Published : 30 Nov 2023 05:56 AM
Last Updated : 30 Nov 2023 05:56 AM
ஓசூர்: ஓசூர் வனக் கோட்டத்தில் குவாரிகள், விளைநிலங்களால் யானைகளின் வலசைப் பாதை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, யானைகள் வலசைப் பாதையில் உள்ளஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டுமென வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
கர்நாடக மாநிலம் பன்னார்கட்டா தேசியப் பூங்கா மற்றும் காவிரி உயிரின சரணாலயத்திலிருந்து ஆண்டுதோறும் அக்டோபர், நவம்பர் மாதங்களில் 200-க்கும் மேற்பட்ட யானைகள் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் வனக்கோட்ட வனப்பகுதிக்கு வலசை வருகின்றன.
அவை தளி, ஜவளகிரி வனப்பகுதியில் நுழைந்து, தேன்கனிக்கோட்டை, நொகனூர், ஊடேதுர்கம், சானமாவு, செட்டிபள்ளி, மகாராஜாகடை வனப் பகுதி வழியாக ஆந்திர மாநிலம் கவுன்டன்யா சரணாலயம் மற்றும் வெங்கடேஷ்வரா சரணாலயம் வரை சென்று, மீண்டும் ஏப்ரல், மே மாதங்களில் ஓசூர் பகுதி வழியாக கர்நாடக வனப் பகுதிக்குச் செல்லும்.
ஆண்டாண்டு காலமாக யானைகள் வலசை வரும் பாதை தற்போது குவாரி மற்றும் விளை நிலங்களாக மாற்றப்பட்டு, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. இதனால், வலசை வரும் யானைகள் விளை நிலங்களில் உள்ள பயிர்களை உணவுக்காக சேதப்படுத்துவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது.
மேலும், யானைகள்-மனித மோதல் ஏற்பட்டு இரு தரப்பிலும் உயிரிழப்புகள் நேரிடுகின்றன. விளை நிலங்களுக்குள் யானைகள் நுழைவதை தடுக்க வனப் பகுதியில் கம்பி வேலிகள், சூரிய சக்திவேலி, யானை தாண்டா அகழிகளைவனத் துறையினர் அமைத்துள்ளனர். மேலும், வனப் பகுதியில் யானைகளுக்குத் தேவையான தண்ணீர் கிடைக்கச் செய்வதுடன், தீவனப் பயிர்கள் வளர்க்கப்படுகின்றன. எனினும், விளை நிலங்களை யானைகள் சேதப்படுத்துவது தொடர்கிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் பன்னார்கட்டாவிலிருந்து வந்த50-க்கும் மேற்பட்ட யானைகள் சானமாவு, நொகனூர் பகுதிகளில் முகாமிட்டுள்ளன. இதனால் கிராம மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். மேலும், உணவு தேடி விளைநிலங்களுக்குள் புகுந்த யானைகள், மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவங்களும் நேரிட்டுள்ளன. எனவே, யானைகளின் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் மற்றும் வன உயிரின ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வன உயிரின ஆர்வலர் பிரவீன்குமார் கூறியதாவது: ஆண்டுதோறும் நவம்பர்மாதத்தில் இனப் பெருக்கத்துக்காக வும், உணவுக்காகவும், குடகுமலை மற்றும் சத்தியமங்கலம் வனப் பகுதியிலிருந்து யானைகள் ஓசூர் வனப்ப குதிக்கு வருகின்றன. கடந்த 30 ஆண்டுகளில் யானைகளின் வலசைப் பாதை கிரானைட்குவாரிகள் மற்றும் விளை நிலங்களாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், உணவு தேடி வரும் யானைகள், வழித்தடத்தில் உள்ளவிளை நிலங்களை சேதப்படுத்துகின்றன.
தந்தங்களுக்காக ஆண் யானைகள் கொல்லப்பட்டதால், தற்போதுபெண் யானைகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. யானையின் சாணம் வழியாகச் செடிகள் வளர்ந்து, காடு உருவாகிறது. யானைகளால் மற்ற உயிரினங்களுக்கும் உணவு கிடைக்கிறது. மேற்குத் தொடர்ச்சி மலைகளில் அந்நிய மரங்களால் யானைகளுக்கு உணவு கிடைப்பதில்லை. கிழக்கு மலைத் தொடரில் ஓசூர் பகுதிகளில் பெரும்பாலான மலைகள் அழிக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் யானைகளை எதிரியாகப் பார்க்கின்றனர். உண்மையில், விவசாயிகளின் நண்பன் யானைதான். எனவே, யானைகள் வழித்தடத்தில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Loading comments...