Last Updated : 29 Nov, 2023 03:50 PM

 

Published : 29 Nov 2023 03:50 PM
Last Updated : 29 Nov 2023 03:50 PM

‘75,000 மரங்கள் நடுவதே எங்கள் இலக்கு’ - இது கள்ளக்குறிச்சி முன்முயற்சி!

மலட்டாற்று கரையோரம் விதைப்பந்துகளை நடும் பசுமைக் கிராமக் குழுவினர்.

கள்ளக்குறிச்சி: வீசப்பட்ட பனை விதைப்பந்து முளைத்து மரமாக வளர்கிறது.75 ஆயிரம் மரங்கள் நடுவதே எங்கள் இலக்கு பசுமை கிராமக் குழு சார்பில் திருவெண்ணெய்நல்லூர் கிராம சேவை மையத்தில் நடப்பட்டு வளர்ந்துள்ள மரம். மலட்டாற்று கரையோரம் விதைப்பந்துகளை நடும் பசுமைக் கிராமக் குழுவினர். மாறிவரும் காலச்சூழலுக்கேற்ப, ‘எல்லாமே எளிதாகக் கிடைக்க வேண்டும்’ என்ற நோக்கில் மக்கள் பயணிக்கத் தொடங்கி விட்டனர். மக்கள் தொகை பெருக்கத்தால், கட்டிடங்கள் அதிக அளவில் உருவாகி, அதனால் சமூகவெளிகளில் மரங்கள் வளர்ப்பது வெகுவாக குறைந்து வருகிறது. சாலை விரிவாக்கத்துக்காக மரங்கள் வெட்டப்படுகின்றன. தொழிற்கூட தேவைகளுக்காக மரங்கள் அழிக்கப்படுகின்றன. இது போன்ற செயல்கள் இயற்கையின் சமநிலையை குறைத்து வருகிறது. மரங்கள் இல்லாதது பல சுற்றுச்சூழல் சிக்கலை ஏற்படுத்துகிறது.

இவற்றுக்குத் தீர்வு, ‘கூடுதலாக மரங்களை நட்டு, வளர்ப்பது மட்டுமே!’ என்றாகிவிட்ட நிலையில், பல ஊர்களில் சமூக ஆர்வலர்கள் மரம் வளர்ப்பை ஒரு சேவை நோக்குடன் செய்து வருகின்றனர். அந்த அமைப்புகளில் ஒன்றாக திகழ்கிறது விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூரைச் சேர்ந்த பசுமைக் கிராமக் குழுவினர், கடந்த 6 ஆண்டுகளாக இந்த அமைப்பினர் மரங்கன்றுகளை நடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். பல்வேறு கிராமங்களுக்குச் சென்று அங்குள்ள ஏரி, குளம், வாய்க்கால் உள்ளிட்ட நீர்நிலைகளின் கரைகள், பேருந்து நிறுத்தம், ஊர் கூடும் பொது இடம், மைதானங்களின் ஓரம் என ஒரு கிராமத்தின் பொது இடங்களில் மரக்கன்றுகளை நட்டு வருகின்றனர்.

பசுமை கிராமக் குழு சார்பில் திருவெண்ணெய்நல்லூர் கிராம சேவை
மையத்தில் நடப்பட்டு வளர்ந்துள்ள மரம்.

இதுவரையில் 49,800 மரக்கன்றுகளை நட்டிருப்பதாக கூறும் இந்த அமைப்பினர், இதில் 46 ஆயிரம் மரக்கன்றுகள் வளர்ந்து வருவதாக தெரிவிக்கின்றனர். அவைகள் அனைத்தும் எந்தெந்த கிராமங்களில் எப்போது நடப்பட்டன; எந்த நிலையில் உள்ளன என்பதற்கான தங்கள் தகவல் தொகுப்பை காட்டுகின்றனர். நாம் அவர்களை பார்க்கச் சென்ற போது, இக்குழுவின் ஒருங்கிணைப்பாளர்களான சுரேஷ், ரமேஷ் செந்தில், ஹரி, முருகன் ஆகியோர் அரசூர் பகுதியைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளின் மாணவர்களுடன் சேர்ந்து தென்பெண்ணையாற்றின் கிளை ஆறான மலட்டாற்றின் கரைகளின் இருபுறங்களிலும், கோவையைச் சேர்ந்த தன்னார்வ நிறுவனம் ஒன்று வழங்கிய பனை விதைகள், மரக்கன்றுகள், விதைப்பந்துகளை நட்டுக் கொண்டிருந்தனர்.

வீசப்பட்ட பனை விதைப்பந்து முளைத்து மரமாக வளர்கிறது.

“பெரும்பாலும் இப்பணிகளுக்கு பள்ளி மாணவர்களைத் தேர்வு செய்கிறோம்; அவர்களிடையே மரங்களை வளர்ப்பதன் அவசியத்தை இதன் மூலம் எடுத்துரைக்கிறோம்” என்று இக்குழுவினர் தெரிவித்தனர். பசுமைக் கிராமக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கூறுகையில், “வெறும் புத்தகத்தை படித்து தேர்வு எழுதுவது மட்டுமே கல்வி அல்ல. சிறுவயதில் தெரிந்து கொள்ளும் பல நல்ல விஷயங்கள் மாணவர்களை நல்ல கல்வித்திறனுடன் ஆளுமைமிக்கவர்களாக மாற்றும். அதனாலேயே மாணவர்களுகு மரங்களின் அவசியத்தை எங்கள் குழுவின் மூலம் விளக்கி மரம் நட அழைத்துச் செல்கிறோம். விதைப்பந்துகளை எப்படி உருவாக்குவது என்று அவர்களுக்கு பயிற்சி அளிக்கிறோம்.

தற்போது மழைக்காலம் முடிவதற்குள் அரசூர் முதல் திருவெண்ணைநல்லூர் வரையிலான 8 கி.மீ தொலைவில் 25 ஆயிரம் விதைப்பந்துகளை நட திட்டமிட்டுள்ளோம். அதன் ஒரு பகுதி பணியைத்தான் தற்போது நீங்கள் பார்க்கிறீர்கள்” என்று தெரிவித்தார். “நடப்பாண்டுக்குள் 75 ஆயிரம் மரங்கள் நடுவதே தற்போதைய எங்கள் இலக்கு; டிசம்பர் மாத தொடக்கத்திலேயே 25 ஆயிரம் மரக்கன்றுகளை நட ஏற்பாடுகளை செய்து வருகிறோம்” என்றும் பசுமைக் கிராமக் குழுவினர் தெரிவிக்கின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x