Published : 29 Nov 2023 04:32 PM
Last Updated : 29 Nov 2023 04:32 PM
கோவை: பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்வை பாதிக்கும் பல காரணிகள் இருந்தாலும், அவற்றில் முதன்மையானது காலநிலை யாகும். பொதுவாக மழைக்கும், இடப்பெயர்வு இயக்கத்துக்கும் தொடர்பு இருப்பதைக் காண முடியும். கனமழையானது பட்டாம்பூச்சிகளின் வாழ்வியல் சூழலை பாதிக்கும் என்பதால் வடகிழக்குப் பருவமழை காலத்துக்கு முன்பாக மேற்குத்தொடர்ச்சி மலைகளுக்கும், தென்மேற்குப் பருவமழை தொடங்கும் முன்பாக கிழக்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கும் பட்டாம்பூச்சிகள் இடம்பெயர்கின்றன. நடப்பாண்டில் தமிழ்நாட்டின் கிழக்குத்தொடர்ச்சி மலைகளில் இருந்து, மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு பட்டாம் பூச்சிகள் இடம்பெயர்வது எதிர்பார்க் கப்பட்டதைவிட குறைவாக உள்ளது.
இதுதொடர்பாக இயற்கை மற்றும் பட்டாம்பூச்சி அமைப்பின் (டிஎன்பிஎஸ்) ஒருங் கிணைப்பாளர் அ.பாவேந்தன் கூறியதாவது: ‘ஃபுளூ டைகர்’, ‘டார்க் ஃபுளூ டைகர்’, ‘காமன் குரோ’, ‘டபுள்-பிராண்டட் குரோ’ ஆகிய வகை பட்டாம்பூச்சிகள் கிழக்குத் தொடர்ச்சி மலைகள் மற்றும் சமவெளிகளிலிருந்து வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பே இடம்பெயர்கின்றன. நடப்பாண்டில், தீவிர இடப்பெயர்வு மாதங்களான செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான காலகட்டத்தில் இந்த பட்டாம்பூச்சிகள் குறைவான அளவிலேயே இடம்பெயர்ந்துள்ளன.
வழக்கமாக இடப்பெயர்வு தென்படும் பல வழித்தடங்களில் இடப்பெயர்வு தென்படவில்லை. இருப்பினும், கோவையில் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளை அடையும் வழித்தடங்களான பொன்னூத்து மலைப்பகுதி, கல்லார் போன்ற இடங்களில் பட்டாம்பூச்சிகளின் இடப்பெயர்வு தென்பட்டது. திருப்பூர் மாவட்டம் வழியாக இவை இடம்பெயர்வது உறுதிசெய்யப் பட்டது. அண்மையில் நீலகிரியில் பெய்த கன மழை டைகர், குரோ வகை பட்டாம்பூச்சிகளை ஆனைகட்டி மலைகள் மற்றும் கேரளாவின் பாலக்காடு மாவட்டத்தை நோக்கி தள்ளியுள்ளது.
காரணம் என்ன? - சேலம், நாமக்கல் மாவட்ட பகுதிகளில் உற்பத்தியாகும் பட்டாம்பூச்சிகள்தான் இடம் பெயர்ந்து கோவை, நீலகிரி மலைப் பகுதிகளுக்கு வருகின்றன. நடப்பாண்டு அந்த பகுதிகளில் தென்மேற்கு பருவமழை இயல்பான அளவைவிட சற்று குறைவாகவே இருந்தது. வடகிழக்கு பருவமழையும் குறைவாகவே உள்ளது. அங்கு மழைப்பொழிவு அதிகம் இல்லாததால் பட்டாம்பூச்சிகள் அங்கிருந்து உற்பத்தியாவதும், மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகளுக்கு இடம்பெயர்வதும் குறைந்துள்ளது.
பொதுவாக, அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான மாதங்களில் 'காமன் ஆல்பட்ராஸ்' வகை பட்டாம்பூச்சிகள், ஆனைகட்டி மலைகள் முதல் நீலகிரி வரை உள்ள மலைகளின் தாழ்வான பகுதியிலிருந்து நடுத்தர உயரம் கொண்ட மலைப்பகுதி வரை அதிக எண்ணிக்கையில் வெளிப்படும். மேலும், இந்த பட்டாம்பூச்சிகள் சிறுமுகை, சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் நோக்கியும் செல்லும். நடப்பாண்டும் இதேபோன்ற இடப்பெயர்வை காண முடிந்தது.
இடப்பெயர்வை எப்படி கண்டறிவது? - இடம்பெயரும் ஒரு பட்டாம்பூச்சி, சுமார் 150 கி.மீ முதல் 250 கி.மீ வரை பயணிக்கும். சூரிய ஒளி நன்றாக உள்ள நேரமான காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மட்டுமே பெரும்பாலும் இடப்பெயர்வு நடைபெறுகிறது. இரவு நேரங்களில் ஓய்வெடுத்துவிட்டு மீண்டும் பட்டாம்பூச்சிகள் பறக்கத் தொடங்கிவிடும். அவ்வாறு இடம்பெயர்ந்து இங்கு வரும் பட்டாம்பூச்சிகள் திரும்பிச் செல்லாது. இவற்றின், அடுத்தடுத்த தலைமுறை பட்டாம்பூச்சிகளே ஏப்ரல்-மே மாதங்களில் கிழக்குத் தொடர்ச்சி மலைகளுக்கு திரும்பிச் செல்லும்.
எப்போதும் இங்கேயே இருக்கும் பட்டாம்பூச்சிகள் ஒரே திசையை நோக்கி பயணிக்காது. அவை இருக்குமிடத்துக்கு அருகிலேயே சுற்றிக்கொண்டிருக்கும். ஆனால், இடம்பெயரும் பட்டாம்பூச்சிகள் ஒரே திசையை நோக்கி, நேர்கோட்டில், சீரான வேகத்தில் பயணிக்கும். தரையில் இருந்து 3 மீட்டர் முதல் 15 மீட்டர் உயரத்தில் காற்றின் வேகத்தை பயன்படுத்தி அவை பறந்து செல்லும். இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment