Published : 18 Nov 2023 02:49 PM
Last Updated : 18 Nov 2023 02:49 PM
மாடம்பாக்கம்: தாம்பரம் மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமான மாடம்பாக்கம் ஏரியில் கழிவுநீர் கலப்பதை தடுக்க நீர்வளத் துறை, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும். கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத் தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தாம்பரம் மாநகராட்சியின் குடிநீர் ஆதாரமான மாடம்பாக்கம் ஏரி சுமார் 400 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இந்த ஏரியை நம்பி சுமார் 200 ஏக்கரில் விவசாயமும் நடந்து வருகிறது. இந்த ஏரியில் இருந்து சிட்லபாக்கம், மாடம்பாக்கம் பகுதிகளுக்கு ரூ.3 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆனால், ஏரியில் 10-க்கும் மேற்பட்ட இடங்களில் கழிவுநீர் கலப்பதால், ஏரி நீர் தற்போது மாசடைந்து வருகிறது. இது மட்டுமின்றி, ஏரியின் மேற்பரப்பு முழுவதும் கண்ணுக்கு எட்டிய தூரம் வரை ஆகாயத் தாமரை செடிகள் படர்ந்துள்ளன. தாம்பரம் மாநகராட்சி சார்பில் மாடம்பாக்கம் ஏரியில் உள்ள 5 கிணறுகளில் இருந்து, சிட்லபாக்கம், மாடம்பாக்கத்தில் உள்ள சுமார் 3,300 வீடுகளுக்கு தினமும் 1.5 மில்லியன் லிட்டர் குடிநீர் விநியோகம் செய்யப்படுகிறது. இந்த குடிநீர் தரமற்று, பயன்படுத்த முடியாத அளவுக்கு இருப்பதாக மக்கள் தொடர்ந்து குற்றம் சாட்டினர்.
இதையடுத்து, மாநகராட்சி சார்பில் குடிநீர் மாதிரிகள் எடுக்கப்பட்டு, குடிநீர் வடிகால் வாரிய ஆய்வகத்தில் பகுப்பாய்வு செய்யப்பட்டது. இதில்,இந்த குடிநீர் குடிப்பதற்கு ஏற்றதாக உள்ளது என்று சான்று அளிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தரப்பில் அறிக்கை அளிக்கப்பட்டுள்ளது. ஆனாலும், மக்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. பரிசோதனைக்கு எந்த நீரை மாநகராட்சி நிர்வாகம் பயன்படுத்தியது, சம்பந்தப்பட்ட துறையினர் வந்து நேரில் ஆய்வு செய்யாதது ஏன் என்பது உட்பட பல்வேறு கேள்விகள், சந்தேகங்களை பொதுமக்கள் எழுப்புகின்றனர். ஏரியில் இருந்து சேகரிக்கப்பட்ட தண்ணீர் மாதிரிகளில் கோலிஃபார்ம் பாக்டீரியா இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து அப்பகுதியினர் கூறியதாவது: சமூக ஆர்வலர் பதுவைஎஸ்.நடராசன்: பாதாள சாக்கடை திட்டம்செயல்படுத்தப்படும்போது ஏரியில் கழிவுநீர் கலப்பது தடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர். பாதாள சாக்கடை திட்டம் செயல்பாட்டுக்கு வர பல ஆண்டுகள் ஆகும். அதுவரை கழிவுநீரை கலக்க அனுமதிக்க முடியுமா. தவிர, மாசடைந்த நீரை அருந்தும் மக்கள், மர்மக் காய்ச்சலுக்கும், பல்வேறு தொற்று நோய்களுக்கும் ஆளாகி வருகின்றனர். எனவே, சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே உடனடி தீர்வாக அமையும். ஆகாயத் தாமரையால் நீர்வாழ் உயிரினங்கள் பாதிக்கப்படக்கூடும் என்பதால், ஆகாயத் தாமரையை அகற்ற வேண்டும்.
சிட்லபாக்கத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் லஷ்மி கிருஷ்ணகுமார்: ஏரிகளை பாதுகாக்கும் முயற்சியில் மக்கள் மட்டுமின்றி, நீர்வள ஆதாரத் துறை, உள்ளாட்சி அமைப்புகள், மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவையும் அலட்சியமாக இருப்பதால் பல ஏரிகளில் கழிவுநீர் கலந்து, ஏரி நீர் மாசடைகிறது. இதற்கு மாடம்பாக்கம் ஏரியே உதாரணம். மேலும் இந்த ஏரி பகுதிகளில் குப்பைகள், கட்டிட கழிவுகள், இறைச்சி கழிவுகளும் கொட்டப்படுகின்றன. நீர் ஆதாரங்களை பாதுகாத்துபராமரிப்பதில் தொலைநோக்கு திட்டங்கள் எதுவும் செயல்படுத்தப்படாததால், நீர்நிலைகள் மாசடைந்து பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருகிறோம்.
எனவே, மாவட்ட நிர்வாகம் இதில் தனி கவனம் செலுத்தி மாடம்பாக்கம் ஏரியை பாதுகாக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரியில் குடிநீர் திட்டத்தை செயல்படுத்தியபோதே கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைத்திருக்க வேண்டும். ஏரிநீரை ஆய்வு செய்ததில், மாநகராட்சி நிர்வாகம் வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட்டிருக்க வேண்டும். மக்களின் நியாயமான அச்சத்தை போக்குவது மாநகராட்சி, மாவட்ட நிர்வாகத்தின் கடமை. சுத்திகரிப்பு நிலையம் அமைப்பதே இதற்கு நிரந்தர தீர்வாக அமையும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT