன் கூறுகையில், “புவி வெப்பமயமாதல் அதிகரித்து வரும் சூழலில் 2023 ஜனவரி தொடங்கி செப்டம்பர் வரை இந்தியா சந்தித்துள்ள கடுமையான வானிலை நிலவரம் ஒரு புதிய ’அசாதாரண நிலை’ என்றால் அது மிகையாகாது. 'India 2023: An assessment of extreme weather events' இந்தியா 2023: கடுமையான வானிலை நிகழ்வுகள் பற்றிய மதிப்பீடு - அறிக்கையானது நாட்டில் மிகக்கடுமையான வானிலை நிகழ்வுகள் ஏற்பட்ட அதிர்வெண்கள் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாகும்” என்றார்.
இந்த ஆய்வறிக்கை உலகம் முழுவதும் இதுபோன்ற கடுமையான வானிலை அடிக்கடி ஏற்படுவதற்கான காரணங்களைப் பட்டியலிட்டுள்ளது. நிலக்கரி, எண்ணெய், எரிவாயு, புதைபடி எரிபொருள்கள் எரிக்கப்படுவதாலேயே இந்த கடுமையான வானிலை நிகழ்வுகள் நடப்பதாக ஆய்வாளர்கள் பட்டியலிடுகின்றனர்.
கடந்த 2015-ல் பாரிஸில் நடைபெற்ற மாநாட்டில், இந்த நூற்றாண்டில் உலகளாவிய வெப்பநிலை உயர்வை தொழில் புரட்சி காலத்துக்கு (1850-1900) முந்தைய அளவை விட 2 டிகிரி செல்சியஸுக்குக் குறைவாகக் கட்டுப்படுத்துவோம் என்ற உலக நாடுகள் ஒப்பந்தம் செய்தன. ஆனால், அதன்பிறகு வெளியான சூழலியல் ஆய்வறிக்கைகள் பலவும், உலக நாடுகள் புவி வெப்பமயமாதல் சராசரியை 1.5 டிகிரி என்றளவில் கட்டுப்படுத்தக் கூட முடியாமல் தவிப்பது உறுதியாகியுள்ளது. இந்த இலக்கை எட்ட உலக நாடுகள், புவியை வெப்பமடையச் செய்யும் பசுமைகுடில் வாயுக்களான கார்பன் டை ஆக்ஸைடு, மீத்தேன் ஆகியனவற்றின் வெளியேற்றத்தை 2030-க்குள் இப்போதைய அளவைவிட பாதியாகக் கட்டுப்படுத்த வேண்டும் என்று சிஎஸ்இஅறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவிலேயே மத்தியப் பிரதேச மாநிலத்தில் தான் கடுமையான வானிலை நிகழ்வுகள் நிகழ்ந்துள்ளதாகவும், அவற்றின் எண்ணிக்கை 138 என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும், வானிலை பாதிப்புகளால் அதிக உயிரிழப்பு பிஹாரில் (642) நிகழ்ந்துள்ளது. அடுத்தபடியாக இமாச்சலப் பிரதேசம் (365), உத்தரப் பிரதேசம் (341) உயிரிழப்புகள் என்றளவில் உள்ளது. விலங்கினங்கள் இழப்பு வகையில் பஞ்சாபில் அதிகபட்ச உயிரிழப்பு பதிவாகியுள்ளது. வீடுகள் சேதாரத்தை பொருத்த வகையில் இமாச்சலப் பிரதேசத்தில் பாதிப்பு மிகவும் அதிகம்.
தெற்கே.. கேரளா! தென்னிந்தியாவைப் பொறுத்தவரை கேராளவில் அதிகபட்சமான கடுமையான வானிலை நிகழ்வுகள் கொண்ட நாட்கள் பதிவாகியுள்ளன. அங்கே ஜனவரி தொடங்கி செப்டம்பர் வரை 67 நாட்கள் மோசமான வானிலை நிலவியதாகவும், அதன் தாக்கத்தில் 60 பேர் உயிரிழந்ததாகவும் அறிக்கை கூறுகின்றது. தெலங்கானாவில் அதிகபட்சமாக 62 ஆயிரம் ஹெக்டேர் நிலப்பரப்பில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. அதே மாநிலத்தில்தான் அதிகபட்சமாக 645 கால்நடை உயிரிழப்பும் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் கடுமையான வானிலை நிகழ்வுகளால் 11 ஆயிரம் வீடுகள் இடிந்து சேதமடைந்துள்ளன.
வட மேற்கு இந்தியா, உத்தரப் பிரதேசத்தில் 113 நாட்கள் கடுமையான வானிலை நிகழ்வுகள் நடந்துள்ளன. இமாச்சலப் பிரதேசம், பஞ்சாப், ஹரியாணா, ராஜஸ்தானிலும் குறிப்பிடத்தக்க பாதிப்புகள் பதிவாகியுள்ளன. கிழக்கு மற்றும் வடகிழக்குப் பிராந்தியங்களில், அசாமில் அதிகபட்ச மோசமான வானிலை நிகழ்வுகள் பதிவாகியுள்ளன. அவற்றின் எண்ணிக்கை 102 எனப் புள்ளிவிவரங்கள் கூறுகின்றன. இதனால் அசாமில் 159 கால்நடைகள் இறந்துள்ளன. 48000 ஹெக்டேரில் பயிரிடப்பட்ட பயிர்கள் சேதமடைந்துள்ளன. மற்றொரு வடகிழக்கு மாநிலமான நாகலாந்தில் 1900 வீடுகள் சேதமடைந்துள்ளன.
122 ஆண்டுகளில் இல்லாத அளவு - சிஎஸ்இ அறிக்கையின்படி 2023-ல் ஜனவரி மாதம் வழக்கத்தைவிட சற்றே வெப்பம் அதிகரித்த மாதமாக இருந்துள்ளது. பிப்ரவரி மாதத்தில் கடந்த 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெப்பம் அதிகரித்துள்ளது. இந்தியா 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வறட்சியான பிப்ரவரி மாதத்தையும், கடும் வறட்சியான ஆகஸ்ட் மாதத்தையும் சந்தித்துள்ளது என்றும் அறிக்கையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
புயல், மின்னல் பாதிப்புகளே அதிகம்: இந்தியாவில் இந்த 9 மாதங்களில் அடிக்கடி ஏற்பட்ட புயல், மின்னல்கள் போன்ற கடுமையான வானிலை நிகழ்வுகளாலேயே அதிக பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 273 நாட்களில் 176 சம்பவங்கள் நடந்துள்ளன. 711 பேர் பலியாகியுள்ளனர். இவற்றில் அதிகபட்சமான உயிரிழப்பு பிஹாரில் நிகழ்ந்துள்ளது. இருப்பினும் மிகவும் மோசமான பேரழிவுகள் மழை, வெள்ளம், நிலச்சரிவால் ஏற்பட்டுள்ளது. இந்தச் சம்பவங்களால் 1900 பேர் உயிரிழந்தனர். சிஎஸ்இ அறிக்கையில் இவ்வாறாகக் குறிப்பிடப்பட்டிருக்க மற்றொரு அறிக்கையில், 80 சதவீத இந்தியர்கள் காலநிலை மாற்ற பாதிப்புகள் உள்ள இடங்களிலேயே வசிக்கின்றனர் எனத் தெரிவித்துள்ளது.
ஐ.நா காலநிலை மாற்றம் 28-வது மாநாடு துபாயில் நடைபெறும் சூழலில் சிஎஸ்இ-ன் இந்த அறிக்கை வெளியாகி கவனம் பெற்றுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...