Published : 14 Nov 2023 11:36 AM
Last Updated : 14 Nov 2023 11:36 AM
கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அருகே கடந்த 20 ஆண்டுகளாக வவ்வால்களைப் பாதுகாக்கக் கிராம மக்கள் பட்டாசு வெடிக்காமல் தீபாவளியைக் கொண்டாடி மகிழ்கின்றனர். போச்சம்பள்ளி அருகேயுள்ள சென்றாம்பட்டி கிராமத்தில், 150-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இக்கிராமத்தில் உள்ள தோட்டத்தில் உள்ள 2 புளியமரங்களில் 100-க்கும் மேற்பட்ட வவ்வால்கள் கூட்டமாக உள்ளன. இந்த வவ்வால்களைப் பாதுகாக்கும் வகையில் கடந்த 20 ஆண்டுகளாக கிராம மக்கள் தீபாவளி மற்றும் கிராமத்தில் நடைபெறும் எந்த நிகழ்வுகளிலும் பட்டாசு வெடிப்பதை தவிர்த்து வருகின்றனர்.
இதுதொடர்பாக கிராம மக்கள் சிலர் கூறியதாவது: விவசாய தோட்டத்தில் உள்ள புளியமரத்தில் வவ்வால்கள் கூட்டம், கூட்டமாக உள்ளன. கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்னர் பட்டாசுகள் வெடித்த போது, வவ்வால்கள் கூட்டம் திடீரென மாயமாகி விட்டன. இதனால், அதிர்ச்சி அடைந்த நாங்கள் பல்வேறு இடங்களுக்குச் சென்று தேடியும் கிடைக்கவில்லை. 3 மாதங்களுக்குப் பின்னர் வீரமலை கிராமத்தில் வவ்வால்கள் கூட்டம் இருப்பதை அறிந்து, அங்கு நாங்கள் மேள தாளங்களுடன் சென்று சிறப்பு பூஜை செய்தோம்.
தொடர்ந்து, 3 நாட்களுக்கு பின்னர் வவ்வால்கள் அனைத்தும் கிராமத்துக்கு வந்தன. இதையடுத்து, மகிழ்ச்சியடைந்த நாங்கள் அன்றிலிருந்து இன்று வரை, கிராமத்தில் நிகழும் சுக, துக்க நிகழ்ச்சிகள் மற்றும் தீபாவளி பண்டிகை உள்ளிட்ட எந்த திருவிழாக்களிலும் பட்டாசுகளை வெடிப்பதில்லை. இதேபோல, வவ்வால்களை வேட்டையாட வருபவர்களையும், தடுத்து எச்சரித்து அனுப்பி வைக்கிறோம். மேலும், வவ்வால்கள் இருக்கும் இரு புளியமரங்களில் காய்க்கும் புளியை கூட அந்த மரத்தின் உரிமையாளர் பறிப்பதில்லை. இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT