Published : 15 Nov 2023 05:30 PM
Last Updated : 15 Nov 2023 05:30 PM

இந்தியப் பறவைகள் எதிர்கொள்ளும் 8 முக்கிய அபாயங்கள்: நிலை கணக்கெடுப்பு அறிக்கை எச்சரிக்கை

பனங்காடை கணக்கெடுப்பில் ஈடுபட்ட பேராசிரியர் ராஜேஷ் மற்றும் அவரது குழுவினர்.

மதுரை: உலகம் முழுவதும் காடுகளும், மரங்கள் அடர்த்தியும் குறைவதால் பறவைகளும், மற்ற உயிரினங்களும் குறைந்து வருகின்றன. இதைத் தடுக்கவும், சூழல் மண்டலங்களை மீளமைக்கவும், இயற்கை வளங்கள் குன்றாத வகையில் பேணிக் காக்கவும் மத்திய அரசு பல இலக்குகளை நிர்ணயித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக நாட்டில் பல்லுயிர் பன்மயம் எந்த நிலையில் உள்ளது என்பது குறித்து அவ்வப்போது மதிப்பீடு செய்வதற்காக பறவைகள், வனவிலங்குகள் கணக்கெடுக்கப்படுகின்றன.

இதில் 13 அமைப்புகள் ஒருங்கிணைந்து நடத்திய இந்தியப் பறவைகளின் பாதுகாப்பு நிலை குறித்த முதல் முயற்சியாக 'இந்தியப் பறவைகளின் நிலை' அறிக்கை-2020-ல் வெளியானது. இந்த அறிக்கையில், அதிகப் பாதுகாப்பு முக்கியத்துவம் வாய்ந்த, 101 வகையான பறவைகள் இருப்பது கண்டறியப்பட்டது. இந்நிலையில் 3 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியப் பறவைகளின் நிலை-2023’ அறிக்கை கடந்த ஆகஸ்ட்டில் வெளியானது.

இதுகுறித்து பறவைகள் ஆர்வலரும், மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை பேராசிரியருமான ராஜேஷ் கூறியதாவது: அரசு மற்றும் அரசு சாரா ஆராய்ச்சி நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் என 13 அமைப்புகளின் கூட்டு முயற்சியாக இந்த அறிக்கை வெளியாகியுள்ளது. பறவை ஆர்வலர்களின் வாயிலாக கிடைக்கப்பெற்ற தரவுகளே இந்த அறிக்கையின் அடிப்படை ஆகும். பறவைகளையும், இயற்கையையும் பாதுகாக்க இதுபோன்றதொரு ஒருங்கிணைந்த பங்களிப்பு இன்றியமையாததாகும். அறிக்கையின் முக்கிய அம்சமாக நாட்டில் 1350 பறவை சிற்றினங்கள் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.

இதுதவிர, நாடு முழுவதும் சுமார் 30,000 பறவை ஆர்வலர்கள் பறவைகளைக் கணக்கெடுப்பு செய்து ‘இபேர்டு’ என்ற தளத்தில்பதிவேற்றம் செய்துள்ளனர். 217 வகையான பறவைகளின் எண்ணிக்கை கடந்த 8ஆண்டுகளாக ஏற்றத்தாழ்வு ஏதுமின்றியோ அல்லது உயர்ந்தோ இருப்பது தெரியவந்துள்ளது. 2020 அறிக்கையின்படி 101 பறவைகளுக்கு இருந்த பாதுகாப்பு, 2023 அறிக்கையின்படி 178 வகையான பறவைகளுக்கு அதிக பாதுகாப்பு முக்கியத்துவம் தேவைப்படுகிறது. 14 வகையான பறவைகளின் (பனங்காடை உட்பட) சிவப்புப் பட்டியல் காப்பு நிலைக் குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

குயில், மயில் எண்ணிக்கை அதிகம்: பனங்காடை கடந்த 12 ஆண்டுகளில் 30 சதவீதம் குறைந்துள்ளதாக அறிக்கை சொல்கிறது. குயில்களின் எண்ணிக்கை கடந்த 30 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 10 ஆண்டுகளில் மயில்களின் எண்ணிக்கை 150 சதவீதம் அதிகரித்துள்ளது. 39 சதவீத பறவை சிற்றினங்கள் குறைந்துள்ளதை இந்தக் கணக்கெடுப்பு தெரிவிக்கிறது. ஆறுகள், கடற்கரைகள், வெட்டவெளி வாழ்விடங்களைச் சார்ந்திருக்கும் பறவைகள் எண்ணிக்கையில் குறைந்துள்ளன.

கழுகு முதலான இரைகொல்லிப் பறவைகள், வலசை வரும் கரையோரப் பறவைகள், வாத்துகள் யாவும் எண்ணிக்கையில் சரிந்துள்ளன. இந்தியப் பறவைகளுக்கு 8 முக்கியமான அபாயங்கள் இருப்பது தொகுக்கப்பட்டுள்ளது. நகரமயமாக்கல், சுற்றுப்புறம் மற்றும் காடு அழிப்பு, நிலப் பயன்பாடு மாற்றம், நோய்கள், சட்டவிரோதமாக பறவைகளை பிடித்து விற்பது, வேட்டையாடுதல், மாசு, காலநிலை மாறுபாடு ஆகிய 8 காரணங்களால் எண்ணிக்கை குறைந்துள்ளது.

பறவைகள் கண்காணிப்பின் முக்கியத்துவத்தை நாட்டில் நடைபெறும் பல்வேறு ஆய்வுகள் உணர்த்துகின்றன. ஒருங்கிணைந்த பாதுகாப்பு முன்னுரிமை அதிகம்அளிக்கப்பட வேண்டிய பறவைகளை முன்னிலைப்படுத்துவதுடன், புறக்கணிக்கப்பட்ட வாழ்விடங்கள் (வெட்டவெளிப் புல்வெளிகள் போன்ற) எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும், இவை சார்ந்த ஆராய்ச்சியையும், கண்காணிப்பையும் ஊக்குவிக்கும் வகையில் இருக்க வேண்டும். இந்த அறிக்கையின்படி பெரும்பாலான பறவைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது தெரிய வருகிறது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x