Published : 11 Nov 2023 04:46 PM
Last Updated : 11 Nov 2023 04:46 PM
சேலம்: சேலம் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை பெய்து வரும் நிலையில், நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி, தூர் வாரி, நீர்நிலைகளில் உள்ள கருவேல மரங்களை அகற்ற மாவட்ட நிர்வாகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என இயற்கை ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர். சேலம் மாவட்டத்தில் நீர்வளத் துறையின் கட்டுப்பாட்டில் 88 ஏரிகள் உள்ளன. மாவட்டத்தின் முக்கிய ஆறுகளான சரபங்கா நதி, வசிஷ்ட நதி, ஸ்வேத நதியும், சேலம் மாநகரில் திருமணிமுத்தாறும் உள்ளன. மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான ஏரிகள் நீரின்றியும், குறைந்தளவு தண்ணீரைக் கொண்டும் உள்ளன.
வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் அனைத்து ஏரிகளுக்கும் மழை நீர் வந்து சேரும் வகையில் நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றி துரித நடவடிக்கை எடுப்பதன் மூலம் மழைக்கால நீரை அறுவடை செய்ய முடியும். இதன்மூலம் நிலத்தடி நீர்மட்டம் உயரும். இதுகுறித்து இயற்கை ஆர்வலர்கள் கூறியதாவது: சேர்வராயன் மலைத்தொடர் கடல் மட்டத்தில் இருந்து 1,515 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறது. கிழக்கு மலைத்தொடரான சேர்வராயன் மலை ஒரு காலத்தில் பல நதிகளின் நீராதாரத்துக்கான உற்பத்தி கேந்திரமாக விளங்கி வந்தது.
வான் மழை பொழியும் சேர்வராயன் மலையில் இருந்து வழிந்தோடி வரும் மழை நீரானது சேலம் அடிவாரத்தில் உள்ள மன்னார்பாளையம், கருப்பூர், வாழப்பாடி மூன்று பிரதான வழிகளில் வழிந்தோடி சங்கிலித் தொடராகச் சென்று ஏரிகளை நிரப்பியது. மன்னார்பாளையம் வழியாக வரும் மழை நீரானது, திருமணிமுத்தாறு கால்வாய்கள் மூலம் கன்னங்குறிச்சி - புது ஏரி, மூக்கனேரி, பேராந்தி ஏரி, (அச்சுவான் ஏரி தற்போது புதிய பேருந்து நிலையமாக மாறியுள்ளது), பள்ளப்பட்டி ஏரி, தாதுபாய் குட்டை, பஞ்சந்தாங்கி ஏரி, பச்சைப்பட்டி வெள்ளக்குட்டை ஏரி, குமரகிரி ஏரி, எருமாபாளையம் ஏரி, (சீலாவரி ஏரி தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு மனைகளாக மாறியுள்ளது) நகரமலை இஸ்மான்கான் ஏரி உள்ளிட்ட ஏரிகளை நிறைத்து வந்தது.
வாழப்பாடி வழியாக வழிந்தோடிய தண்ணீர் வலசையூர் தொட்டில் ஏரி, ஆணைவாரி முட்டல் ஏரி, வெள்ளாளபுரம் ஏரி, நெய்க்காரன்ப்பட்டி ஏரி, செந்தாரப்பட்டி ஏரிகளை நிறைத்தது. கருப்பூர் வழியாக வழிந்தோடிய தண்ணீர் காமலாபுரம் பெரிய ஏரி, டேனிஷ்பேட்டை செட்டி ஏரி, காடையாம்பட்டி குள்ளமுடையான் ஏரி, குருக்குப்பட்டி ஏரி, கோட்டமேட்டுப்பட்டி பூலா ஏரி ஆகியவற்றை நிறைத்தது. ஆனால், தற்போது ஏரிகள் நிரம்புவது என்பது அரிதான ஒன்றாக மாறிவிட்டது. இதற்கு, நீர் வழித்தட ஆக்கிரமிப்புகள் பிரதான காரணமாக உள்ளது. நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் ஆட்சியாளர்களும், அரசியல்வாதிகளும் ஒரு சேர மவுனம் காப்பதன் பின்னணியில் மணல் மற்றும் மண் திருட்டு முக்கிய அங்கம் வகிக்கிறது.
ஏரிகளில் நீர் நிரம்பிவிட்டால் மணலை அள்ள முடியாமல் போகும் என்பதால் அலட்சியம் காட்டி வருகின்றனர். நீர்வரத்து இல்லாததால் நிலத்தடி நீர் மட்டம் உயராமல் விவசாயப் பணிகளும் பெரும் பின்னடவை சந்தித்து வருகின்றன. ஆக்கிரமிப்புகளுடன் நீர் வழித்தட கால்வாய்கள் சரிவர தூர்வாரப்படாததும், ஏரிகளில் சீமைக் கருவேல மரங்கள் நிறைந்திருப்பதும் முக்கிய பிரச்சினையாக உள்ளது. எனவே, சேலம் மாவட்டத்தில் நீர்நிலைகளுக்கு வரும் நீர் வழித்தட ஆக்கிரமிப்புகளையும், தூர் வாருதல், சீமை கருவேல மரங்களை அகற்றுதல் உள்ளிட்ட பிரச்சினைகளையும் களைந்திட அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அந்தந்த பகுதி வட்டாட்சியர்கள் ஆய்வு மேற்கொண்டு உண்மை நிலையை மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்போது தான், வட கிழக்குப் பருவமழைக் காலத்திலாவது அனைத்து ஏரிகளும் நிரம்பி விவசாயம் செழிக்கும். விவசாயிகளும், அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறுவர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT