Last Updated : 14 Nov, 2023 05:56 PM

 

Published : 14 Nov 2023 05:56 PM
Last Updated : 14 Nov 2023 05:56 PM

பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்கள்: இனிப்பு வழங்கி சிவகங்கை வன அலுவலர் பாராட்டு

கொள்ளுக்குடிப்பட்டியில் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டிய சிவகங்கை மாவட்ட வன அலுவலர் பிரபா.

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே பறவைகளுக்காக தீபாவளிக்கு பட்டாசு வெடிக்காத கிராம மக்களை, மாவட்ட வன அலுவலர் இனிப்பு வழங்கி பாராட்டினார்.

திருப்பத்தூர் அருகே கொள்ளுக்குடிப்பட்டியில் 38 ஏக்கரில் வேட்டங்குடி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ளது. இங்குள்ள தட்ப வெப்ப நிலைக்காகவும், இனப் பெருக்கத்துக்காகவும் ஆண்டுதோறும் செப்டம்பர், அக்டோபர் மாதங்களிலிருந்து வெளிநாடுகள், வெளிமாநிலங்களில் இருந்து அதிகளவில் பறவைகள் வருகின்றன. கருப்பு அரிவாள் மூக்கன், மஞ்சள்மூக்கு நாரை, கரடிவாயன், பாம்புதாரா உள்ளிட்ட வகைகளைச் சேர்ந்த 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பறவைகள் வருகின்றன. அவை, இங்குள்ள மரங்களில் கூடுகட்டி, முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்கின்றன. பின்னர் குஞ்சுகள் பொறித்து, கோடைக்காலத்தில் குஞ்சுகளுடன் தங்களது பகுதிகளுக்குச் சென்றுவிடுகின்றன.

இந்நிலையில், வேட்டங்குடி சரணாலயத்தில் தங்கும் பறவைகளுக்கு தொந்தரவு ஏற்படுத்தாத வகையில், அப்பகுதி மக்கள் 1972-ம் ஆண்டு முதல் கடந்த 51 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகை தினத்தில் பட்டாசுகள் வெடிப்பதில்லை. அதேபோல், கோயில் திருவிழாக்கள், திருமணம் உள்ளிட்ட விசேஷ நாட்களிலும் பட்டாசுகள் வெடிப்பதில்லை. பறவைகளுக்காக இக்கிராம மக்கள் தங்களது மகிழ்ச்சியை விட்டுத் தருகின்றனர். இதை கவுரவிக்கும் வகையில், ஆண்டுதோறும் வனத்துறையினர் கிராம மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டி வருகின்றனர்.

அதன்படி, சிவகங்கை மாவட்ட வன அலுவலர் பிரபா, அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி பாராட்டினார். அப்போது, கண்மாய் மடை, பூங்கா ஆகியவற்றை சீரமைக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர். உடனடியாக சீரமைத்து தருவதாக, மாவட்ட வன அலுவலர் உறுதியளித்தார்.கொள்ளுக்குடிப்பட்டியில் பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராம மக்களுக்கு இனிப்பு வழங்கி பாராட்டிய சிவகங்கை மாவட்ட வன அலுவலர் பிரபா.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x