Published : 20 Nov 2023 09:10 AM
Last Updated : 20 Nov 2023 09:10 AM
கோவை / பொள்ளாச்சி: கோவையில் பிடிபட்டு வால்பாறையில் விடுவிக்கப்பட்ட மக்னா யானை உயிரிழந்து கிடப்பது நேற்று கண்டறியப்பட்டது.
தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளிலுள்ள விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி வந்த 35 வயதுடைய மக்னா யானை மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டு, கோவை ஆனைமலை புலிகள் காப்பகத்துக்கு உட்பட்ட வரகளியாறு வனப்பகுதியில் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி விடுவிக்கப்பட்டது. வனத்தைவிட்டு கடந்த பிப்ரவரி 20-ம் தேதி இரவு வெளியேறிய அந்த யானை, பொள்ளாச்சி வனக் கோட்டத்தை கடந்து கோவை வனக்கோட்ட எல்லைக்குள் நுழைந்தது.
கோவை மாநகருக்குள் நுழைந்த யானை, பின்னர் பேரூர் நொய்யல் ஆற்றின் கரையோரம் உள்ள தனியார் கல்லூரி அருகே உள்ள ஆற்றுப் படுகைக்கு சென்றது. அங்கு யானையை கடந்த பிப்ரவரி 23-ம் தேதி மயக்க ஊசி செலுத்தி பிடித்த வனத்துறையினர், யானையை விடுவித்த பிறகு அதன் நடமாட்டத்தை கண்காணிக்கும் வகையில் கழுத்தில் ரேடியோ காலர் பொருத்தினர்.
பின்னர் மானாம்பள்ளி வனச்சரகத்தில் உள்ள மந்திரிமட்டம் பகுதியில் மக்னா யானை விடுவிக்கப்பட்டது. சில வாரங்களில் வனப்பகுதியில் இருந்து வெளியேறிய மக்னா யானை, சரளப்பதி கிராமப் பகுதியில் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் மக்னா யானை மீண்டும் பிடிக்கப்பட்டு புதிய ரேடியோ காலர் கருவி பொருத்தப்பட்டு, வால்பாறையை அடுத்துள்ள சின்ன கல்லாறு வனப் பகுதியில் விடுவிக்கப்பட்டது.
ரேடியோ காலர் கருவி மூலம் யானையின் நடமாட்டத்தை வனத்துறையின் தனிக்குழுவினர் கண்காணித்து வந்தனர். இந்நிலையில், அந்த யானை வில்லோனி பகுதியில் உள்ள நாகமலை சரகத்துக்குட்பட்ட வனப்பகுதியில் உயிரிழந்து கிடந்ததை நேற்று மதியம் வனப் பணியாளர்கள் கண்டறிந்தனர்.
இது தொடர்பாக வனத்துறையினர் கூறும் போது, “மலையில் பாறை சரிவில் இருந்து விழுந்து, யானை உயிரிழந்திருக்கலாம். யானையின் உடலை இன்று பிரேத பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. யானைக்கு பொருத்தப்பட்ட ரேடியோ காலர் வேலை செய்யவில்லை. கடந்த ஒரு மாதமாக ஓரிடத்தில் யானை இருப்பதாகவே காண்பித்தது. எனவே, எங்களுக்கு சந்தேகம் ஏற்படவில்லை. மேலும், ரேடியா காலரில் இருந்து வனத்தின் அனைத்து இடங்களிலும் சிக்னல் கிடைக்காது” என்றனர்.
கண்காணிப்பில் அலட்சியமா?: இது தொடர்பாக வன உயிரின ஆர்வலர்கள் கூறும்போது, ‘‘ரேடியோ காலரில் உள்ள ஜிபிஎஸ் உதவியுடன் யானையின் நடமாட்டத்தை அரைமணி நேரத்துக்கு ஒருமுறை கண்காணிக்க முடியும் எனவும், சுமார் 3 ஆண்டுகள் வரை சிக்னல்களை அனுப்பும் அளவுக்கு அதன் பேட்டரி திறன் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது. யானையின் உடலை பார்க்கும்போது அது உயிரிழந்து சில நாட்கள் ஆகியிருக்கும் என கருதுகிறோம். இந்நிலையில், ரேடியோ காலரில் இருந்து பல நாட்கள் சிக்னல் வராத நிலையில், யானையை கண்டறிய வனத்துறையினர் நடவடிக்கை எடுக்கவில்லை என்றே தெரிகிறது’’ என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment