Published : 17 Nov 2023 08:30 AM
Last Updated : 17 Nov 2023 08:30 AM
ராமேசுவரம்: மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம், இந்திய கடல் பகுதியில் 2 புதிய சீலா மீன் வகைகளை கண்டுபிடித்துள்ளது.
ராமேசுவரம் அருகே மரைக்காயர்பட்டி னத்தில் மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் செயல்படுகிறது. நாடு முழுவதும் 4 மண்டல மையங்கள், 7 மண்டல நிலையங்கள், 2 கள மையங்களை கொண்ட இந்த ஆராய்ச்சி மையத்தின் தலைமையகம் தற்போது கொச்சியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஆராய்ச்சி நிலையம், கடல் மீன் வளத்தை அதிகரிப்பதற்கான செயல்களில் ஈடுபட்டு வருகிறது.
தற்போது கொச்சியில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தின் முதன்மை விஞ்ஞானி இ.எம். அப்துஸ் சமது தலைமையிலான குழுவினர் இந்திய கடல் பகுதியில் 2 புதிய சீலா மீன் வகைகளை கண்டுபிடித்துள்ளனர். சீலா மீன்கள் வஞ்சிரம், நெய் மீன் என்ற பெயர்களிலும் அழைக்கப்படுகின்றன. இந்திய கடல் பகுதியில் நான்கு விதமான சீலா மீன்கள் காணப்படுகின்றன. இதை நெட்டையன் சீலா, கட்டையன் சீலா, நுனா சீலா, லோப்பு சீலா என்று அழைக்கின்றனர்.
இதில் முதல் 2 வகைகள்தான் அதிக அளவில் மீனவர்களால் பிடிக்கப்படுகின்றன. பசிபிக் பெருங்கடலில் காணப்படும் உடலில் புள்ளிகளைக் கொண்ட சீலா மீன்கள் (ஸ்பாட்டட் சீர் பிஷ்) ஒற்றை இனமாகக் கருதப்பட்டு வந்த நிலையில், தனித்துவமான புள்ளிகளைக் கொண்ட 2 புதிய சீலா மீன் இனங்களை கொச்சியில் உள்ள மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் கண்டுபிடித்துள்ளது. இதன் மூலம் இந்திய கடல் பகுதியில் சீலா மீன் இனங்களின் எண்ணிக்கை நான்கிலிருந்து ஆறாக உயர்ந்துள்ளது.
புதிதாக கண்டறியப்பட்ட சீலா மீன்களின் ஆங்கிலப் பெயர், ‘அரேபியன் ஸ்பாரோ சீர் பிஷ், ரஷ்ஷல்ஸ் ஸ்பாட்டட் சீர் பிஷ்’ என்பதாகும். இந்த மீன்கள் கேரள கடல் பகுதியிலிருந்து அரேபிய வளைகுடா வரையிலும், நாகப்பட்டினம் கடலில் இருந்து அந்தமான் கடல் வரையிலுமான வங்காள விரிகுடா பகுதியிலும் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த கண்டுபிடிப்புகள் கடல் பல்லுயிர் பற்றிய புரிதலுக்கு பங்களிப்பதோடு மட்டுமின்றி, மீன்வளத் துறைக்கு நன்மை பயக்கும் என மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையம் தெரிவித்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT