Published : 19 Nov 2023 07:11 PM
Last Updated : 19 Nov 2023 07:11 PM

‘‘அனைத்து பறவைகளும் இயற்கையில் அழகானவை’’- அமெரிக்காவில் இருந்து மதுரை வந்த பெண் பூரிப்பு

ஓய்வு பெற்ற பேராசிரியை சாரா

மதுரை: ‘‘அனைத்து பறவைகளும் இயற்கையில் அழகானவை’’என்று தமிழக வாழ்விட பறவைகளைக் காண அமெரிக்காவில் இருந்து மதுரை வந்த ஓய்வு பெற்ற பேராசிரியை சாரா கூறியுள்ளார்.

தென்மேற்கு பருவமழை, அதனைத் தொடர்ந்து வடகிழக்குப் பருவமழையால் தமிழகத்தில் உள்ள ஏரி, குளம், ஆறு, கண்மாய், சதுப்புநிலங்கள் என்று நீர் நிறைந்து காணப்படுவதால் பறவைகளுக்கான இரையும் நீரில் பெருகி இருக்கும். குளிர்பிரதேச ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய ஆசிய நாடுகளில் உள்ள வெளிநாட்டுப் பறவைகள் ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் மாதம் முதல் தமிழகத்தில் மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு அதிக அளவு வரும். அதனால், பறவைகள் சரணாலயங்கள் மட்டுமில்லாது நீர்நிலைகளில் பறவைகள் திருவிழா களைகட்டத் தொடங்கும். இந்த காலக்கட்டத்தில் தமிழகத்தில் புத்தம் புதிய வெளிநாட்டு பறவைகளை காண ஆர்வமுள்ளவர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், குழந்தைகள் சரணாலயங்களுக்கும், நீர்நிலைகளுக்கும் செல்வார்கள்.

இந்நிலையில் அதற்கு மாறாக அமெரிக்காவில் சிகாகோ நகரில் இருந்து வந்த ஓய்வு பெற்ற பேராசிரியை சாரா என்பவர், மதுரையில் உள்ள நீர்நிலைகளில் வசிக்கும் தமிழக வாழ்விட பறவைகளை காண வந்துள்ளார். அவர், மதுரையில் உள்ள பறவையியல் ஆர்வலர் ரவீந்திரன் நடராஜன் என்பவர் உதவியுடன் மதுரையில் உள்ள நீர்நிலைகளில் வலசை வந்த பறவைகளையும், வாழ்விட பறவைகளும் கண்டு ரசித்தும், அதனை புகைப்படம் எடுத்தும் மகிழ்ந்தார்.

இதுகுறித்து ரவீந்திரன் கூறுகையில், ‘‘4 நாட்கள் ராமநாதபுரம் கள ஆய்வை முடித்து வீட்டில் வந்த இடத்தில் ஒரு அழைப்பு. ஆங்கிலத்தில் நான் சாரா, ஓய்வு பெற்ற பேராசிரியை, சிக்காகோவில் இருந்து மதுரை வந்துள்ளேன். பறவையாளர் ரவீந்திரன் இருக்கிறாரா? என்றார். நான் உங்கள் ஊர் பறவைகளை பார்க்க வேண்டும் என்றார். அவரது வயது வயது 70. பணி ஓய்வு பெற்று அரசு தரும் பென்சனில் அவர் வாழ்க்கையை ஓட்டி வருகிறார். அவர், தன்னுனடைய 19 வயதில் சம்பாதிக்க துவங்கிய காலம் முதல் ஆண்டுக்கு ஒரு நாடு அல்லது இரண்டு நாடுகள் என இலக்கு வைத்து பயணம் செய்து வருகிறார்.

உலக வரைபடத்தில் உள்ள பலநாடுகளுக்குச் சென்றுள்ளார். அனைத்து பறவைகளும் இயற்கையில் அழகானவை( All birds are beautiful in nature) என்று கூறுகிறார். தென் அமெரிக்க நாடுகள் பல, பறவைகளைக் காண சிறந்த இடமாக உள்ளன. பல சிறிய சிறிய தீவுகளை குறிப்பிட்டு உன் வாழ்நாளில் ஒரு நாளாவது அங்கு சென்று வர வேண்டும் என்றார். தற்போது தொடர் மழையின் காரணமாக நமது பறவைகள் பெரிதாக கண்ணில் படவில்லை. ஆனாலும் நம்ம ஊர் அன்றில்கள், குக்குறுவான், வேதிவால்குருவி, பச்சை சிட்டு என தேடி, ஓடி பார்த்தபடி தனது கேமராவில் படம் எடுத்து மகிழ்ந்தார். அவரை பார்க்கும்போது பயணம் செல்ல வயது எதற்கும் தடையல்ல என்பதை கற்றுக் கொண்டேன், ’’ என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x